Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

9087790877... இந்த நம்பருக்கு எப்போதேனும் அழைத்திருக்கிறீர்களா.? இப்போது அழைக்கலாமா..?!

 

 

கோவையில் ஆரம்பித்த இவர்களது பயணம். இன்று தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. கோவையின் பல இடங்களில் இன்று நோ ப்ட் வேஸ்ட் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. சுப நிகழ்ச்சிகள், பார்ட்டிக்கள் போன்றவற்றில் முதலில் மிச்சமாவது உணவு தான்.ஆனா, அந்த உணவை நாம் என்ன செய்கிறோம்?. இனி இந்த நம்பருக்கு 9087790877 அழையுங்கள். குறைந்தது 50 உணவுப் பொட்டலங்கள் என்றால், அதை பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.இப்போது சேலத்திலும் இதை நிறுவி இருக்கிறார்கள். அது போக, பல இடங்களில் பிரிட்ஜ் வைக்கவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.உங்களிடம் அதிகமாக இருக்கும் உணவுகளை, இதி வைத்துவிடலாம். அது உணவில்லாதோரை கண்டிப்பாக சென்றடையும் என்கிறார் இதன் நிறுவனர் பாலாஜி

 

சேலத்தில் முக்கிய இடங்களில் நோ புட் வேஸ்ட் என்ற பெயரில் பிரிட்ஜ் வைத்து அவற்றில் உணவுகள் நிரப்பி வைத்து இருந்ததை பார்த்து அது பற்றி அங்கு இருந்தவர்களிடம்  விசாரித்ததில் நோ புட் வேஸ்ட் அமைப்பு, சீட்ஸ் பவுண்டேசன் போன்ற சில அமைப்புகள் சேர்ந்து உணவுகள் வீணாவதை தடுக்க இங்கு பிரிட்ஜ் வைத்து உள்ளதாகவும், நம் வீடுகளில் மீதமான உணவுகளை இங்கு வந்து தரலாம் எனவும், அவர்கள் இந்த உணவுகளை பசியால் வாடுவோர்க்கு தருகின்றனர் எனவும்  நமக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தந்தனர். இது குறித்து நோ புட் வேஸ்ட் அமைப்பை சார்ந்த பரணிதரனை  சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

அமைப்பை பற்றி சொல்லுங்கள்?

உலகில் தினமும் உணவு இல்லாமல் நிறைய பேர் இறப்பதாக பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்ற தான் சில ஆண்டுகளுக்கு முன்பு  நோ புட் வேஸ்ட் என்ற இந்த அமைப்பை  ஏற்படுத்தினோம். அமைப்பு தொடங்கிய போது அமைப்பை சேர்ந்தவர்கள் அனைவரும் பல்வேறு பள்ளிகளுக்கு எல்லாம் சென்று உணவு வீணாவதை பற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தோம். நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் குழந்தைகளிடம் உணவை வீணாக்க கூடாது என்ற எண்ணம் உருவானது. மாதத்தின் முக்கிய நாட்களில் எங்கள் அமைப்பின் சார்பாக பல்லாயிரக்கணக்கான உணவு பொட்டலங்களை பசியால் தவிக்கும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். இது போன்ற வெற்றியை தொடர்ந்து தான் அக்டோபர் மாதம் 2 தேதியான காந்தி ஜெயந்தி அன்று  இந்த பிரிட்ஜ் வைத்து அதன் மூலம் நம் வீடுகளில் வீணாகும்  உணவுகளை   வீணாகாமல் ஏழைகளுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் உணவு வழங்க இந்த முறையை ஏற்படுத்தி  வருகிறோம்.

எங்களின் முக்கிய நோக்கமே பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பது தான். இது போன்று புதியதாக ஒரு சமூக அமைப்பு ஆரம்பித்தால் அந்த அமைப்பு மேலும் வளர வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் நாங்கள் அமைப்பை விரைவாக மூட  வேண்டும் என்று தான் நினைக்கிறோம். காரணம் இங்கு வாழும் அனைவர்க்கும் உணவு கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும்  உணவு கிடைக்கும் பட்சத்தில் எங்கள் அமைப்பு செயல்பட வேண்டியதில்லை. அனைவருக்கும் உணவு கிடைக்கும் வரை எங்கள் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வரும் என்றார். வரும் அக்டோபர் 16 ஆம் தேதி உலக உணவு தினம் ஆகும். இந்நாளில் எங்கள் அமைப்பு சார்பில் உணவுகள் வீணாவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை யாரும் பசியால் இருக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து உள்ளோம்.

என்ன மாதிரியான உணவுகள் வாங்கி வைக்கிறீர்கள்?

பொது மக்களிடம் இருந்து பழங்கள், பிரட் மற்றும்  பிஸ்கட் போன்ற உணவுகளை தற்போது வாங்கி  வருகிறோம். கெட்டு போகாமால் நல்ல நிலையில் உள்ள அனைத்து உணவுகளையும் நாங்கள் வாங்கி பாதுகாத்து பசியால் வாடுபவர்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த  உணவுப்பொருட்களை பசியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறோம்.

உணவுகளை எதன் அடிப்படையில் பசியால் வாடுவோர்க்கு தருகிறீர்கள்?

மக்களிடம் மீதமான உணவுகளை நாங்கள் பெற்று  கெட்டு போகாமல் இருக்க இந்த பிரிட்ஜில் வைத்து விடுவோம். பசியால் வருபவர்களுக்கு இந்த உணவை வழங்கி விடுவோம். மற்றொரு முறையாக, நீங்கள் தந்த  மீதமான உணவுக்கு எங்கள் அமைப்பின் சார்பாக டோக்கன் ஒன்றை தருவோம் அந்த டோக்கனை நீங்கள் உங்கள் பகுதியில் பசியால் வாடும் மக்களுக்கு தந்து உதவலாம். அவர்கள் அந்த டோக்கனை எங்களிடம் தந்தால் அவர்களுக்கு உணவு வழங்குவோம்.  இதன் மூலம் அவர்கள் பசியை போக்கி கொள்ளலாம். இதனால் உணவு வழங்கிய மக்களுக்கும் தங்கள் மனதில் நாமும் ஒருவருக்கு உணவு வழங்கிய திருப்தியான மனநிலை உருவாகும் என்றார்.

இந்த முறை பற்றி  மக்களிடையே வரவேற்பு உள்ளதா?

மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளன. ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மக்களிடம் இந்த உணவு வழங்கும் முறை  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டது. குறிப்பாக குழந்தைகள், மாணவர்களிடையே அதிக வரவேற்பை பெற்று உள்ளன. இவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் சிலர் தினமும் தங்களால் முடிந்த அளவிற்கு பழங்கள் பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்த திட்டம்  குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வழியாக செல்பவர்கள்  இது குறித்து கேள்விபட்டு  பெரும்பாலானோர் உணவு வழங்கி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் உணவுகளை வழங்கி எங்களுக்கு  உதவி வருகின்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து இதே போன்று மக்கள் அதிகமாக கூடும் மேலும் சில முக்கிய  இடங்களில் பிரிட்ஜ் வைக்க முடிவு செய்து உள்ளோம்.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நம் வீடுகளில் நடக்கும் விசேஷங்களின் போது மீதமான  உணவுகள் எல்லாம் வீணாகி தான் வந்தன இதை எல்லாம் பார்த்த சில சமூக அமைப்புகள் வீணாகும் உணவுகளை அவர்களே நம் வீட்டிற்கு வந்து உணவுகளை பெற்று சென்றனர். அவர்கள் பெற்று சென்ற உணவுகள்  நிறைய ஆதரவற்ற இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் தந்து உதவினார்கள். இந்நிலையில் நோ புட் வேஸ்ட் என்று இவர்கள் ஆரம்பித்த இந்த திட்டத்தால் இனி  தனி மனிதனுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்து உள்ளனர்.  இன்னும் சில இடங்களில் இது போன்று ஆரம்பிப்பதே எங்கள் அமைப்பின் நோக்கம் என்ற இவர்களின் கனவு விரைவில் நனவாகி பசியால் வாடுபவர்கள் இல்லாத நிலையை உருவாக வேண்டும்.

 

NO FOOD WASTE என்ற பெயரில் செயலி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள்

- லோ.பிரபுகுமார்
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்:
க.மணிவண்ணன்,
க.சுகன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்