Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி உளவு பார்க்கிறார் மோடி!' -தகிக்கும் திருமா

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். ' அதிகாரிகளின் கையில் ஆட்சி அதிகாரம் சென்றுவிடக் கூடாது. துணை முதல்வர் மற்றும் பொறுப்பு முதல்வர் பதவிகளை சட்டப்படியாக அமைக்க முடியாது' என்கிறார் திருமாவளவன். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்குப் படையெடுக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் உடல்நலன் குறித்து விசாரிக்க, அப்போலோ சென்றார் திருமாவளவன். அவர் வந்து சென்ற பிறகே, பிற அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வர் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக வரத் தொடங்கினர். இந்நிலையில், "தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வரை, அரசின் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு சந்தித்துச் சென்றதில் உள்நோக்கம் இருக்கிறது. மோடி அரசின் இந்தச் செயல் பலவித சந்தேகங்களை எழுப்புகிறது" எனக் கொந்தளிக்கிறது வி.சி.க. 

திருமாவளவனிடம் பேசினோம். "முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அரசாங்க கோப்புகளைக் கவனிக்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், மூன்று நாட்களுக்கு முன்பு வெளிட்ட அறிக்கையில் நீண்டநாட்கள் முதல்வர் சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் அரசு நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பது என்பது இயலாத காரியம்.

இந்தச் சூழ்நிலையில், அதிகாரிகளின் கையில் நிர்வாகம் சென்றுவிடக் கூடாது. இதற்கு மாற்றாக ஒரு ஸ்டீயரிங் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். மூத்த அமைச்சர்கள் தலைமையில் ஒரு வழிகாட்டும் குழுவை அமைத்து செயல்படலாம். அவை முன்னவர் என்ற அடிப்படையில் இதற்கான பணிகளில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபடலாம். முதல்வரின் பொறுப்புகளை மூத்த அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம். இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகிகளே முடிவெடுக்கலாம். 

'பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்' என தி.மு.க சொல்கிறது. இவ்வாறு நியமிக்கப்படுவதற்கு சட்டரீதியாக வாய்ப்பு இல்லை. காவிரி பிரச்னை உள்பட பல விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்க, வழிகாட்டும் குழுவே போதுமானது. தமிழக அரசின் சூழல்களை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது" எனத் தகித்தவர், தொடர்ந்து, " தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்ற நினைக்கிறது. இந்தநேரத்தில் அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி, மத்திய அரசு குளிர் காய்வதற்கு நாம் அனுமதித்துவிடக் கூடாது. அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இடம் கொடுக்காமல், அ.தி.மு.க நிர்வாகிகள் உடடினயாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.கவின் சுப்ரமணியன் சுவாமி அறிக்கை வெளியிட்ட பிறகும், பிரதமர் மோடி அதைக் கண்டிக்காததில் இருந்தே பலவித ஐயங்கள் எழுகின்றன. 

முதல்வருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பெயல் சிகிச்சை அளித்து வருகிறார். அவர் பெய்டு சர்வீஸில் வந்து செல்கிறார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவர்கள் வந்து செல்வது சட்டவிரோதமானது. எந்தவகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்தார்கள். மத்திய அரசு வலுக்கட்டாயமாக எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பியிருக்கிறது என்றே தெரிய வருகிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, முதல்வர் நலம்பெற்றுத் திரும்பும்வரை தமிழகத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்திச்செல்ல அரசியல் சட்டம் வழிகாட்டி உள்ளவாறு ஜனநாயகபூர்வமான முறையில் வெளிப்படையான இடைக்கால ஏற்பாடு ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கான பணிகளில் அ.தி.மு.க ஈடுபட வேண்டும்" என விரிவாக பேசி முடித்தார் திருமாவளவன். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ