Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர் நாகரிகத்தைக் காக்குமா தமிழக அரசு?  -கீழடி ஆய்வின் கிறுகிறு சிக்கல்கள்

மதுரை அருகே 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் கண்டுபிடிப்பு! - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க... 

திச்சநல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த பழந்தமிழர்களின் வாழ்வியல் முறைகளைவிடவும், கீழடியில் புதையுண்டு கிடந்த பழந்தமிழர் நகரத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். ' நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை மற்றும் ஆய்வுகளைத் தொடர்வதற்கான இடம் கிடைக்காதது போன்ற காரணங்களால் கீழடி ஆய்வு முடங்கிக் கிடக்கிறது' எனவும் வேதனைப்படுகின்றனர். 

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தனர். அதிலும், 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 சென்ட்டில் நடத்திய ஆய்வில், தமிழர்களின் நகர நாகரிக வாழ்க்கை, கழிப்பறை, குடிநீர் விநியோகம், தாயக்கட்டைகள் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகத்தை வெளி உலகுக்குத் தெரிவித்தனர். குறிப்பாக, ஆதிச்சநல்லூரில் 700 ஏக்கர் பரப்பளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு கிடைத்தவை அனைத்தும் இறந்தவர்களை புதைப்பது குறித்த ஆவணங்கள்தான். முதல்முறையாக, பண்டைய தமிழர்களின் நகர நாகரிகத்துக்கு கிடைத்த மிகச் சிறந்த சான்றாக, கீழடியை உற்று நோக்குகின்றனர் தொல்லியல் அறிஞர்கள். 

" இருபது ஆண்டுகளுக்கு முன்பே கீழடியைச் சுற்றியுள்ள இடைக்காட்டூர் பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழியின் ஓடுகள் எங்களுக்குக் கிடைத்தன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால், பழந்தமிழரின் நகர வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும் என உறுதியாக நம்பினோம். அதன் முயற்சியாகவே, பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள் வெளிவந்துள்ளன. இப்படியொரு வாழ்விடத்தின் ஆவணங்கள் கிடைக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை" என்கிறார் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், " பெங்களூருவில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் மண்டல அலுவலகம் உள்ளது. காவிரி பிரச்னையால், கீழடி அகழாய்வுப் பொருட்களை பெங்களூரு கொண்டு சென்றால், சிக்கல் ஏற்படும் என்பதால், தமிழ்நாட்டிலேயே ஆய்வு நடத்த இரண்டு ஏக்கர் நிலத்தை தமிழக அரசிடம் கேட்டோம். நிலம் அளிப்பது தொடர்பாக பலவித குழப்பங்கள் நீடிக்கின்றன. 

ஐம்பது சென்ட் நிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை விரிவுபடுத்திக் கொண்டே போனால், பண்டைய தமிழரின் நகர நாகரிகத்தை முழுமையாக உலகுக்கு அறிவிக்க முடியும். அதற்கென கீழடிக்கு அருகிலேயே கள அருங்காட்சியம் அமைக்கப்பட வேண்டும். மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கவில்லை. நாம் எந்த முயற்சியை எடுத்தாலும், மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்குமா என்ற கேள்வியும் எழுகிறது. கீழடி அகழாய்வின் சிரமங்களைக் களைந்து, சங்ககால நாகரிகத்தை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது" என்றார் உறுதியாக குரலில். 

' கீழடியில் எடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை லாரிகள் மூலம் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லாமல், கள அருங்காட்சியகத்தை அதே இடத்தில் அமைக்க வேண்டும்'  என்பதை வலியுறுத்தி வழக்குத் தொடர்ந்தார் கனிமொழி என்பவர். இதையடுத்து, வருகிற 18-ம் தேதி வரையில் கள ஆய்வு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்குத் தொல்லியல் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். 

' தொல்லியல் ஆய்வு வரலாற்றில், கீழடி அகழாய்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் அருமையை உணர்ந்து மாநில அரசின் கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்க வேண்டும்' என வேண்டுகோள் வைக்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். 

 

 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ