Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பட்டாவால் முகத்தை மூடுவது இதற்குத்தானா? செயின்பறிப்பில் திகில் டெக்னிக்

மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது தங்கச் செயினை பைக்கில் வந்த வாலிபரும், இளம்பெண்ணும் பறித்துள்ளனர். இளம்பெண்ணும் துப்பட்டாவால் தன்னுடைய முகத்தை மூடியிருந்ததால் அவரை அடையாளம் காணமுடியவில்லை.

தாம்பரம் அருகே உள்ள பீர்க்கங்கரணையை சேர்ந்தவர் முத்துவடிவு. 61 வயதாகும் இவர், அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பிறகு வீட்டுக்குச் செல்ல தனியாக நடந்து வந்தார். அப்போது பைக்கில் ஒரு வாலிபரும், அவரது பின்னால் துப்பட்டாவால் முகத்தை மூடியப்படி ஒரு இளம் பெண்ணும் வந்தனர். அவர்கள், துண்டுச் சீட்டை முத்துவடிவிடம் காண்பித்து முகவரி கேட்டனர். அப்போது, முத்துவடிவின் கழுத்தில் கிடந்த இரண்டு சவரன் செயினை வாலிபர் பறித்தார். பிறகு மின்னல் வேகத்தில் வாலிபரும், இளம்பெண்ணும் பைக்கில் பறந்தனர். திருடன், திருடன் என்று முத்துவடிவு சப்தம் போட்டார். ஆனால் பைக்கில் சென்றவர்களைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் முத்துவடிவு புகார் செய்தார். அவர் சொன்ன தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் வழக்கமாக செயின் பறிப்பு சம்பவங்களில் ஹெல்மேட் அணிந்து ஆண்கள்தான் ஈடுபடுவார்கள். ஆனால் முத்துவடிவிடம் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் ஈடுபட்டுள்ளனர். இதனால் செயின்பறிப்பில் ஹெல்மேட் ஆண்களுடன் இப்போது துப்பட்டா முகமூடி பெண்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களைப் பிடிக்க போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.


 செயின் பறிப்பில் இளம் பெண் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "செயின் பறிப்பு சம்பவங்கள் ஈடுபடும் கொள்ளையர்கள் ஹெல்மேட் அணிந்திருப்பது வழக்கம். கொள்ளையடித்து விட்டு போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் சென்றால் கொள்ளையர்களை யாரும் அடையாளம் காணமுடியாது. ஹெல்மேட் கொள்ளையர்கள் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. இதனால் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் பழைய கொள்ளையர்களை கண்காணித்தாலே குற்றவாளி யார் என்ற விவரம் தெரிந்துவிடும். ஆனால் இந்த கொள்ளையில் இளம்பெண் ஒருவர் ஈடுபட்டுள்ளது எங்களுக்கே சவாலாக உள்ளது. ஒருவேளை இந்த கொள்ளை கும்பல் காதல் ஜோடியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜோடியாக இவர்கள் பைக்கில் வந்து முகவரி கேட்பதால் யாருக்கும் சந்தேகம் வராது என்றும் கொள்ளையர்கள் கருதி இருக்கலாம்"என்றனர்.

 பொது மக்களே உஷார்....

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ