Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலையில் முடிந்த 'சின்ன கடி'..! இது திருவள்ளூர் சோகம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பல் குத்தியதற்கு பழிவாங்க 3 வயது குழந்தையை எம்.ஏ பட்டதாரியான தாய்மாமன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் முருகன். தே.மு.தி.க ஒன்றிய தொண்டரணி செயலாளர். இவருக்கு ஹேமந்த் என்ற 3 வயது மகன் உள்ளார். நேற்றிரவு வீட்டில் ஹேமந்த் குடும்பத்தினருடன் படுத்து உறங்கினார். இன்று காலை பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் குடும்பத்தினர் குழந்தையை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹேமந்த் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து கதறி அழுதனர் ஹேமந்த்தின் குடும்பத்தினர். இதுதொடர்பாக பெரியபாளையம் போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "முருகனின் மனைவி ஹேமலா. இவரது சித்தி மகன் தமிழ்செல்வன். எம்.ஏ பட்டதாரி. வேலை இல்லாமல் ஊரைச்சுற்றி கொண்டு இருந்துள்ளார். ஹேமந்த் கொலை தொடர்பாக அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவரிடம் தனியாக விசாரணை நடத்தினோம். அப்போது கடந்த வாரத்தில் ஹேமந்த்துவுடன் தமிழ்செல்வன் விளையாடிய போது ஹேமந்த் விளையாட்டாக அவரைக் கடித்துள்ளார். இதில் ஹேமந்தின் பல் குத்தியதில் தமிழ்செல்வனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் தமிழ்செல்வன், ஹேமந்த்தை கொலை செய்வதாக கூறியுள்ளார். அதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோல ஹேமந்த்துவுடன் விளையாடிய போது  தமிழ்செல்வனின் கன்னத்திலும் ஹேமந்த் அறைந்துள்ளார். இதுவும் ஹேமந்த் மீது தமிழ்செல்வனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பழிவாங்க நேற்றிரவு ஹேமந்த் தூங்கி கொண்டு இருந்தபோது அவரை யாருக்கும் தெரியாமல் நைசாக வீட்டிலிருந்து தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அங்கு கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.  இதன்பிறகு கழிவு நீர் தொட்டியில் போட்டு விட்டு வீட்டுக்கு வந்துவிட்டார் தமிழ்செல்வன். பிறகு ஹேமந்த்தை காணவில்லை என்று வீட்டில் உள்ளவர்களுடன் தமிழ்செல்வனும் தேடியுள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தமிழ்செல்வனிடம் விசாரித்தபோது ஹேமந்த்தை கொலை செய்ததை  ஒப்புக் கொண்டார். மேலும் விசாரணையில் ஒவ்வொரு முறையும் தமிழ்செல்வன் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்து வருகிறார். இருப்பினும் ஹேமந்த்தை கொலை செய்தது தமிழ்செல்வன் மட்டும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

3 வயது சிறுவனின் பல் குத்தியதற்காக தாய்மாமன் கழுத்தை நெரித்து கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ள சம்பவம் பெரியபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ