Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆய்வை நிறைவு செய்த மத்திய குழு; கானல் நீரான காவிரிப் பிரச்னை

ந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பது மாநிலங்களிடை நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை.  அதிலும், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களுடன் தொடர்புடைய காவிரி பிரச்னை ஆண்டுதோறும் தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பொருளாதார த்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாகவும் உருவெடுக்கிறது. இரு மாநிலங்களிலும், சில நேரங்களில் வன்முறை-மோதல்களும் நிகழ்வதை தடுக்க முடியாமல் போகிறது.

வேறு எந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடிந்தாலும், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கை அன்னை அருட்கொடை புரிந்து, அதிக மழைப்பொழிவு இருந்தால் மட்டுமே,  காவிரிப் பிரச்சினை எழுவதில்லை. கர்நாடக மாநில அணைகளில் போதிய அளவு தண்ணீர் நிரம்பி, அணைகளில் உடைப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானால்தான், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு.

இந்த நிலையில்தான், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, திறந்து விட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வெவ்வேறு தேதிகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்ட போதிலும், கர்நாடக மாநிலத்தில் வன்முறையும், மோதலும் வெடித்ததே தவிர, தண்ணீர் திறந்து விடுவதற்கான சூழல் ஏற்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு உருவாகி விடாமல் இருக்க, ஓரளவு தண்ணீரை திறந்து விட்டு, வேடிக்கை பார்க்கிறது  கர்நாடக மாநில அரசு.

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மத்திய அரசு முதலில் அதற்கான பணிகளைத் தொடங்கியது. ஆனால், கடந்த வாரம் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இப்போதைக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி.எஸ். ஜா தலைமையில் உயர்நிலைத் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டு, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பணிக்கப்பட்டது.
முதலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரி பாசனப் பரப்பு ஆகியவற்றை மத்திய உயர்நிலைத் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழுவினர், தமிழகம் வந்து மேட்டூர்  அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, தமிழகத்தில் நீர்ப் பற்றாக்குறை குறித்த விரிவான அறிக்கையை மாநில பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய உயர்நிலை தொழில்நுட்பக் குழுவிடம் வழங்கினார்.மாநில அளவிலும், மாவட்ட அளவிலும்  நீர்ப்பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினரிடம் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேட்டூரில் ஆய்வை முடித்துக் கொண்ட மத்திய தொழில்நுட்பக்குழுவினர்,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.  மத்திய குழுவினரை நேரில் சந்தித்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள், நீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும், தண்ணீர் இல்லாததால் சாகுபடி வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினர். இதுதொடர்பான மனுவும் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டது.

தமிழகம், கர்நாடக மாநிலங்களில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கை மத்திய அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு, காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய தொழில்நுட்பக்குழுவின் தலைவர் ஜா தெரிவித்தார்.

இதனிடையே ஜி.எஸ். ஜா தலைமையிலான மத்தியக் குழுவை, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், சென்னையில் சந்தித்துப் பேசினார். தமிழகத்தின் தண்ணீர் தேவை தொடர்பா ன அரசின் கருத்துகளை அவர், மத்திய குழுவினரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.மத்தியக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன் பின்னர், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்து, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

மாற்றான்தாய் மனப்போக்கால், ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து பின்வாங்கியுள்ள மத்திய அரசு, தற்போது மத்தியக் குழுவின்  அறிக்கையைத் தொடர்ந்து, என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என தெரியாமல் தமிழக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தற்போது மத்திய அரசு புதிதாக ஒரு கருத்தை தெரிவித்து வருகிறது. இதே கருத்தை மத்திய  அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாரதிய ஜனதா தலைவர்களும் கூறத் தொடங்கியுள்ளனர்.

எத்தனை முறை மத்திய குழு பார்வையிட்டாலும், காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. விரைவில் இந்த ஆண்டு  பருவமழை தொடங்கும். இப்போதைக்கு தண்ணீர் பிரச்னை முடிந்து விடும். அடுத்த ஆண்டு  செப்டம்பர், அக்டோபரில் காவிரிப் பிரச்னை மீண்டும் தலைதூக்கும். அப்போதும் இதேபோன்ற நிலைதான் ஏற்படும். உச்சநீதிமன்ற உத்தரவுக்கே கட்டுப்படாத கர்நாடக அரசு, மத்தியக் குழுவின் அறிக்கையையா ஏற்றுக்கொள்ளப்போகிறது?


எனவே, காவிரிப் பிரச்னைக்குக் தீர்வு என்பது கானல் நீர் போன்றதுதான்.

-சி. வெங்கட சேது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ