Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜஸ்தானின் இரக்கம்... தமிழக அரசின் சுணக்கம்! - முடங்கிக்கிடக்கிறதா தமிழக கல்வித்துறை?

நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் தங்கள் மருத்துவக்கனவை தொலைத்து நிற்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த இந்த தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினை அடிப்படையாக கொண்டிருந்ததால் தேர்வை எழுதிய தமிழக மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர்.

நீட்தேர்வில் கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டது, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது, குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக வேண்யடியிருந்தது போன்ற காரணங்களால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தகுதிபெற முடியாமல்போனது.  

கல்வித்தரம், பாடத்திட்டம், கற்பிக்கும் முறை இவற்றில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பெரிய அளவு வித்தியாசம் உள்ள நிலையில் நீட் தேர்வினால் அதிகம் பாதித்தது தமிழகம் மட்டுமே. சுயநிதி கல்லுாரிகளில் சேருவதற்கு கூட 'நீட்' தகுதி தேவைப்படுவதால் பொருளாதார வசதி உள்ளவரகள் கூட தங்கள் பிள்ளைகளை மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கமுடியாமல் கையை பிசைந்துகொண்டிருக்கின்றனர்.

 தகுதித்தேர்வினால் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுவிட, இங்குள்ள கல்லுாரிகளில் வேறுமாநில மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். மீதமுள்ள இடங்கள் நிரப்ப்படாமல் வீணாகும் நிலை உள்ளது. ஆனால் அரசு இதை கண்டும் காணாமல் உள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மத்திய அரசின் தொகுப்பு இடங்களின்கீழ்வரும் 15 சதவீத இடங்களில் நிரப்பப்படாமல் போன இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்கியது மத்திய அரசு. இதில் ஓரளவு மாணவர்கள் சேர முடிந்தது. மாநில ஒதுக்கீட்டின் கீழ் இந்த இடங்களை நிரப்பிய தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரிகளிலும் நிரப்பப்படாமல் வீணாகும் மருத்துவ இடங்களை நீட் தேர்வில் தகுதிபெறாதவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுத்தால் ஓரளவு பல மாணவர்களின் மருத்துவக்கனவு நிறைவேறும் என்கிறார்கள் கல்வியாளர்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மேற்சொன்ன காலியிடங்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாகவே வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்கள்.

நீட் தொடர்பான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த சமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா, “மாநில அரசு விரும்பினால் ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கி அதை சரிகட்டிக்கொள்ளலாம்” என கூறியிருந்தார். அமைச்சரின் அறிவுரையை தமிழக அரசு பரிசீலிக்கவேண்டிய நேரம் இது.

நீட் தேர்வினால் பாதிக்கப்படாத நிலையிலும் ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநில மாணவர்களின் எதிர்காலத்திற்காக நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கியிருக்கிறது. இத்தனைக்கும் அந்த மாநிலத்தில் சி.பி.எஸ்.இ சிலபஸ் பயிற்றுவிக்கப்படுகிறது. நீட் பயிற்சி வகுப்புகளுக்கு பெயர் பெற்ற மாநிலமும் கூட. ஆனால் நீட் தேர்வினால் அதிகபட்ச பாதிப்பு அடைந்த தமிழகம் அதுகுறித்த எந்த கவலையும் கொள்ளாமல் மெத்தனம் காட்ட, ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநில மாணவர்களுக்காக இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்து பெற்றோர்களுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

“மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நிறைவுற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழக அரசின் இன்னும் மெத்தனம் காட்டுவது மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.  நீட் தகுதி பெற்றவர்களில் பலர் பொருளாதார வசதியில்லாததால் தாங்கள் தேர்வான கல்லுாரிகளில் சேராமல் உள்ளனர். பொருளாதார வசதியுள்ளவர்கள் பலர் நீட் தேர்ச்சி பெறவில்லை. இப்படி குழப்பமான நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

குறைந்தபட்சம் நீட் தகுதித்தேர்வில் தகுதிபெறாதவர்களுக்கு விதிவிலக்கு அளித்து இந்த இடங்களை அவர்களை கொண்டு நிரப்பும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு.

“அகில இந்திய அளவிலான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை, மாநில அரசுக்கு வழங்கி தமிழகத்திற்கு ஏதோ கொஞ்சம் சாதகமான நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு. அந்த இடங்களில் நீட் தகுதிபெறாத மாணவர்களைக்கொண்டு சமீபத்தில் நிரப்பியது மாநில அரசு. இதன் அடுத்தகட்டமாக இந்த முறையிலேயே தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில் நிரப்பப்படாமல்  உள்ள காலியிடங்களை மாநில அரசு கேட்டுப்பெற்று அந்த இடங்களில் நீட் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒதுக்கலாம். அல்லது அந்த இடங்களில் நீட் தேர்ச்சிபெறாத மாணவர்களும் சேர சிறப்பு சலுகை வழங்கலாம் ” என்கிறார்கள் கல்வியாளர்கள்.

நீட் தகுதியிழப்பு அடைந்தவர்களில் பலர் போதிய வருவாய்க்கொண்டவர்கள் உள்ளனர். இந்த இடங்களை நேரடியாக மாநில அரசு ஒதுக்கீட்டின்படி ஒதுக்க சிக்கல் ஏதும் இருந்தாலும் பேமண்ட் சீட் என்ற அடிப்படையில் ஒதுக்கலாம். இப்படி செய்வதால் நீட் தகுதி தேர்வினால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களில் பெரும்பாலோனோருக்கு மருத்துவக்கனவு நிறைவேறும். அப்படியில்லாதபோது இந்த இடங்கள் நிரப்பப்படாமல் இந்த ஆண்டு வீணாகவே செய்யும்” என்கின்றனர் கல்வியாளர்கள்.

நீட் தகுதித்தேர்வில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து அறிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அதன் செயலாளர் ராதாகிருஷ்ணனை பலமுறை போனில் தொடர்புகொள்ள முயன்றும் அவர்களது கருத்தை அறியமுடியவில்லை.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையால் அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதாக பேச்சுக்கள் துவங்கியிருக்கும் நிலையில் மாணவர்களின் நலனுக்காக அரசு விரைந்து எடுக்கும் முடிவு அந்த கருத்தை உடைப்பதாக இருக்கட்டும்.

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ