Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆணையத்துக்கு டிக்டேட் செய்த அ.தி.மு.க!  -தி.மு.க ஆர்.எஸ்.பாரதி பேட்டி

மிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ' ஆளுங்கட்சியின் ஆட்களே மேயராக வர வேண்டும் என்பதற்காக ஆணையத்துடன் இணைந்து சதி வேலையில் ஈடுபட்டது அ.தி.மு.க' என அதிர வைக்கிறார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 

' உள்ளாட்சித் தேர்தலில், பழங்குடி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் அவர்களுக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை. கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல், அவரச கதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு, வழக்குத் தொடர்ந்தார் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன், ' உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியான மூன்று அரசாணைகளை ரத்து செய்தும் வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும்' ஆணையத்துக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அ.தி.மு.க வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கவில்லை. இதுதொடர்பாக, மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர். 

ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்.  

" நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகாவது தேர்தல் ஆணையம், முறையாக அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தத் தீர்ப்பு தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்பட்ட குட்டு. இனியாவது இடஒதுக்கீடு, சுழற்சி முறை ஆகியவை குறித்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்". 

அவரசகதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? 

" ஆளுங்கட்சி ஆட்களை மேயராகவும் நகர்மன்றத் தலைவராகவும் பதவியேற்க வைப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகத்தான் இதைப் பார்க்கிறோம். இதற்கு முன்பு இப்படி அவசரகதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதில்லை. தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே ஆளுங்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. அப்படியானால், முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டுதானே செயல்பட்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க டிக்டேட் செய்திருக்கிறது". 

வழக்கில் நீங்கள் முன்வைத்த ஆதாரங்கள் என்னென்ன? 

" நீதிமன்றத்தின் கவனத்துக்கு தேர்தல் குளறுபடிகள் தொடர்பாக, ஏராளமான ஆதாரங்களை முன்வைத்தோம். அதுதொடர்பாக, நீதிபதி கேள்வி மேல் கேள்வி கேட்டார். அதற்கும் முறையான பதிலை அளித்தோம். அவற்றையெல்லாம் பரிசீலித்துத்தான் தீர்ப்பு வழங்கினார். ' கடந்த காலத்தைப் போல் தேர்தல் நடத்தலாம்' என்று அ.தி.மு.க கனவு கண்டது. நீதிமன்ற உத்தரவின் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. இனி முறையாக தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்". 

உங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?  

" அ.தி.மு.க தரப்பில் மேல்முறையீடு செய்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கும் தாக்கல் செய்திருக்கிறோம். தேர்தலில், ' மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவது; மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது; வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கு தொடர்ந்துள்ளோம். முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்தபோது, எங்களுக்கு உறுதியான பதில் கிடைக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் சென்றோம். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வர இருக்கிறது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறோம்".

- ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்