Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஆண்டுதோறும் 60 பேர் சிறையில் சாகிறார்கள்...!'  -கொதிக்கும் ஜவாஹிருல்லா 

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அப்துல் ஒசீர், மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். ' சிறைவிதிகளின்படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆதங்கப்படுகிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. 

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்துல் ஒசீர். இவருக்கு நீண்ட நாட்களாகவே இதயநோய் பிரச்னை இருந்து வந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை எடுத்து வந்தவர், இன்று மரணம் அடைந்துவிட்டார். இதுகுறித்து, நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா, " இதய நோயாளியாக இருந்த அப்துல் ஒசீர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழித்து மரணம் அடைந்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்துவிட்ட சிறைவாசிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக போராடி வருகிறோம். கடந்த ஆட்சி காலத்தில் சட்டமன்றத்திலும் இந்த கோரிக்கையை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். குறைந்தபட்சம் கடும் நோயினால் அவதிப்படும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் தெரிவித்தோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 

தற்போது மூன்றாவது மரணமாக, ஒசீரின் மரணம் நிகழ்ந்துள்ளது. முன்பு தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்கு பிறகு, சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் இல்லாததால் மரணம் அடைந்தார். இதேபோல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான், இதய நோயினால் இறந்தார். தற்போது 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர், இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார். இவரைப் போல் இன்னொரு ஆயுள் சிறைவாசி மரணிக்கும் முன் தமிழக அரசு, பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். 

ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றனர் என ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த அடிப்படையில் சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு. 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ