Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை.. ஜோதிடம் சொல்லும் சிக்கலும் பரிகாரமும்..!

முதல்வர் ஜெயலலிதா எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பு அதற்கு நேரம், காலம் சாஸ்த்திரம் சம்பிர்தாயம் பார்ப்பது வழக்கம். எல்லா வற்றுக்கும் மேலாக ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர்.  முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், ஜோதிட ரீதியாக அவரின் ஜாதக கட்டங்கள் அன்று முதல் இன்று வரை எப்படி அமைந்துள்ளன, ஜோதிட ரீதியாக அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த ஜோதிட ஆய்வாளர் திரு.சிவ.இராம.கணேசன்.

முதல்வர் ஜெயலலிதா 24.02.1948-ம் ஆண்டு மாசி மாதம் 14-ம் தேதி, மதியம் 2.30 மணி அளவில் மைசூர் நகரத்தில், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்தவர். (ஜனன காலத்தில் கேது தசை இருப்பு 3 வருடம் 5 மாதம் 12 நாட்கள்.)

புகழ்

ஜாதகத்தில் லக்னாதிபதியாகிய புதன், 9-ம் இடமான கும்பத்தில் அமர்ந்து, ராசி அதிபதியான சூரியனுடன் அஸ்தங்க நிலையை பெற்றிருக்கிறார். எனவே, லக்னாதிபதியின் வேலையை சூரியனே எடுத்து செய்வார். சூரியன் இவருக்கு மூன்றாம் இட அதிபதி, அதாவது தைரிய வீரிய ஸ்தானத்திற்கானவர், இப்பேர்ப்பட்ட சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் அமர்ந்து அவரது வீடான சிம்மத்தை, பார்ப்பது என்பது சிறப்பான அம்சம். 9-ம் இடம் என்பது புகழையும் குறிக்கும். எனவேதான் தைரியத்திலும், வீரியமான செயல்பாட்டிலும், ஆளுமையிலும் இவரை மிஞ்சுவதற்கு ஆள் கிடையாது. இதன் காரணமாகவே இவர் பேரும் புகழும் பெற்றார். 

கோபம்

சிம்மத்தில் சந்திரனும், செவ்வாயும் அமர்ந்து சூரியனால் பார்க்கப்படுகிறார்கள். சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும். சந்திரனோடு உஷ்ண கிரகமான செவ்வாய் உடனிருந்து, மற்றொரு உஷ்ண கிரகமான சூரியனால் பார்க்கப்படுவதால், இயல்பாகவே உடலில் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். எளிதில் கோபப்படக்கூடிய தன்மையும் இயல்பாகவே இவருக்கு இருக்கும். செவ்வாய் கிரகம் ரத்தத்தை குறிக்கக்கூடிய கிரகம், சூரியனால் வேறு பார்க்கப்படுவதால் உயர் ரத்த அழுத்தம் இயல்பாகவே இந்த ஜாதகருக்கு வந்துவிடுகிறது. 

சினிமா

ஜீவனம் மற்றும் பதவியை குறிக்கக்கூடிய பத்தாம் இடத்தில் அதாவது மீனத்தில் 5-ம் அதிபதியான சுக்கிரன் உச்சம். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், தெய்வ அனுகிரகம் தொடர்பான ஸ்தானமும் ஆகும்.  இதன் அதிபதி உச்சம் என்பது எவ்வளவு பெரிய சோதனைகளையும் தெய்வ அனுகிரகத்தால் எதிர்கொண்டு வெற்றி பெறும் வல்லமையை தருகிறது. இதை தவிர சுக்கிரன் கலைத்துறை மற்றும் சினிமாவிற்குரிய கிரகம். சுக்கிரன் வலுவாக இருந்தால் மட்டுமே சினிமா துறையில் ஜொலிக்க முடியும். சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் சுக்கிர தசையில் சினிமாவையே தொழிலாக மேற்கொண்டு அதிலும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்க முடிந்தது. 

ஆன்மிகம்

ராகு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில், அதாவது மேஷத்தில் அமர்ந்து, ஆன்மிக கிரகமான கேது 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது தீவிர இறை நம்பிக்கையையும் ஆன்மீக ஈடுபாட்டையும் தந்தது. மேலும், 7 மற்றும் 10-ம் அதிபதியான குரு 7-ம் இடமான தனுசு ராசியில் ஆட்சி பெற்று லக்னத்தை பார்த்த காரணத்தால் தெய்வ வழிபாட்டில் தாழாத பக்தியை தந்து மேலும் சிறப்பை தந்தது.

அரசியல்

மேலும், குரு என்பவர் 7-ம் அதிபதி மட்டுமல்ல பதவியை குறிக்கக் கூடிய 10-ம் இடத்திற்கும் உரியவர். இவர் தனது 5-ம் பார்வையால் லாப ஸ்தானம் எனப்படும் 11-ம் இடமான மேஷத்தையும், அதில் உள்ள ராகுவையும் பார்த்த காரணத்தால்தான் 1991-ல் ராகு தசையில் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்றார். மேலும், குரு தனது 9-ம் பார்வையால் சிம்ம ராசியையும், அதில் உள்ள, சந்திரனையும், செவ்வாயையும்  புனிதப் படுத்துகிறார். எனவேதான், சந்திர தசையில் அரசியலில் சேர்ந்தார். சேர்ந்தவுடனேயே கொள்கை பரப்புச் செயலாளராக பதவியை பெற்றார்.  இப்பதவியை தந்தது குரு. 

குருவின் திருவருள்

குரு பார்த்ததால், சந்திர தசையில் அரசியலில் கட்சி பொறுப்பேற்றார். குரு பார்த்ததால் ராகு தசையில் முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இரண்டாவது முறையாகவும் ராகு தசையின் இறுதியில் முதல்வராக பொறுப்பேற்றார். இப்பேர்ப்பட்ட குருதான் தற்போது முதல்வரின் தசையை 20.09.2011 முதல் 16 வருடங்களுக்கு நடத்தக்கூடியவர். இவருடைய தசையில்தான், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்றத்தில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றதும், மீண்டும் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் குருவின் திருவருளால்தான். அப்பேர்ப்பட்ட யோகத்தை அளித்த குருதான், தற்போது முதல்வரின் தசையை நடத்தி கொண்டிருக்கிறார். ஆனால், அதே குரு தற்போது ஏன் இவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்? 

கோள்களின் எதிர்மறை செயல்கள்

பொதுவாகவே, கோள்கள், தான் அமர்ந்திருக்கும் ஸ்தானத்திலிருந்து 6 மற்றும் 8-ம் இடத்திற்கு நகரும் போது, (அதாவது கோச்சார காலத்தில்) எதிர்மறையான வேலைகளைச் செய்யும், நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் தீமையையும், தீமை செய்யக்கூடிய கிரகங்கள் நன்மையையும் செய்யும். இதில் கூடுதலும், குறைவும் அவரவர் செய்த வினைப் பயன்களை பொறுத்து அமைகிறது. 

பாதிப்புக்கள்

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, சூரியன் கும்பத்திற்கு 8-ம் இடமான கன்னிக்கு வரும் போது பாதிப்புகளை தொடர்ந்து தருகிறார். 

1996-ல் புரட்டாசி மாதம் சிறைக்குச் சென்றார். 2001-ல் புரட்டாசி மாதம் முதல்வர் பதவி விலக வைத்தது. 2014-ல் புரட்டாசி மாதம் சிறைக்குச் சென்றார். அரசு பதவியை விட்டு விலக வைத்தது. 2016-ல் புரட்டாசி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு பதவியில் செயல்பட விடாது தற்காலிகமாக விலக்கி வைத்துள்ளது.

சூரியன் தரும் நன்மைகள்

முதல்வர் அவர்களுடைய ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியான புதன் சூரியனுடன் அஸ்தங்கம் என்பதால் புதனுடைய வேலையை சூரியன் செய்கிறார். சூரியன் நின்ற நட்சத்திரம் சதயம், ராகுவின் நட்சத்திரம். ராகு குரு பார்வையில். எனவே, சூரியனே லக்னாதிபதியாகவும், மூன்றாம் அதிபதியாகவும் இருந்து அதிக நன்மைகளை செய்பவர். சூரியன் அரச கிரகம். அதனால், அரசு உயர் பதவியையும், தலைமைப் பண்பையும், அரசியலில் உச்ச நிலையையும் தந்தார். 

சூரியனின் எதிர்மறை விளைவுகள்

இவர் தனது ஸ்தானமான கும்பத்திலிருந்து 8-ம் இடமான கன்னிக்கு வரும்போது, அந்த மாதம் புரட்டாசி மாதமாக அமைந்துவிடுகிறது. இம்மாதத்தில் மட்டும், சூரியன் எப்போதும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவார். 'ஒவ்வொரு வருடத்திலும் புரட்டாசி மாதம் வரத்தானே செய்யும். அப்போதெல்லாம் எதிர் மறையான விளைவுகளை தராதவர் இப்போது மட்டும் ஏன் செய்ய வேண்டும்' என்ற கேள்வியும் சிலருக்கு வருவது இயல்புதான். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அரசு மற்றும் அரசியல் தொடர்பான எதிர்மறையான விளைவுகளைத்தான் அவர் அனுபவித்திருப்பார். அவை பெரும்பாலும் வெளியில் தெரிவது கிடையாது. ரகசியங்கள் எப்போதும் காக்கப்படுவது வழக்கம். 

சூரியனோடு மற்ற கிரகங்கள் கன்னியில் வந்து அமரும்போது, அல்லது சூரியனுக்கு 5 மற்றும் 9-ல் மற்ற கிரகங்கள் அமரும்போது, அவை வெளியில் தெரியக்கூடிய பிரச்னைகளாக மாறி விடுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 1996-ம் வருடம் புரட்டாசி மாதத்தில் சூரியனோடு ராகு உள்ளது. சூரியனோடு ராகு சேரும்போது சூரியனின் ஆதிபத்தியத்தை ராகு எடுத்துக்கொள்ளும். ராகு தனது ஸ்தானத்திற்கு 6 (எதிர் மறை சுற்று 8 - வது )இடத்திற்கு வந்ததால், முதல்வருக்கு நன்மை செய்த ராகு, எதிரான விளைவுகளை தந்து சிறைக்கு அனுப்பியது.

2001-ம் வருடம் புரட்டாசி மாதத்தில் சூரியனுக்கு 9-ல் சனி அமர்ந்து முதல்வர் பதவி விலக வைத்தது. 2014-ம் வருடம் புரட்டாசி மாதத்தில் 1996-ஐப் போலவே, மீண்டும் சூரியனோடு ராகு கூடி முதல்வர் பதவி விலக வைத்தது மட்டுமல்லாது, சிறைக்கும் அனுப்பியது. 2016-ம் வருடம் புரட்டாசி மாதத்தில் சூரியனோடு நடப்பு தசா அதிபதியான குரு அஸ்தங்க நிலை அடைந்து, சூரியனுக்கு 9-ல் உடல் மற்றும் மனதிற்கு உரியவரான சந்திரன் 9-ல் நின்ற 22.09.2016 அன்று உடல் நிலை பாதிப்பை தந்திருக்கிறது. 

முதல்வருக்கு  22.09.2016 அன்று நேர்ந்தது இதுதான்..

புரட்டாசி மாதம் மட்டும் சூரியன் முதல்வருக்கு எதிர் மறையான விளைவுகளை தருவார் என்பது வழக்கம். இந்த மாதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்ட 22.9.16 அன்று, புரட்டாசி மாதம் மட்டும் அல்லாது, அன்று சூரியன் மிகுந்த வலுவான நிலையை அடைந்துள்ளார். கடந்த 22.09.2016 அன்று சூரியன் பிடியில், புதன், குரு மற்றும் சந்திரன், மேலும் செவ்வாய் உதவி செய்து உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கியதே, முதல்வரின் உடல் நிலை திடீர் பாதிப்புக்கு உள்ளானதற்கான முக்கிய காரணியாகும். தற்போது கோசாரத்தில் சூரியன், நடப்பு தசா அதிபதியான குருவும் இணைந்து, கோச்சார சூரியனுக்கு 9-ம் இடத்தில் சந்திரன் நின்றபோது, அவரையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். எதிர் மறையான விளைவுகள் தரும் சூரியனுக்கு, தன்னோடு சேர்ந்து இப்போது மேலும் மூன்று கிரகங்கள் ( புதன், குரு, சந்திரன்) இவை தவிர, நோயை உருவாக்கக் கூடிய 6-ம் அதிபதியான செவ்வாய் லக்னத்தை நேரடியாக பார்க்கும் நிலை அன்று ஏற்பட்டிருக்கிறது.

ஒரே சமயத்தில் 3 கிரகங்கள் சூரியன் கையில், செவ்வாய் உதவிக்கு, அதிகப்படியான உஷ்ணம், ரத்த ஓட்டம் நரம்பு மண்டலத்தை பாதிப்பிற்குள்ளாக்கி நிலை குலைய வைத்துள்ளது. அநேகமாக, 22.09.2016 அன்று சந்திரன் ரிஷப ராசியில் இருந்த போது மதியத்திற்கு மேல் உடல் நிலை பாதிப்பிற்குள்ளாகியிருக்கும். ஜனன ஜாதகத்தில் செவ்வாயும், சந்திரனும் சிம்மத்தில் சேர்ந்து இருப்பதால், ஏற்கனவே, உடல் ரீதியான உஷ்ணமும் உயர் இரத்த அழுத்தம் இருந்திருக்கும், சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் நீரழிவும் சிறிதளவு இருக்கும். ஆனால், நீரழிவு பெரியளவு பாதிப்பை தராது. ஒரே சமயத்தில் இரண்டு நெருப்பு கிரகங்கள் மிகத் தீவிரமாக தாக்கும் நிலை ஏற்பட்ட காரணத்தால் மிக அதிகப்படியான உஷ்ணத்தை உடலுக்கு அளித்து, மேலும், உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. இவையெல்லாம் ஒரே சமயத்தில் வந்து சேர்ந்ததால் அவரின் உடல் நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமாக பாதிக்கு உள்ளாகியிருக்கிறது. 

சூரியன் தலையையும், குரு மூளையையும், செவ்வாய் ரத்தத்தையும், சந்திரன் உடல், மனம் மற்றும் உடலில் உள்ள நீர் சத்தையும், நீர் தொடர்பான சிறுநீரகத்தையும் காப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், புதன் வாயு கிரகமாகும். காற்றை உள்வாங்கி கொடுக்கும் நுரையீரல் மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் காப்பதும் புதன் ஆகும். மேற்கண்ட கிரகங்களை 22.09.2016 அன்று, சூரியன் தன் வசப்படுத்தி கொண்டதால் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி, மேற்கண்ட அவயங்களில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ பாதிப்புகளோ ஏற்படச் செய்திருக்கிறது. 

ஐப்பசியில் வழிபிறக்கும்

வரும் ஐப்பசி மாதம் 14-ம் தேதி வரை, முதல்வரின் உடல்நிலை எல்லா நோய்களையும் தாங்கிக்கொண்டால், அதன் பிறகு நல்ல நிலைக்கு திரும்புவார். குரு அஸ்தங்க நிலையில் இருந்து மாறும் போதும், புரட்டாசி மாதம் கடந்து போகும் நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் தானாக ஏற்படும். கிரக நிலைகள் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு, முழுமையாக மருத்துவத்தையே நம்புவதில் நிச்சயம் பலன் இல்லை. மருத்துவ ரீதியிலான சிகிச்சைகள் ஒரு பக்கம் என்றாலும், மிகத் தீவிரமான பரிகாரங்கள் மூலமாக மட்டுமே இவற்றை சரி செய்ய முடியும். முக்கியமாக மருத்துவத்தை தாண்டி, பரிகாரங்களே இங்கு அத்தியாவசியமாக இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைய, இதுவே, உடனடி தேவை.

பரிகாரம்

சூரியன் வழங்கும் துன்பத்தை போக்கக் கூடிய சக்தி, சிவனிடமும், சிவனடியார்களிடமும் உள்ளது. அதை நோக்கிச் செல்வது சிறப்பு. 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், கண்பார்வை பறிபோன சுந்தரருக்கு கண் அளித்தவர், திருவையாறு ஐயாறப்பர் நாவுக்கரசரின் உடல் நோவு தீர்க்க கயிலை காட்சி தந்தவர். ராமேஸ்வரம் கர்ம வினைகளை போக்கும் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில்  ஒன்றாக திகழ்கிறது  இம்முன்று கோயிலிலும் திருநாவுக்கரசர் அளித்த 6-ம் திருமுறையில் உள்ள வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி எனத் துவங்கி, கயிலை மலையானே என முடியும் 30 பாடல்களையும் (551 முதல் 580 வரை) தினசரி காலை மாலை பாடச் செய்து சிறப்பு அபிஷேக அர்ச்சனை செய்வது சிறப்பு. இவற்றுடன் இந்த பூஜையின் திருநீற்று பிரசாதத்தை, முதல்வருக்கு நெற்றியில் இடுவதும் அவசியம். மேலும், முதல்வர் அருகில் ஒருவர் இப்பாடலை தொடர்ந்து பாடி வர வேண்டும். இப்பாடல் சூரிய சந்திரர்களால் நமக்கு ஏற்படும் இன்னல்களை உடனடியாக களைவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றுடன், காஞ்சிப் பெரியவரின் ஜீவசமாதி பல்வேறு நோய்களை போக்கும் திருத்தலமாக உள்ளது. அந்தப் பெரியவரின் ஜீவசமாதி திருநீற்று பிரசாதத்தையும் முதல்வருக்கு நெற்றியில் இடுவது அசியம். இவைகளை அவசிய அவசியமாக செய்ய வேண்டிய பொறுப்பு, முதல்வரின் மீது அக்கறைக் கொண்டு அவரின் அருகில் உள்ளவருக்கே உண்டு. இவை தவிர, அனைத்து சிவன் கோயிலில் வழிபாடும், சிவனடியார்களுக்கு, உணவும் உடையும் முதியோர் இல்லங்களில் அன்னதானமும் அளித்து முதியவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து பெரியவர்களுடைய உடல் உபாதைகள் களையப்படும்போது, முதல்வர் அவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இயல்பாக தென்படும்.

பீனிக்ஸ் பறவையைப் போன்ற ஜாதகம்

முதலமைச்சரின் ஜாதகம் பீனிக்ஸ் பறவையைப் போன்றது. எவ்வளவு மோசமான சூழ்நிலைக்கு இழுத்துச் சென்றாலும், அதைவிட வலுவாக எழுச்சி பெற்று, எழுவார் என்பதை பல சமங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் தெய்வ அனுகூலம் ஒரு பக்கம் என்றாலும், ஜாதக ரீதியாக ஐந்தாம் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதே முக்கிய காரணமாகும். தற்போது அவரும் தனது ஸ்தானத்திற்கு எட்டாம் இடத்தில் இருக்கக்கூடிய சூழலில் இருப்பதால், ஸ்தான நிலை மாறும்போது, மீண்டும் எழுச்சி பெற வேண்டும். இதுவே தமிழக மக்கள் அனைவரின் பிரார்த்தனையாகவும் இருக்கிறது. 

- ரா.வளன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ