Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியை ராகுல் சந்தித்தால்தான் தேவையற்ற அரசியல்!  - ‘திகுதிகு' திருநாவுக்கரசர்

மிழக காங்கிரஸ் கமிட்டியை மீண்டும் லைம் லைட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் திருநாவுக்கரசர். ராகுல்காந்தியின் வருகை, ஆளுநர் சந்திப்பு, அரசியல் அதிரடிகள் என சத்தியமூர்த்தி பவனில் பழைய உற்சாகத்தைக் காண முடிகிறது. குறிப்பாக, ராகுல்காந்தியின் வருகையால் ஒரேநேரத்தில் தி.மு.க, பா.ஜ.கவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி, ஆளுநர் சந்திப்பு, பா.ஜ.கவின் அரசியல் திட்டம் உள்பட பலவிதமான கேள்விகளுக்கு, அதிரடியாகவே பதில் அளித்தார் திருநாவுக்கரசர். 

ராகுல்காந்தி வருகையின் நோக்கத்துக்குப் பின்னால் பலவித கேள்விகள் எழுகிறது. குறிப்பாக, தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுகிறதே? 

"காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எடுத்த முடிவின் அடிப்படையில்தான், ராகுல்காந்தி முதல்வரை சந்திக்க வந்தார். இதில் வேறு கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ, வேறு யாருடைய அழைப்பின் பேரிலோ அவர் வரவில்லை. தலைவர் என்கின்ற முறையில் எனக்குத் தகவல் சொல்லப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஓர் அரசியல் நிகழ்ச்சியாக மாற்ற அவர் விரும்பவில்லை. அதனால்தான், 'விமான நிலையத்துக்குத் தலைவர்கள் யாரும் வர வேண்டாம். மருத்துவமனைக்கும் யாரும் வர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். தலைவர் வந்தால் மாவட்ட நிர்வாகிகள் வருவார்கள். அவர்களைத் தொடர்ந்து தொண்டர்கள் வருவார்கள். அப்படி வந்தால் அரசியல் நிகழ்ச்சியாகிவிடும் என்பதால், நான் மட்டும் அவரை வரவேற்றேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தலைவரை வந்து சந்திப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் மரபு. முன்பு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது இந்திராகாந்தி வந்து பார்த்தார். உடல்நலமில்லாத தலைவர்களை வந்து சந்திப்பது காங்கிரஸ் கலாச்சாரம். அதைப் பின்பற்றியே ராகுல் வந்தார். இதில், எந்தவிதமான அரசியலும் இல்லை". 

'தமிழக அரசியல் சூழலை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ளலாம்' என்பதை அறிந்துதான் ராகுல் வந்தார் என்கிறார்களே? 

"ஜனநாயக நாட்டில் கற்பனையாக கருத்துகளைச் சொல்வதற்கு அவரவர்க்கு உரிமை உண்டு. நான் என்னுடைய கருத்தைத்தான் சொல்ல முடியும். சில பேர், ' எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது ஏன்?' எனக் கேள்வி கேட்கிறார்கள். ஏன் வரக் கூடாது என நான் கேட்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது, உலக நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்தார்கள். மாறனுக்கு உடல்நலமில்லாதபோதும் வெளிநாட்டு மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். நோயாளிக்கு வேண்டியவர்களின் வேண்டுகோள்படி, எந்த மருத்துவரும் வந்து சிகிச்சை அளிக்கலாம். எய்ம்ஸில் இருந்து வந்தது குறித்து கேள்வி எழுப்புவது நியாயம் இல்லை. எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றபோதும், இதேபோல் மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். ஒரு கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்கு நல்ல மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கக் கூடாதா?" 

தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், இதுவரையில் கருணாநிதியை சந்திக்க ராகுல் வந்தது கிடையாது. ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளரை சந்திக்கச் செல்கிறார் என்றால் கேள்வி எழத்தானே செய்யும்? 

"உடல்நலம் சரியில்லாத நேரத்தில் முதல்வரை சந்திக்க வந்தார். இதைத் தொடர்புபடுத்தி அவரை ஏன் சந்திக்க வரவில்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, கலைஞரை சந்திக்கச் சென்றிருக்கலாமே எனவும் சிலர் பேசுகின்றனர். அப்படிச் சென்று பார்த்தால்தான் தேவையற்ற அரசியலாகும். அதை வைத்து  அரசியல் நடத்த விரும்புகிறவர்கள் எழுப்புகின்ற கேள்வி இது". 

இன்றைக்கு நீங்கள் பேசும்போதுகூட, தமிழ்நாட்டுக்கு பொறுப்பு முதல்வர் வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்தில் இருந்து மாறுபட்டுப் பேட்டி அளித்தீர்கள். இது கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா? 

"ஸ்டாலின் பேசியது குறித்து நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. தி.மு.க.வின் பொருளாளராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். அது அவருடைய நிலைப்பாடு. அவர் சொல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை. என்னுடைய கருத்து, முதல்வர் உடல்நலம் தேறி வருகிறார். அதுவரையில், யார் கவனித்துக் கொள்வது என்பது பற்றி முடிவு செய்யக் கூடிய இடத்தில் பலவித அடுக்குகள் உள்ளன. தலைமைச் செயலாளர், அமைச்சரவை, ஆளுநர், உள்துறை அமைச்சர், பிரதமர் எனப் பலர் உள்ளனர். எட்டு கோடி மக்களின் பிரநிதியாக இருக்கும் முதலமைச்சர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் எந்தவித தேக்கங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

இதை முறைப்படுத்தி, முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் அவர்களது கடமையைச் செய்யட்டும். இதில், ' உடனடியாக மாற்று முதல்வர் போடுங்கள் என்றோ, துணை முதல்வர் போடுங்கள்' என்றோ நாங்கள் சொல்லவில்லை. அப்படி ஒரு தேவை எழுந்தால், அதை ஆளுங்கட்சியான அண்ணா தி.மு.க.வே முடிவு செய்யட்டும். அங்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். பிரதமர் வந்து நேரில் பார்க்கட்டும். எனவேதான், இப்போதைக்கு பொறுப்பு முதல்வர் பற்றி பேச்சு எழவில்லை எனச் சொன்னேன். ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் அவருடைய கருத்து. இது என்னுடைய கருத்து". 

தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக பேச்சு அடிபடுகிறதே? 

"கூட்டணி என்பது தொகுதிப் பங்கீடு மற்றும் பொதுவான மக்கள் பிரச்னைகளில் இணைந்து செயல்படுவதுதான். ஜெயலலிதாவின் உடல்நிலை சம்பந்தமான பிரச்னையில், இரண்டு பேரும் ஒரே கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஜனநாயக நாட்டில் கருத்துக்களைச் சொல்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. தி.மு.க.வுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை. இதனால் இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் என்பது கிடையாது". 

பொதுவாகவே, ராகுல்காந்திக்கு தி.மு.க மீது பெரிய உடன்பாடு இல்லை என்ற கருத்து நிலவுகிறதே? 

"அப்படி யார் சொன்னது? கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில், கலைஞர்-ஸ்டாலினை பாராட்டிப் பேசினார் ராகுல். நான்தான் அவர் பேச்சை மொழிபெயர்த்தேன். ஸ்டாலினும், ராகுலைப் பாராட்டிப் பேசினார். எந்தக் கட்சியின் மீதும் அவருக்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அப்படி ஒரு எண்ண ஓட்டத்தில் ராகுல்காந்தி இல்லை". 

சரி...ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தீர்கள். என்ன பேசினீர்கள்? 

"நான் அமைச்சரவையில் இருந்தபோது, அதேநேரத்தில் அவரும் அமைச்சராக இருந்தார். பல ஆண்டுகள் எனக்கு நண்பர். நம்முடைய மாநிலத்துக்கு ஆளுநர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அதனால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். காவிரி உயர்மட்டக் குழு வந்துள்ளது. ' தமிழ்நாட்டின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என ஆளுநரிடம் வலியுறுத்தினேன். அவரும், ' அதற்கான ஆலோசனைகளை வழங்குவேன்' என உறுதி கொடுத்தார். பொதுவான அரசியல் சூழல்கள் பற்றிப் பேசினோம். தமிழக அரசியல் சூழல் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எழவில்லை". 

இறுதியாக ஒரு கேள்வி. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவிக்கு உங்களை முன்னிறுத்தியபோதுகூட, ' மக்களின் ஆதரவைப் பெற்றவர்தான் தலைவராக வர வேண்டும்' என ஜெயலலிதாவைக் கொண்டு வந்தீர்கள். மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவும் உங்களுக்கு இருந்தது. நீங்கள் உழைத்த அந்தக் கட்சிக்கு, தற்போது எது தேவை என உணர்கிறீர்கள்? 

"எம்.ஜி.ஆர் காலத்தில் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்த காலத்தில் இருந்தே அவருடன் பணியாற்றியிருக்கிறேன். வி.என்.ஜானகியை முதல்வராக அறிவித்தபோது, பெரும்பாலானவர்கள் ஜானகி வசம் இருந்தார்கள். 'கட்சிக்குத் தலைமை வேண்டும்' என்பதற்காக ஜெயலலிதாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வரும் வேலையில் இறங்கினோம். அதன்பிறகு, பொதுக்குழுவை நான் கூட்டினேன். அந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கினோம். அதன்பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. நான் அப்போது பொருளாளராக இருந்தேன். அவருடன் சேர்ந்து பணியாற்றிய இனிமையான காலங்களும் நினைவில் இருக்கின்றன. அவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன. அப்படிப்பட்டவர் இன்று மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து உள்ளபடியே வேதனைப்படுகிறேன். அவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருக்கிறேன். எனவே, அ.தி.மு.கவுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி நான் ஆலோசனையும் சொல்வது நாகரிகமாக இருக்காது. அதற்கான தேவையும் இப்போது எழவில்லை. அவர் உடல்நலம் பெற்று, மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்". 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ