Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 லட்சம்... 7 லட்சம்...! அதிர வைக்கும் உள்ளாட்சி ஏலம்! (அதிர்ச்சி ஆடியோ)

 

ஆவடி பெருநகராட்சியில் கவுன்சிலர் சீட்டுக்காக 5 லட்சம் ரூபாயை அ.தி.மு.க நிர்வாகி பெற்றுள்ளார். ஆனால் பணம் கொடுத்தவருக்கு சீட் வழங்கப்படவில்லை. பணம் வாங்கிய நிர்வாகியும், பணம் கொடுத்தவரும் பேசிய ஆடியோ வெளியாகி இருப்பது அ.தி.மு.கவினரை மட்டுமல்ல பொது மக்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் அதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.

 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சீட் கிடைத்த கட்சியினர் உற்சாகமாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், முதலில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது அ.தி.மு.க. அந்தக்கட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிட விருப்பமனுதாக்கல் செய்தவர்களிடம் சில நிர்வாகிகள் கல்லா கட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதை இந்த ஆடியோ நிரூபணம் செய்துள்ளது.

 ஆவடி பெருநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஆவடி நகரம், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகள் இந்த நகராட்சியில் உள்ளன. தற்போது அ.தி.மு.க, தி.மு.கவுக்கு தலா 18 இடங்களும், ம.தி.மு.கவுக்கு 3 இடங்களும், தே.மு.தி.க., காங்கிரஸ், சுயேட்சை ஆகியவற்றுக்கு தலா 2 இடங்களும், பா.ம.க, புரட்சி பாரதம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடங்களும் உள்ளன.

 இந்நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க 15 சிட்டிங் கவுன்சிலர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. மீதமுள்ள 33 வார்டுகளில் போட்டியிட புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்களில் சிலரிடமிருந்து சீட்டுக்காக நிர்வாகிகள் பேரம் பேசி பணமும் வாங்கியுள்ளனர். பணம் கொடுத்தும் சீட் கிடைக்காதவர்கள் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவடி நகர விவசாய பிரிவு பொருளாளர் செந்தில்குமார், 17வது வார்டுக்கு விருப்ப மனு கொடுத்தார். அவரிம் நகர செயலாளர் தீனதயாளன் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு தற்போது சீட் கொடுக்கவில்லை என்று செந்தில்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர், தீனதயாளனிடம் போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் வந்துள்ளது. அதையெல்லாம் போனில் பதிவு செய்த செந்தில்குமார், பேரம் பேசியதை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


 அந்த ஆடியோ பதிவு இது

செந்தில்குமார்: லிஸ்ட்ல கூட என் பெயர் அனுப்ப வில்லை, ஏன் அண்ணா இப்படி பண்ணுகிறீர்கள்?
நகர செயலாளர்: உனக்கு யார் சொன்னது? மற்றவங்கள் சொல்கிறதை நம்புகிறாயா... கம்முன்னு உன் வேலையைப்பாரு.

செந்தில்குமார்: எனக்காகத் தான் பேசுகிறேன். பாட்டன், பூட்டன் காலத்தில் இருந்தே கட்சியில் வேலைப்பார்த்து வருகிறோம்.

நகர செ. உன் வேலையைப் பாருப்பா

செந்தில்குமார்: எனக்கு மனசு கஷ்டமா இருக்கிறது.

நகர செ: உனக்கு யார் சொன்னது?

செந்தில்குமார்: 3 பேர் லிஸ்ட்டல பெயர் இல்லையே அண்ணா.

நகர செ. உனக்கு யார் சொன்னது?

செந்தில்குமார்: அப்துல்லா கிட்ட கூட நீங்க சொன்னீங்களே... என்கிட்ட ஒரு ரூபா வாங்கினா லட்சுமி கடாச்சம் என்று

நகர செ: மற்றவர்கள் சொல்கிறதை நம்புகிறராயா என்றவரின் குரல் கோபத்தில் உஷ்ணமான வார்த்தைகளால் செந்தில்குமாரை திட்டுகிறார்
மீண்டும் தொடர்கிறது உரையாடல்

நகர செ: இது மாதிரி ஏன்கிட்ட பேசாதே.... போனை வை, நாளை காலையில் வீட்டுக்கு வா

செந்தில்குமார்: காலையில் வந்து வாங்கி கொள்கிறேன். நான் கொடுத்த 5 லட்சம் கொடுத்துன்னா... என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது.



இதுகுறித்து செந்தில்குமாரிடம் பேசினோம். "நான், அ.தி.மு.க, ஆவடி நகர விவசாய பிரிவு பொருளாராக இருந்து வருகிறேன். 17வது வார்டுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தேன். அப்போது, என்னிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீட் தருவதாக நகர செயலாளர் தீனதயாளன் தெரிவித்தனர். அதன்படி முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிய அவர், வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தார். எனக்கு தருவதாக கூறி விட்டு இப்போது வேறுஒருவருக்கு சீட் கொடுத்து விட்டார். இதுகுறித்து போனில் பேசியபோது கோபமானார். பிறகு மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் மற்றும் தலைமை அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் கொடுத்தேன். உடனடியாக என்னை அழைத்து பேசிய தீனதயாளன், கொடுக்கல் வாங்கல் என்று பண விவகாரத்தை முடித்துக் கொள்வோம். அவ்வாறு செய்தால் கட்சியில் நல்ல பதவி கொடுப்பதாக கூறினார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. தீனதயாளன், வெற்றிப்பெற்றால் அடுத்த நகராட்சி சேர்மன் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இதனால் அவருக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்" என்றார்.


 இதுகுறித்து நகர செயலாளர் தீனதயாளனிடம் கருத்துக் கேட்க போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை. அவரது கருத்தையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

 


 ஆவடி அ.தி.மு.கவினர் கூறுகையில், "ஆவடியைப் பொறுத்தவரைக்கு மூன்று கோஷ்டியாக செயல்படுகின்றனர். அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்குமே இந்த முறை சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நகரப்பகுதி வார்டு என்றால் 7 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. திருமுல்லைவாயல், பட்டாபிராம் பகுதிகளுக்கு 5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்து வசூலித்துள்ளனர். இதற்கு அமைச்சர்கள் தரப்பிலிருந்தும் எந்தவித எதிர்ப்பும் இல்லையாம். இதனால் கட்சிக்காக உழைத்த அ.தி.மு.கவினர் சீட் கிடைக்காமல் உள்ளனர். இதன்காரணமாக இந்த தேர்தலில் உள்ளடி வேலைகள் அதிகம் ஆவடிபெருநகராட்சியில் நடக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா, உடல்நலம் பாதிப்பால் ஆவடி அ.தி.மு.கவினர் நன்றாக கல்லா கட்டிவிட்டனர்"என்றனர் ஆதங்கத்துடன்.

 அமைச்சர்கள் தரப்பினர், "கட்சி தலைமை முடிவுப்படி கவுன்சிலர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுடைய தலையீடு எதுவும் இல்லை. மூன்று பேர் பட்டியலை தலைமைக்கு மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் அனுப்பினார். அதில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீட்டுக்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை"என்றனர்.

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ