Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியர்கள் ஒதுங்க, ஆப்ரிக்கர்கள் உதவியால் தப்பித்த தமிழர்!

சென்னையில் உள்ள ஜப்பானிய கெமிக்கல் நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் அதியமான். ஆப்ரிக்காவில் உள்ள 12 நாடுகளில் நடைபெறும் விற்பனைக்கு இவர்தான் பொறுப்பு. கடந்த இரு நாட்களுக்கு முன் பணி நிமித்தமாக ஆப்ரிக்க நாடான உகாண்டாவுக்கு அதியமான் சென்றுள்ளார். உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். கம்பாலாவில் அக்காசியா மால் பகுதியில் இந்தியர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.   ஏராளமான இந்தியன் ரெஸ்ட்டரான்ட்டுகள் இங்கு உள்ளன. சினிமாத் தியேட்டரில்  ஹிந்தி படங்கள்தான் ஓடும்.  உகாண்டா சுற்றுலாச் செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் இந்த மாலில் உள்ள ரெஸ்ட்டாரன்டுகளுக்கு உணவருந்த வருவது வழக்கம்.

அதுபோல்தான் அதியமானும் நேற்று முன்தினம் அந்த மாலில் உள்ள  ஹோட்டலுக்கு உணவருந்த போயிருக்கிறார். ஹோட்டல் முழுக்க ஏராளமான இந்தியர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அதியமானும் சாப்பிட்டு முடித்து விட்டு இருக்கையில் பில்லுக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது, திடீரென மூன்று ஆப்ரிக்கர்கள் அதியமானை சுற்றி வளைத்துள்ளனர். தங்களை இமிக்ரேஷன் ஆபிசர்ஸ் என சூழ்ந்து கொண்டு பாஸ்போர்ட் முதலிய ஆவணங்களை காட்டுமாறு கேட்டுள்ளனர். அதியமான் தன்னிடம் இருந்த பாஸ்போர்ட் நகலை அவர்களிடம் காட்டியுள்ளார். ஒரிஜினல் பாஸ்போர்ட்  தங்கியிருக்கும் ஓட்டல் ரிசப்சனில் கொடுத்துள்ளதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். .ஆனால் அவர்கள்  அதனை  ஏற்கவில்லை.

ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அதியமான் அவர்களிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளார். அந்த ஆப்ரிக்கர்கள் அடையாள அட்டையை காட்ட மறுத்ததோடு, அவரை தாங்கள் வந்த காரில் ஏறுமாறுக்  கட்டாயப்படுத்தியுள்ளனர். அதியமான் மறுத்து அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்தியர்களிடம் உதவி கேட்டும் கத்தியுள்ளார். ஆனால், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த எந்த இந்தியருக்கு இருக்கையை விட்டுகூட எழுந்திருக்கவில்லையாம். அதியமானை பார்த்து முகத்தையும் திருப்பிக் கொண்டனர்.

எந்த உதவியும் கிடைக்காத நிலையில் அந்த மூன்று ஆப்ரிக்கர்களிடமும் அதியமான் தனிஆளாக போராடிக் கொண்டிருந்துள்ளார். மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஏராளமான மக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தருணத்தில் அங்குள்ள ஆப்ரிக்க நண்பர்களுக்கு அதியமான் போன் செய்து நிலையை எடுத்துக் கூறியுள்ளார். 'எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் கொண்டு வந்துள்ள வாகனத்தில் ஏறி விடாதே... கடத்தி விடுவார்கள்.  நாங்கள் இப்போது வந்துவிடுகிறோம்' என அவர்கள் பதில் கூறியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட அதியமான், வாகனத்தில் ஏற மறுத்து அவர்களுடன் போரடினார். இது அத்தனையையும் அங்கிருந்த இந்தியர்கள் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த சில ஆப்ரிக்க மக்கள்தான் அதியமானுக்கு உதவிக்கு வந்துள்ளனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆப்ரிக்கர்களை சுற்றி வளைத்த ஆப்ரிக்க மக்கள், இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த  கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட ஆப்ரிக்கர்கள் திருதிருவென முயற்சித்துள்ளனர்.  அதியமானை விட்டு விட்டு தப்பி ஓடவும் முயற்சித்துள்ளனர். ஆனால், அதியமானுக்கு உதவிக்கு வந்த ஆப்ரிக்க மக்கள், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட ஆப்ரிக்கர்கள் சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்து அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த வளாகத்தில் இருந்த ஆப்ரிக்க மக்களின் உதவியுடன்தான் அதியமான் தப்பித்துள்ளார். கடைசி வரை இந்த சம்பவத்தை அங்கிருந்த இந்தியர்கள் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதியமானிடம் தொலைபேசியில் பேசினோம் மிகுந்த வேதனையுடன் நடந்த சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். '' பணி நிமித்தமா மாசத்துக்கு ஒரு முறை ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று வருவேன். ஆனால், எந்த நாட்டிலும் இது போன்ற அனுபவம்  ஏற்பட்டதில்லை. பொதுவாக இமிக்ரேஷன் ஆபிசர்ஸ் பொது இடங்களில்,  ஆவணங்களை காட்டுமாறு கேட்கமாட்டார்கள். அதனால் எனக்குள் சந்தேகம் எழுந்தது. அதனால்தான் அடையாள அட்டையைக் காட்டுமாறுக் கேட்டேன்.

ஆனால், அவர்களோ என்னை ஹோட்டலில் இருந்து வெளியேற்றி வாகனத்தில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர். மூன்று பேரும் சேர்ந்து என்னை வெளியேத் தள்ளிக் கொண்டு போக முயற்சித்தனர். நான் ஹோட்டலில் இருந்த இந்தியர்களிடம்' ஹெல்ப் மீ' னு கத்தினேன். ஆனால், அவர்கள் உதவவில்லை. அங்கிருந்த ஆப்ரிக்க மக்களும் எனது ஆப்ரிக்க நண்பர்களும் உதவி செய்யவில்லை என்றால் எனது நிலை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை.  உண்மையில் நடந்த சம்பவத்தை விட,  அங்குள்ள இந்தியர்கள் நடந்து கொண்ட விதம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ''என்றார் வேதனையுடன்.

-எம். குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close