Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குடி'மகனாக நடித்து 'குடி'க்கு எதிரான பிரசாரம்...! கரூர் ஆச்சரியம்

குடிகாரர்களை திருத்த டாஸ்மாக்குகள்தோறும் போய்,குடிகாரர்களின் கால்களில் தடாலடியாக விழுந்து எழுந்து வித்தியாசப் போராட்டம் நடத்தி,போராட்டக் களத்திலேயே தனது உயிரை மாய்த்துக் கொண்டவர் காந்திய இயக்க தலைவர் சசிபெருமாள். அதே நோக்கத்தில் வித்தியாசமாக களமிறங்கி விழிப்பு உணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறார் கரூரைச் சேர்ந்த நாகராஜன்.

கூல்டிரிங்ஸை குடித்துவிட்டு,குடிகாரர்போல நடித்து,குடிகாரர்களை திருத்தப் போகிறேன் என்று புதுபாணியில் கிளம்பி இருக்கிறார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன். மாற்றுத்திறனாளியான இவர், சென்னை எக்ஸ்பிரஸ், களவாணி, ஈரம் உள்ளிட்ட எட்டு படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்வது, உள்ளாட்சி தேர்தலில் சொந்த ஊரில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மும்முரம் காட்டுதல் என்று மனிதர் பிசியாகவே இருக்கிறார்.

கரூரில் நாகராஜனை சந்தித்து பேசினோம். "எனக்கு சொந்த ஊர் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளப்பள்ளி. அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு தம்பின்னு அளவான குடும்பம். எனக்கு பிறவியிலேயே கை,கால் ஊனமா அமைஞ்சுட்டு. வறுமையான குடும்பம். இருந்தாலும், மன ஊனம் இல்லாம வளர்ந்தேன். குடும்ப சூழ்நிலையால, அதிகம் படிக்க முடியலை. இந்த சமூகம் என் ஊனத்தை இழிவாக பார்க்கும் நிலையை கடந்தேறனும்னா நான் ஏதாச்சும் சாதிக்கனும்னு நெனச்சேன். சின்ன வயசுலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்ன்னு பார்த்து பார்த்து சினிமா ஆசை என்னை தொத்திகிச்சு. சினிமா மூலம் சம்பாதிச்சு, என்னைப்போல விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு உதவனும்னு மனசுல விதையை தூவினேன்.

தன்னம்பிக்கை உரம் போட்டால், அது தழைத்து வளரும் என்பதால், சென்னைக்கு பத்து வருடங்களுக்கு முன்பு ஊனமான உடம்போடும், திடமான மனதோடும் வண்டி ஏறிட்டேன். அங்க போனதும் யாரை பார்க்கிறது, எப்படி சினிமாவுல நுழையிறதுன்னு தெரியாம கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்புல இருந்துச்சு. இருந்தாலும் ஸ்டுடியோ ஸ்டுடியோவா ஏறி இறங்கினேன். அஞ்சு வருஷம் அப்படியே கடந்துச்சு. நல்லா இருக்கிறவங்களையே நாய் மாதிரி அடிச்சு துரத்தும் சினிமா உலகம், என்னை மனிதப்பிறவியாவே பார்க்கலை. பல இடத்துல என்னை அடிச்சு கீழே தள்ளி இருக்காங்க. இருந்தாலும் விடாப்பிடியா போராடி களவாணி படத்துல ஒரு சீன்ல நடிக்கிற வாய்ப்பை வாங்கினேன்.

அப்புறம் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்துல ஒரு சீன் கிடைச்சுச்சு. ஒரு சீன்ல நடிச்சவன்னு நினைக்காம என்னை ஷாருக்கான் சார் கட்டிப் பிடிச்சு பாராட்டினார். ஒரு வாரம் நடிச்சதுக்கு நாற்பதாயிரம் பணமும் வாங்கி கொடுத்தார். அப்புறம் தலைக்கோணம், தீராத விளையாட்டுப்பிள்ளை, மனிதா மனிதா, பாதை, காதல் சொல்ல வந்தேன், ஈரம்னு எட்டு படங்கள்ல துக்கடா ரோல்ல நடிச்சுட்டேன்.
அதுல கிடைக்கிற பணத்த வச்சு, ஏழை மாணவர்களுக்கு உதவனும்னு முடிவெடுத்தேன். டாக்டர் அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளைன்னு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சு,உதவி பண்ணிகிட்டு வர்றேன். இதுவரை நூத்துக்கும் மேற்பட்ட ஏழை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி பண்ணி இருக்கேன். இத ஷாருக்கான் சாரிடம் சொன்னப்ப, சந்தோஷமா தட்டிக் கொடுத்தார். அதோட, தமிழ்நாடு முழுக்க உள்ள பொதுப்பிரச்னைகள் தீர, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்து பிரச்னை தீர முயற்சி எடுக்கிறேன்.

ஆனால், என்னோட வருமானம் முழுவதையும் நான் இப்படி ஊருக்கு கொடுப்பதால், எங்க வீட்டுல கோபமாகி என்னை சேர்த்துக்கலை. 'போங்கடா'ன்னு வந்துட்டேன். இப்ப நாடோடி போல சுத்திகிட்டு இருக்கேன். நான்கு மாதங்களுக்கு முன்பு நண்பர்களோட கொடைக்கானல் சுற்றுலா போனேன். அங்க சீருடையில் வந்த பள்ளி மாணவர்கள் சிலர், குடிச்சுட்டு, வர்ற போறவங்களை வம்பிழுத்துகிட்டு இருந்தாங்க. நான்,'ஏன் தம்பி இப்படி பன்றீங்க'ன்னு கேட்டேன். அதுக்கு என்னை அடிச்சு கீழே தள்ளிட்டாங்க.

உடனே, அருகில் இருந்த கடையில் பவண்டோ பாட்டில் ஒன்று, கப், ஊறுகாய், வாட்டர் கேன் எல்லாம் வாங்கி வந்து, கூல்டிரிங்க்ஸை  கிளாஸ்ல சரக்குபோல  ஊத்தி, ஊறுகாயை தொட்டுக்கிட்டு குடிச்சேன். போதை தலைக்கேறுனது போல நடிச்சு உளறுறது, குப்பையான இடத்துல உருள்றது, விழுந்து கிடக்கிறது,வாந்தி எடுப்பதுபோல ஆக்ட் பண்ணுவதுன்னு அரை மணிநேரம் நடிச்சேன். அங்குள்ளவர்கள் சிலர்,'ஊனமா இருந்திட்டு இப்படி குடிச்சுட்டு அலம்பல் பண்றானே'ன்னு கரிச்சுக் கொட்டினாங்க.

என் நண்பர்கள் உண்மையை சொன்னதும்,கைத்தட்டி பாராட்டினாங்க. என்னை கீழே தள்ளிய மாணவர்களும் மன்னிப்பு கேட்டாங்க. குடிச்சு குடிகாரர்கள் பண்ற அலைப்பறையை பண்ணி நீங்க இப்படித்தான் பண்றீங்கனு விளக்கினேன். நிறைய பேர் என்னை பாராட்டினாங்க. இதை தமிழ்நாடு முழுக்க பண்ணினா என்னன்னு தோணுச்சு. முதல்கட்டமா,எங்க மாவட்டத்துல பண்ணுறேன். பிறகு தமிழ்நாடு முழுக்க இந்த விழிப்பு உணர்வை பண்ணலாம்னு இருக்கேன். குடிச்சுட்டு ரோட்டுல கிடக்குறவங்கள் வீடியோ எடுத்து, மறுநாள் அவர்களிடம் காண்பிக்கும் விழிப்பு உணர்வும் பண்ணலாம்னு இருக்கேன்.
என்னதான் நான் நல்லது பண்ணலாம்னு நெனச்சாலும்,என்னை காயப்படுத்துபவர்கள்தான் அதிகம். அதனால்,மக்கள் பதவிக்கு வந்தால்,இன்னும் சிறப்பா செயல்படலாம்னு,இந்தமுறை எங்கூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்க வேட்புமனு தாக்கல் பண்ணி இருக்கேன். சினிமாவுலயும் பெரிய இடத்துக்கு வர தீவிர முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்," என்றார்.

- துரை.வேம்பையன்.
      

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ