Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்வி நிறுவனமா.. கந்துவட்டி நிதிநிறுவனமா..?! மாணவர்களை மிரளவைக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

கல்விக்கொள்கையில் இந்திய அரசின் கொள்கை, குழப்பம் என்றால், தமிழக அரசின் செயல்பாடுகள் குழப்பத்தின் உச்சம்.
 தமிழகத்தின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதி நெருக்கடியும் அதைத்தொடர்ந்த சர்ச்சைகளாலும் கடந்த காலங்களில் திணறித் தவித்தது. பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகளால் நிதிநெருக்கடி ஏற்பட அதை சமாளிக்கிறேன் பேர்வழி என ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு உள்ளிட்ட அதிரடி அஸ்திரங்களை கையிலெடுத்தது நிர்வாகம்.

இதற்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல்கட்சிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. சிறப்பு சட்டம் கொண்டுவந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தை அரசே எடுத்துக்கொண்டதை போல, அண்ணாமலை பல்கலைக் கழகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை தமிழக அரசே ஏற்றது. இந்நிலையில் அரசினால் நடத்தப்பெறும் பல்கலைக்கழகத்தில் அரசு அறிவித்த கட்டணத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிர்ச்சிக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது பல்கலைக்கழகத்தின்மீது.

அரசிடமிருந்து ஆண்டுதோறும் ரூ.200 கோடிக்கும் மேல் பல்கலைக்கழகத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் ரூ 2300 கோடிக்கும் மேல் பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட  ஒட்டுமொத்த மானியத்தை விட இது அதிகம் என்று சொல்லப்படுகிறது.  
மக்களின் வரிப்பணத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கு இவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு செய்தபிறகும்  மருத்துவ மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த கட்டணக்கொள்ளையை கண்டிப்பதாகக் கூறி நேற்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பாக சிதம்பரம் காந்தி சிலை அருகில்  மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தனர்.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத்திடம் பேசினோம். “ 2013 ல் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழத்தை அரசு எடுத்துக்கொண்டபின் அது ஒரு முழுமையான அரசு கல்வி நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டதுதான். ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கும் இங்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் பொது மருத்துவம் படிப்புக்கு ரூ 13,600 ம் பல் மருத்துவப் படிப்பிற்கு ரூ 11,600 ம் முதுநிலை  டிப்ளமோ படிப்பிற்கு ரூ 31,325 ம் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 42,025 ம்  மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், பொது மருத்துவ மாணவர்களுக்கு ரூ 5 லட்சத்து 54 ஆயிரமும், பி.டிஎஸ் மாணவர்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரமும் முதுநிலை டிப்ளமா படிப்புக்கு ரூ  8 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ரூ 9.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசே அண்ணாமலை மருத்துவப் பல்கலைக் கழகத்தை ஏற்று நடத்தும் நிலையில் இந்த முரண் ஏன்?...அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவது  கண்டனத்திற்குரியது மற்றும் சட்டவிரோதமானது. அரசும் இதை கண்டுகொள்ளாமல் இரட்டைவேடம் போடுவது ஏன் எனத் தெரியவில்லை.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் , இந்த கட்டணக் கொள்ளை சமூக நீதிக்கும், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது. அரசே நடத்தும் இந்தக் கட்டணக் கொள்ளையால் இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணத்தை செலுத்த முடியாமல் விழி பிதுங்கு நிற்கின்றனர். உடனடியாக அரசு இதை தடுக்க அங்குள்ள சிண்டிகேட் உறுப்பினர்களுடன் கலந்துபேசி இந்த கட்டணக்கொள்ளையை தடுக்கவேண்டும். 

சட்டவிதிகள் இதற்கு இடையுறாக இருந்தால் அரசு 2013 ல் இயற்றிய சட்டத்தில் திருத்தமோ அல்லது இதற்கென அவசர சட்டத்தையோ இயற்றவேண்டும். அரசு இந்த பொறுப்பை தட்டிக்கழிப்பது சரியல்ல. இதுமட்டுமில்லாமல் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகை என்ற பெயரில் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகம் கல்வி நிறுவனமா அல்லது கந்துவட்டி விடும் நிதிநிறுவனமா என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். இதை கண்டிக்கும் விதமாகத்தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.

மாணவர்களின் புகாரின் உண்மைத்தன்மை குறித்து பல்கலைகழக பதிவாளர் டாக்டர் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு கேட்டோம்.
அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற இவர்களின் குற்றச்சாட்டும், போராட்டமும் அபத்தமானது. 2013 ல் அரசு அண்ணாமைலைப்பல்கழகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே அதாவது பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே  ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக்கல்லுாரி மற்றும் பாரா மெடிக்கல் கல்லுாரிகள் ஆகியவை சுயநிதிக்கல்லுாரிகளாவே தனித்து இயங்கிவருகின்றன.

விண்ணப்ப படிவங்கள் முதற்கொண்டு அனைத்திலும் அதை குறிப்பிட்டிருக்கிறோம். எப்போதும் பல்கலைகழகத்தின் நெறிமுறைகள் மருத்துவக்கல்லுாரியை கட்டுப்படுத்தியதில்லை. அதனால்தான் பல்கலைக்கழகத்தை அரசு தன் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொண்டபின்னாலும் இந்த கல்லுாரிகளின் நிர்வாக முடிவுகளில் அரசு தலையிட்டதில்லை. மேலும் அரசு தரப்பில் அட்மின் ஆக ஷிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டபோது வசூலிக்கப்பட்ட கட்டணம்தான் இது. அதை கூட்டியோ குறைத்தோ நிர்ணயம் செய்யவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 2013 பேட்ச் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் எங்கள் வாதத்தை ஏற்ற நீதிமன்றம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு தன்னாட்சியுரிமை கொண்ட அமைப்பு. அதன் ஆட்சிக்குழுவிற்கு மட்டுமே கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க முழு அதிகாரம் உண்டு. இப்பல்கலைக்கழகம் நிதி பற்றாக்குறையினால் சிரமப்படும் சூழலில், கல்வி வனிகமயமாகிறது அல்லது இலாபத்திற்காக நடத்தப்படுகிறது என்ற வாதம் பொருந்தாது. அரசு கல்விக் கட்டண குழுவின் அதிகார எல்லைக்குள் இப்பல்கலை வரவில்லை. எனவே கல்விக் கட்டண நெறியாற்றுக்குழு இப்பல்கலை விவகாரத்தில் தலையிட முடியாது. மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த போது பல்கலை வழங்கிய தகவல் குறிப்பு புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கல்விக் கட்டணத்தை ஒப்புக் கொண்டு சேர்க்கை ஆணை பெற்று பல்கலையில் சேர்ந்த பிறகு இந்த கல்விக்கட்டணத்தை எதிர்த்து கேள்வி எழுப்ப மாணவர்களுக்கு உரிமை இல்லை என தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்த மாணவர்களின் மேற்முறையீடு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த அடிப்படை புரியாமல் அரசு மருத்துவக்கல்லுாரியைப்போன்றே இங்கும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வலியுறுத்துவது வேடிக்கையானது. சுயநிதிக்கல்லுாரிகள் என்ற அடிப்படையில் அரசு எங்களின் கட்டண நிர்ணயத்தில் குறுக்கிட முடியாது” என்றார் தீர்க்கமான குரலில்.


- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ