Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எம்.ஜி.ஆருக்கு சோ தந்த பதிலடி!' சோ பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ணர்ச்சிகளை அடையாளப்படுத்த இன்று எமோஜிக்களை பயன்படுத்துகிறோம். உலகில் அத்தனை கோடி மனிதர்களுக்கும் வெவ்வேறு விதமான அங்க அடையாளங்கள் இருப்பது இயற்கையின் ஆச்சர்யம். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது நிச்சயம்  நமக்கு எம்.ஜி.ஆரைத்தான் நினைவுபடுத்தும்.  தமிழகத்தில் இன்னொரு பிரபலத்தையும் அப்படி எளிதாக  அடையாளம் காணலாம். அது சோ. ஒரு வழுக்கையை வரைந்து அதற்கு பெரிய கண்ணாடி வரைந்தால் அதுதான் சோ.

பத்திரிகையாளர் வழக்கறிஞர் எழுத்தாளர் அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட சோ வுக்கு பிறந்தநாள் இன்று.

1934 ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சோ, தன் பள்ளிப்படிப்பை மயிலாப்புர் பி.எஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லுாரிப்படிப்பை லயோலாவிலும் படித்தவர். 1955 ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டப்படிப்பு படித்த சோ ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர்.

தொழிலதிபர் டி.டி.கே வாசுவின் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக 2 ஆண்டுகாலம் பணியாற்றியபோதுதான் நாடகங்களின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் ஒய்.ஜி.பட்டு நடத்திவந்த நாடகக்குழுவில் நடிக்கத்துவங்கினார். அப்போது நாடகக்குழுவில் அவருடன் நடித்த இன்னொரு பிரபலம் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.

சினிமா நாடகம் இவற்றின் மீது பெரிய ஈர்ப்பு இல்லாத குடும்பம் சோவினுடையது. ஆனால் அதற்கு நேர்மாறாக சோ வுக்கு இந்த விஸயங்களில் ஈடுபாடு அதிகம் இருந்தது. நாடகங்களின் மீதான காதலால் நிறுவனத்தின் உரிமையாளர் டி.டி.கே வாசுவிற்கு தெரியாமல் நாடகங்களில் நடிக்கத்துவங்கினார். பல வருடங்கள் வரை அவர் நாடகங்களில் நடித்துவந்த விஸயம் வீட்டாருக்கு தெரியாமல் இருந்தது ஆச்சர்யம்.

சட்டுத் துணிச்சலுக்கு இன்னொரு பெயர் சோ. டி.டி.கே. நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகர் பணிக்கு நேர்முகத்தேர்விற்கு சென்றார் சோ. நிறுவனச்சட்டம், தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா என்றனர். சுத்தமாக தெரியாது என்றார் துணிச்சலாக. “அப்பறம் எப்படி நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக செயல்படமுடியும்“ என்றார் நேர்முகத்தேர்வு நடத்தியவர். எல்லா சட்டங்களையும் மனப்பாடம் செய்திருக்கவேண்டியதில்லை. தேவைப்படும்போது சட்டப்புத்தகங்களை புரட்டிப்பார்த்தால் போதும்” என்றார். “சரி 3 மாதங்களில் தயாராகுங்கள்” என்றார் அதிகாரி. 3 மாதம் ஏன்...15 நாள் போதும் என பட்டென பதிலளித்தார் சோ. அதிர்ந்த நிர்வாகி. அவரது மனதைரியத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி நல்ல பெயரெடுத்தார் சோ.

பார் மகளே பார் திரைப்படம்தான் சோ நடித்த முதற்படம். 'பெற்றால்தான் பிள்ளையா' என்ற நாடகம் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவினரால் நடத்தப்பட்டது. அதை சிவாஜியும் பீம்சிங் இருவரும் ஒருநாள் பார்த்தனர். பார்த்ததும் அதை படமாக்க முடிவெடுத்தனர். பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்த அவர்கள் அதில் சென்னை பாஷை பேசி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நாடகத்தில் நடித்த சோ வே நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 'நாடகமே சிக்கல், இதில் சினிமா வேறேயா வேண்டாவே வேண்டாம்' என்று கைகூப்பிய சோவை வற்புறுத்தி நடிக்கவைத்தனர். சினிமா ஆசை இல்லாத சோ இப்படிதான் சினிமா நடிகரானார்.

காமராஜர் மீது அன்பு கொண்ட சோ, பிற்காலத்தில் காமராஜர் மற்றும் இந்திரா தலைமையில் பிளவுபட்ட காங்கிரஸை இணைப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரசுடன் மட்டும் இணைய விருப்பம் தெரிவித்த இந்திரா ஸ்தாபன காங்கிரஸை இணைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். சோவின் முயற்சி வெற்றிபெற்றிருந்தால் தமிழகத்தில் அரசியல் காற்று திசைமாறியிருக்கும்.

துக்ளக் பத்திரிகை துவக்கப்பட்டதும் ஒரு சாதாரண விஷயத்திற்காகத்தான். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற சென்ற சோவிடம் மாணவர்கள் பல கேள்விகள் கேட்டனர்.  சகட்டுமேனிக்கு அதேசமயம் சரியான பதில்களை சொல்லி அசத்தினார் சோ. உடன்வந்த நண்பர்கள் 'நீ என்ன பெரிய மேதாவியா...அரசியல் பொருளாதாரம் அறிவியல் என எதைகேட்டாலும் பதில் சொல்கிறாய்...இத்தோடு இப்படி பேசுவதை நிறுத்திக்கொள்' என்றனர். 'பேசவே கூடாதா...அப்படியென்றால் எழுதுகிறேன்' என்றார் சோ. 'நீ எழுதுவே யார் அதை பத்திரிகையில் போடுவார்கள்' என்றனர் நண்பர்கள் கிண்டலாக. 'ஏன் நானே ஒரு பத்திரிகை ஆரம்பிச்சி எழுதுறேன்.' என்றார் சடாரென.

ண்பர்கள் திரும்பவும், ' எதை வேணும்னாலும் பேசிடுவ... ஆனால் எழுத முடியாது' என்றனர். நண்பர்களின் பேச்சை சீரியஷாக எடுத்துக்கொண்டு பத்திரிகை துவக்கும் முடிவுக்கு வந்தார் சோ. இந்து பத்திரிகையில் தனது பத்திரிகை துவங்கும் எண்ணத்தை வெளியிட்டு ஆரம்பிக்கட்டுமா வேண்டாமா“ என்று கேட்டிருந்தார். ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்தன. சோவிற்கு நம்பிக்கை பிறந்தது. கூடவே துக்ளக் பிறந்தது.

மர்ஜென்சி காலத்தில் அதிகம் தணிக்கை செய்யப்பட்ட இதழ் துக்ளக். எமர்ஜென்சியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அரசியல் பத்திரிகைகளில் துக்ளக்கிற்கு தனியிடம் உண்டு. எமர்ஜென்சியின் கொடுமையை சொல்வதற்காக தன் ஒரு இதழின் அட்டைப்படத்தை கருப்பாக அச்சிடடு வெளியிட்டவர் அவர்.

துக்ளக்கில் எம்.ஜி.ஆரைப்பற்றி கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தநேரம். எம்.ஜி.ஆருடன் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சோ. படத்தின் இயக்குனர் ப. நீலகண்டன், எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்துவதற்காக, 'என்ன சோ உங்க துக்ளக் எப்படி போகுது' என்றார். நல்லா போகுது என்றவரிடம் 'கலைமகள் விற்பனை எப்படி' என்றார் திரும்ப. 'பரவாயில்லை' என்றார் சோ. இதுதான் சமயம் என நீலகண்டன், 'பாருங்க, தரமான பத்திரிகை விற்கமாட்டேங்குது...தரமில்லாத பத்திரிகை நல்லா போகுது” என்றார் நக்கலாக. உடனே சோ, 'ஆமாம் சார், தரமுள்ள படங்கள் ஓடுவதில்லை. தரமில்லாத படங்கள் பல ஓடுகின்றன. பல படங்கள் தோல்வி. எம்.ஜி.ஆரின் என் அண்ணன் நல்லா போகுது” என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியான எம்.ஜி.ஆர். நீலகண்டன் சொன்ன கேட்கமாட்டீங்க...தேவையா இது.“ என தலையிலடித்துக்கொண்டார்.

ரசியல் விமர்சனங்களையும் தனிப்பட்ட நட்பையும் எப்போதும் சேர்த்து குழம்புவதில்லை சோ. கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கிடையேயும் சம்பந்தப்பட்டவர்கள் அவருடன் நட்பு பாராட்டுவார்கள். இப்படி ஆரோக்கியமான இதழியல் பணியை அவர் மேற்கொள்கிறார்.

பாஜகவில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட எந்தவித முகாந்திரமும் இல்லாதபோதே தமிழக வாக்காளர்களுக்கு அவரை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்தவர் சோ. அத்தனை தீர்க்கதரிசனம்.

70களில் சோ வின் நாடகங்கள் ஆங்கில பெயரகள் இருக்கும். இது பல தமிழார்வலர்களை கோபம் கொள்ளச்செய்தது. ஆனால் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு மேடையில் சோவின் இந்த குணத்தை கடிந்துகொண்ட டி.கே சண்முகம், 'தமிழ் நாடகங்களுக்கு ஆங்கில பெயர் வைப்பது தவறு. சோ இதை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்றார். அதற்கு பதிலளித்த சோ, 'அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இனி தன் நாடகங்களுக்கு ஆங்கிலப்பெயர் சூட்டுவதில்லை' என்றார். நடந்தது என்ன தெரியுமா...அவரது அடுத்த நாடகத்தின் பெயர் கோ வாடீஸ். இது லத்தின் மொழி.! இதுதான் சோ.

த்திரிகையாளர் , அரசியல், விமர்சகர் ,எழுத்தாளர், நடிகர் என்று மட்டும் இயங்கி வந்தவரை எம்.பியாகவும் ஆக்கியது முந்தைய பாஜக அரசு. மாநிலங்களவைக்கு தேர்வான அவர் தன் எம்.பி நிதியிலிருந்து தான் செலவு செய்த நிதி, மீதமான தொகையின் வரவு செலவு கணக்குகளை தனது துக்ளக் இதழில் வெளியிட்டார். அரசியல்வாதிகளிடம் இல்லாத அரிய குணம் இது.

மிழக பத்திரிகையாளர் என்றாலும் இந்திரா, மொரார்ஜி, ஆச்சார்ய கிருபாளினி, உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். தமிழகத்தின் மிக மூத்த தலைவர்களும் அவரது ஆலோசனைக்கு மதிப்பளித்தனர். எந்த பிரச்னையிலும் தனக்காக பார்வையில் ஒரு தீர்வை சொல்வது அவரது பாணி.

ம் பத்திரிகையில் மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளித்து வெளியிட்டவர் சோ. துக்ளக் இதழில் வரும் ஒரு கட்டுரை தனக்கு உடன்பாடில்லாததை தனது கேள்வி பதில் பகுதியில் வெளிப்படையாக சொல்லிவிடுவார்.

ஆச்சர்யமாக சில கட்டுரைகளுக்கு மறுவாரம் அவரே மறுப்பு கட்டுரை எழுதுவார். கோஷ்டி அரசியலில் அதிமுக அதகளப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 'கூவம் நதிக்கரையினிலே' என அங்கத சுவையுடன் அவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி கதாபாத்திரங்களை அமைத்து  வெளியிட்ட தொடர் அவரது (அசட்டு)துணிச்சலுக்கு சாட்சி.  

ரு முறை துக்ளக் இதழின் கடைசிப்பக்கம் அச்சிடாமலேயே வெளிவந்தது. அதன்மேல், ' செய்தி எதுவும் இல்லை. தாய்மார்கள் தங்கள் வரவு செலவு கணக்குக்கு இந்த பக்கத்தை உபயோகப்படுத்திக்கொள்ளவும்' என குறிப்பு வெளியிட்டிருந்தார்.

துக்ளக்கின் முதல் அட்டைப்படம் மங்களகரமாக வரவேண்டும்...எந்த தலைவரின் படத்தைப்போட்டு அச்சிடலாம். முதல் இதழே வாசகர்களிடம் பளிச்சென ஒட்டிக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்குழு பேசி முடிவெடுக்க, சோவின் யோசனையில் முதல் இதழின் அட்டைப்படம் வெளியானது. ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்தார்கள் வாசகர்கள்.

ஆம்...2 கழுதைகள்  பேசிக்கொள்வதுபோல் அட்டைப்படம் வெளியானது. முதல்கழுதை, 'சோவின் பத்திரிகை வெளிவந்துவிட்டதாமே' என்கிறது. அதற்கு அடுத்த கழுதை, 'அப்படியா இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான் எனச் சொல்கிறது. இதுதான் சோ!

-எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close