Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' துணை முதல்வர் பதவி?!'  -அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள்

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டன. ' அரசின் முக்கிய அலுவல்களை கவனிப்பதற்காக துணை முதல்வர் நியமிக்கப்படலாம்' என கோட்டை வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. முதல்வர் உடல்நலன் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே, தொண்டர்கள் மத்தியில் ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அரசு அலுவல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல், தலைமைச் செயலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். " அமைச்சர்கள் யாரைச் சந்திக்கச் சென்றாலும், ' அம்மா உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்தநேரத்தில் எதைப் பற்றியும் பேச வேண்டாம்' என ஒதுங்கிக் கொள்கின்றனர். துறைரீதியான பணிகளைவிடவும், முதல்வரின் உடல்நலம் குறித்த விவாதத்திலேயே அமைச்சர்களின் நேரம் கழிகிறது. முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் மருத்துவமனையிலேயே இருக்கிறார். பல முக்கிய முடிவுகளுக்கு முதல்வரின் கையெழுத்தில்லாமல் பணிகள் தாமதமாகிறது" என ஆதங்கப்பட்ட தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், தொடர்ந்து, 

" முதல்வர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஃபைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. முதல்வரின் கையெழுத்து மிக அவசியம். ஆனால், தற்போது முதல்வரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், இன்னும் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். அதன்பிறகும், முதல்வர் தீவிரமாக பணியில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஆகலாம். இதற்காக, துணை முதல்வர் பதவியில் ஒருவரை அமர்த்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால், அரசு அலுவல் தொடர்பான சிரமங்களைக் களைய முடியும் என முதல்வரின் ஆலோசகர்கள் உறுதியாக இருக்கின்றனர். துணை முதல்வர் ரேஸில் பல பெயர்கள் அடிபடுகின்றன. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பெயர்கள் பேசப்படுவதாகவும் சொல்கின்றனர். சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர், துணை முதல்வர் பதவியில் நியமிக்கப்படலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம்" என அதிர வைத்தார். 

(இந்தக் கட்டுரையை வீடியோவாகவும் காணலாம்)

 

 

" மருத்துவமனையில் முதல்வர் இருப்பதால், கோட்டையில் எந்தப் பணிகளும் வேகம் பெறவில்லை என்பது உண்மைதான். அதிகாரிகளும் கடமைக்காக வந்து போகின்றனர். இதற்குத் துணை முதல்வர் பதவி சரியான தேர்வாக இருக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால், தற்போது துணை முதல்வர் பதவி என்ற ஒன்றை உருவாக்கும் வேலைகள் வேகமெடுக்கவில்லை. இன்னும் சில நாட்களில் முதல்வர் கார்டன் திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறோம். அப்படி அவர் வந்துவிட்டால், துணை முதல்வர் பதவிக்கான வாய்ப்பு தேவையற்றதாகிவிடும்" என நிலவரத்தை விவரித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். 

யாருக்கு துணை முதல்வர் பதவி என்ற விவாதங்களும் அமைச்சர்கள் மட்டத்தில் பலமாக விவாதிக்கப்படுகிறது.

- ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்