Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் நலம் பெற அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. சிறப்பு பூஜை 

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ. சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி அமைச்சர்களும், அ.தி.மு.க நிர்வாகிகளும் போட்டி போட்டு கொண்டு யாகம் வளர்ப்பது, பால் அபிஷேகம் நடத்துவது, அலகு குத்தி தீ சட்டி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது என பலவகையான வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும் நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ தன் பங்கிற்கு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் யாகம் வளர்த்து வேண்டுதல் செய்தார். கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி ‘லலித திரிபுர சுந்தர யாகம்’ நடத்தியதுடன் 1000 முறை உச்சரிக்க கூடிய ‘சகஸர நாம’த்தை சொல்லி வழிபாடு செய்தார். லலித திரிபுர சுந்தர யாகம் நடத்துவதின் மூலம், எதிரிகளை வீழ்ச்சியடைய செய்யவும், மனதில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களை போக்கவும் வழி ஏற்படும் என நம்பிக்கை உள்ளதால் இந்த யாகத்தினை கருணாஸ் நடத்தினார்.

இதன் பின்னர் பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த யாகம் மற்றும் வழிபாட்டில் கருணாஸுடன் அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., அ.தி.மு.க மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பெருமளவில் கலந்து கொண்டனர். 

இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ