Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'த.மா.கா. குற்றால சீசன்'! வாசன் பற்றி வாய்திறந்த திருநாவுக்கரசர்

          

'தமிழ் மாநில காங்கிரஸ் என்பது குற்றால சீசன் போல. அங்கே குளிக்க போனவர்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பித்தான் ஆகவேண்டும்.அப்படித்தான் இப்போது த.மா.காவுக்குப் போனவர்கள் மீண்டும் தங்கள் தாய் வீடான காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பி வந்துகொண்டு இருக்கிறார்கள்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று(புதன்) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில்,தமிழகம் முழுவதும் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல்,காவிரி பிரச்னை உள்ளிட்டவை குறித்தும்,தற்போதைய தமிழக அரசியல் நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டன. காலை 11 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்த கூட்டத்தில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்,இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம்,கர்நாடகாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்  என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியவர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அவர்களை வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர்," தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் போனது சீசனுக்கு குளிக்க குற்றாலம் போனதுமாதிரி.ஒரு நாலு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து இருக்கீங்க அவ்வளவுதான்.விருந்தாளிகளாகப் போய்விட்டு திரும்பி இருக்கிறீர்கள். இது (காங்கிரஸ் கட்சி) உங்கள் தாய்வீடு.சொந்த வீட்டிற்குத்தான் திரும்பி வந்து இருக்கிறீர்கள்.அங்கு உங்களுக்கு என்ன பொறுப்புகள் இருந்தனவோ அதே போல  இங்கும் உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கி பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். தமாகா முன்னாள் மாநில செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரனை முன்பே எனக்குத் தெரியும். உங்களையெல்லாம் இங்கு மீண்டும் அழைத்து வந்துள்ள அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்." என்று  தெரிவித்தார்.

       

அதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்," வரும் 15ம் தேதி திருச்சியில் மாநில அளவில்,   காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசின் விரோதப் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போது அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்நிலையில்,அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வரின் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது ஒரு இடைக்கால மாற்று ஏற்பாடு.இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அரசியல் சட்டப்படியே இந்த ஏற்பாடு நடந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. ஏற்கெனவே திமுகவுடன் இடங்கள் பங்கீடு குறித்துப் பேசியிருக்கிறோம். அதில் சில இடங்களில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது. சில இடங்களில் பேச்சுவார்த்தை சரியாக முடியவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து உள்ளாட்சித் தேர்தல் ரத்துஆகியுள்ளது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு வரும்போது திமுகவுடன் சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்" என்று கூறினார்.

-சி.தேவராஜன்      

எடிட்டர் சாய்ஸ்

MUST READ