Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' தேவேகவுடாவும் மோடியும் ஒண்ணுதான்!'  -காவிரிக்காக கொந்தளிக்கும் தி.மு.க.

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. ' காவிரி விவகாரத்தில் தேவேகவுடா பின்பற்றிய வழியையே மோடியும் பின்பற்றுகிறார். இந்தியாவுக்குள்தான் தமிழ்நாடு இருக்கிறதா?' எனக் கொந்தளிக்கிறார் வழக்கறிஞர்.கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ' அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரகோத்கி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது' எனத் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் இந்த 'திடீர்' முடிவால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதிர்ந்து போய் உள்ளன. 

" கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டிய அவசியத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க இருக்கிறது. தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியமைக்கப் போவதில்லை. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான, திட்டத்தை உருவாக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு. அதை திருத்தங்களுடன்  நிறைவேற்றலாமா என்றெல்லாம் அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அரசிதழில் வெளியிட்டாலும், நாடாளுமன்றம் ஏற்பதில்தான் அனைத்தும் இருக்கிறது" என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். நதிநீர் தொடர்பாக, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருபவர். தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளராகவும் இருக்கிறார். அவர் தொடர்ந்து நம்மிடம், 

" காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்றி,காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உருவாக்கி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்று நதிநீர் தாவா சட்டம் 1956-ன் பிரிவு 6A உட்பிரிவு (7) கூறுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 6,856 கனஅடியும் கபினியில் இருந்து 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் திறந்துவிட்டிருப்பதாகக் கர்நாடகம் கூறுகிறது. ' மொத்தத்தில் நான்கு அணைகளிலும் 26 டி.எம்.சி தண்ணீர்தான் உள்ளது. அது எங்களது குடிநீர் தேவைக்குப் போதவில்லை' எனக் கூறிவந்த கர்நாடகாவுக்கு, இப்போது மட்டும் எங்கிருந்து தண்ணீர் வந்தது? இந்த விவகாரத்தில், நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாற்றுப் பாடம் ஒன்றும் உள்ளது.

கர்நாடக எம்.பிக்கள் தயவில் ஆட்சி செய்து வந்த பிரதமர் வி.பி.சிங்தான், காவிரி நடுவர் மன்றம் அமைத்தார். ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை, குருபாதசாமி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்களின் எதிர்ப்பையும் மீறி, நடுவர் மன்றம் அமைத்தார். அப்போது அவருடைய அரசுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு எம்.பியும் இல்லை. காவிரியில் தமிழகத்தின் உரிமைக்கு சட்டப்பூர்வ பிடியை வழங்கிய முன்னோடி நடவடிக்கை இது. இதற்கு நன்றிக் கடனாக அடுத்து வந்த தேர்தலில் வி.பி.சிங் தலைமைக்கு, தமிழக மக்கள் வழங்கிய ஆதரவு பூஜ்ஜியம்தான். 

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குகிறார் முன்னாள் பிரதமர் தேவேகவுடா. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார். முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக அவர் நடந்து கொள்கிறார். அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு, ' காவிரி நடுவர் மன்றத் தலைவர் பதவியில் நீதிபதி சித்தோகோஷ் முகர்ஜி தொடரக் கூடாது' என பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது 1996-ம் ஆண்டு அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ' இந்தியாவின் மாநிலங்களை எதிரியாக நினைத்து வழக்கு தொடர்ந்தவர், கூட்டாட்சியில் எப்படி பிரதமராக இருக்க முடியும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில், நான் ரிட் மனுவை தாக்கல் செய்தேன். 

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கை தேவேகவுடா திரும்பப் பெற்றார். அதன்பிறகே அவர் பிரதமராக பதவியேற்றார். முன்னாள் பிரதமர் என்ற கண்ணியத்தை காக்காமல் குழப்பமான சூழ்நிலையை தேவேகவுடா உருவாக்கி வருகிறார். இதுகுறித்து இதுவரை யாரும் வினா எழுப்பவில்லை என்பது வேதனையைத் தருகிறது. தேவேகவுடாவுக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒருமைப்பாடு, இறையாண்மை, தேச நலன், வேற்றுமையில் ஒற்றுமை என்று கண்துடைப்பு கோஷங்களை ஒருபுறம் விதைத்துக்கொண்டே, தமிழர்களின் நலன்களை அனைத்துவிதத்திலும் புறக்கணிக்கிறது மத்திய அரசு" எனக் குமுறலோடு பேசி முடித்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

- ஆ.விஜயானந்த் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close