Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கை நழுவிய எய்ம்ஸ்... கைக்கெட்டிய மருத்துவப்பூங்கா! செங்கல்பட்டு அப்டேட்

காஞ்சிபுரம் :  இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என எதிர்பார்க்கப்பட்டு, அந்த வாய்ப்பு கை நழுவிய நிலையில், மருத்துவப்பூங்கா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் சென்னை அருகே செங்கல்பட்டில் மருத்துவப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சி.எல்.டி.ஆர்.ஐ க்கு சொந்தமான 330.10 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவ பூங்காவிற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல். என்ற நிறுவனத்துக்கு 330.10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலேயே அனைத்து உற்பத்தி பொருட்களும் தயாரிக்க வேண்டும். இதன் அடிப்படையில் மருத்துவ உபகரணங்களும் நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்து இந்த மருத்துவப்பூங்காவை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஹெச்.எல்.எல். நிறுவனம் மூலம் இந்த மருத்துவப்பூங்காவில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை கட்டத் தொடங்கும். அடுத்த ஏழு ஆண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துவங்க வரும் தகுதி வாய்ந்த மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலங்கள் குத்தகைக்கு விடப்படும் என்றும், இந்த பூங்கா செயல்படத் தொடங்கியதும் இந்தியாவில் மருத்துவ சேவையின் தரம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள திருமணி கிராமத்தில், மத்திய அரசின் தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான 100 ஏக்கரில், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்க  ரூ.594 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே ஹெ.எச்.எல்.எல். நிறுவனமும் தனது கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளன. குறைந்த செலவில் தரமான தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் இந்த ஆலை அமையும் என சொல்லப்படுகிறது.

செங்கல்பட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான ஆய்வின்போது, தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகளே வெளிப்படையாகச் சொல்ல அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. இந்த நிலையில், செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைவது குறிப்பிடத்தக்கது.

- பா.ஜெயவேல்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close