Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வரின் உடல் நிலையை விளக்கிய ரிச்சர்டு..! அப்போலோவில் வைகோ நெகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்டு என்னிடம் விளக்கியதோடு, அவரிடம், இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். முதலமைச்சருக்கு நீங்கள் அளிக்கும் சிகிச்சையால் நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம் என்று ரிச்சர்டிடம் கூறினேன் என்றார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது. ஆனாலும் சளி தொந்தரவு நீர்சத்து குறைபாடு இருந்ததால் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற் கொண்டனர். ஜெயலலிதாவுக்கு முழு உடல் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., நுரையீரல் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. அவருக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான மருந்துகளும் செலுத்தப்பட்டது. இதில் அவர் ஓரளவு குணம் அடைந்து வந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் ஜெயலலலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வதந்திக்கு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அப்போலோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில்,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, முதலமைச்சர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று காலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதன் பின்னர் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, "முதலமைச்சர் பூரண குணமடைய புதிய தமிழகம் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் உடல் நிலை குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்தேன். முதலமைச்சர் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்" என்றார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இன்றைக்கு தமிழகத்திலேயே அனைவருடைய உள்ளத்திலும் கவலை ஏற்படுத்தியிருக்கிற காவிரி பிரச்னையை முறையாக சட்டப்பூர்வமாக அணுகி உச்சநீதிமன்றத்தில் நியாயத்தை உணர வைத்து, பாதுகாத்து கொடுத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தநிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறி்த்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நான் மருத்துவர்களிடம் பேசினேன். குறிப்பாக ரிச்சர்டு பீலே, முதலமைச்சரின் சிகிச்சை முறை குறித்து என்னிடம் விளக்கினார். அவருடைய விசிட்டிங் கார்டைகூட என்னிடம் கொடுத்தார். அப்போது அவரிடம், நாங்கள் மனதளவிலே நெகிழ்ந்து போய் இருக்கிறோம். இரண்டு முறை லண்டனில் இருந்து வந்து இருக்கிறீர்கள். எங்களுடைய முதலமைச்சரின் உடல் நலத்தை குறித்த அக்கறையோடு, உங்களைப் போன்ற உயர்ந்த மருத்துவர்களுடைய வைத்தியத்திலேயே நலமாக இருப்பதை நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று சொன்னேன். அவரும் நன்றி தெரிவித்தார். எனவே முதலமைச்சர் ஜெயலலிதா, முழு உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று இயற்கை அன்னையுடைய அருளை நாள் யாசிக்கிறேன்" என்றார்.

அரசியல் தலைவர்கள் வருகையையொட்டி அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. 

ஆளுநருடன் வைகோ திடீர் சந்திப்பு

இதனிடையே, அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு வைகோ சென்றார். அங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை அவர் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர் ஆளுநரை, வைகோ சந்தித்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சகாயராஜ்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

எடிட்டர் சாய்ஸ்