Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சி தேர்தல் தடையை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு! 

உள்ளாட்சித்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. 

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி கிருபாகரன் நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளைத் தாண்டி உள்ளாட்சி அமைப்புகள் என்பது 3வது அரசு நிர்வாகம். மக்கள்தொகை அடிப்படையில் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்பதுதான் இந்த வழக்கு. ஆனால் கடந்த காலங்களில் பின்பற்றிய நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது என்பதால் அந்த கோரிக்கையை ஏற்க முடியவில்லை. ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பை ஊடகங்களிடம் செப்டம்பர் 25-ம் தேதி மாலை வெளியிட்டு, அடுத்த நாள் அதிகாலை 12.15 மணிக்கு அறிவிப்பாணையை அலுவலகம் இயங்காத வேளையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது முன்கூட்டியே தெரிந்ததால் ஆளுங்கட்சி செப்டம்பர் 26ஆம் தேதியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலின் முதல் படியே அதை முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிப்பதுதான். அதிலேயே மாநில தேர்தல் ஆணையம் சறுக்கியுள்ளது. இது சட்டப்படி செல்லாது. எனவே தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். தற்போதைய சூழலில் தேர்தல் தள்ளிப்போவதால், புதியவர்கள் பொறுப்பேற்கும் வரை தனி அதிகாரிகளை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும். தேர்தல் குறித்த அறிவிப்பாணையை புதிதாக வெளியிட்டு உரிய விதிமுறைகளின்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், தனி நீதிபதி கிருபாகரன் உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. 

எடிட்டர் சாய்ஸ்