Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’பேப்பர் ஃப்ரீ’ அலுவலகம்...ஆன்லைன் வர்த்தகம்...100 கோடி இலக்கு.. அசத்தும் பூம்புகார்!

ஆக்கப்பூர்வமான தலைமையும், செயல்திறன் மிக்க ஊழியர்களும் இருந்தால் ஒரு துறை நிச்சயம் வளர்ச்சி அடையும். அதற்கு, உதாரணம், பூம்புகார் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம். தமிழகத்தின் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களிடம் இருந்து, ஐம்பொன் சிலைகள், மரச் சிற்பங்கள், ஓவியங்கள், கற்சிலைகள், தக்கைச் சிற்பங்கள், தோல், சணல் கலைப்பொருட்களை வாங்கியும், கலைஞர்களைக் கொண்டு தயாரித்தும் விற்பனை செய்யும் இந்த நிறுவனம், 1973, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை தொடாத விற்பனை இலக்கை இந்தாண்டு எட்டிப் பிடித்து சாதித்திருக்கிறது. 

மத்திய அரசின் பதிவுகளின் படி, தமிழகத்தில் சுமார் 60,000 கைவினைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். பதிவு செய்யப்படாத கலைஞர்களின் எண்ணிக்கை மேலும் பல ஆயிரங்களைத் தொடும். அசர வைக்கும் திறனைக் கொட்டி பொருட்களை தயாரிக்கும் இந்தக் கலைஞர்களுக்கு விற்பனை நுட்பங்கள் தெரிவதில்லை. அதனால், இத்தொழிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. தமிழக கைவினைஞர்களின் தயாரிப்புகளுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதன் பலனை கலைஞர்கள் அனுபவிக்க முடியவில்லை. இப்படியான சூழலில் தான் பூம்புகார் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்துக்கு சென்னை, டெல்லி, கொல்கத்தா, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சுவாமிமலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் விற்பனை மையங்களும், நாச்சியார்கோவில், வாகைக்குளம், சுவாமிமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மாமல்லபுரம், மதுரை ஆகிய இடங்களில் உற்பத்தி மையங்களும் உள்ளன. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இருப்பார். ஆனாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது "பனிஷ்மெண்ட் பணி"யாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் விரக்தியான மனநிலையில் இந்த இருக்கையில் அமரும் அதிகாரிகள், "வந்தோமா, சென்றோமா" என்ற அளவோடு முடித்துக் கொள்வார்கள். அதனால், மிகப்பெரும் விற்பனை வாய்ப்புகள் இருந்தும் இந்நிறுவனம் பெரிய அளவில் வளரவில்லை. 

தொடங்கிய காலம் முதல் இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 30 கோடி ரூபாயைத் தாண்டவில்லை. இந்த 43 ஆண்டுகால நிலையை தான் பணியேற்ற ஒரே ஆண்டில் மாற்றியிருக்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்தோஷ்பாபு. 2015-16 நிதியாண்டில் இந்த விற்பனை 35 கோடியைத் தாண்டியிருக்கிறது. 2016-17-ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் இலக்கு வைத்து இயங்குகிறது இந்நிறுவனம். 

எப்படி இது சாத்தியமானது..? 

“கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராகவும், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ள சந்தோஷ்பாபு,  2014 செப்டம்பரில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனேயே விற்பனை மையங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்யத் தொடங்கினார். அலுவலகத்தை மட்டுமின்றி, அனைத்து விற்பனை மையங்களையும் "பேப்பர் ஃப்ரீ" அலுவலகமாக மாற்றினார். கைவினைப் பொருட்களை 360 டிகிரி பெரிதாக்கிப் பார்த்து வாங்கும் வகையில் இணையதளம் ஒன்றை உருவாக்கி ஆன்லைன் விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார்.  

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் பூம்புகார் நிறுவனத்துக்குப் பக்கங்கள் தொடங்கப்பட்டன. ஸ்னாப்டீல், ப்ளிப்கார்ட், இண்டியாமார்ட், கிராப்ட்வில்லா, அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பூம்புகாருக்கு என்று தனிப்பக்கங்கள் உருவாக்கி விற்பனை தொடங்கியது. ஆன்லைன் மூலமாக மட்டும் 2015-16 நிதியாண்டில் 10.53 லட்சத்துக்கு விற்பனை நடந்தது. 

"திங்க் டேங்க்" எனப்படும் 2 ஆலோசனைக் குழுக்களை உருவாக்கினார். ஒரு குழுவில், பிரபலமான கலைஞர்கள் இடம் பெற்றார்கள். இன்னொரு குழுவில் அலுவலக ஊழியர்கள் இடம்பெற்றார்கள். இந்த இரண்டு குழுக்களும் பூம்புகார் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கலாம். அவர் பொறுப்பேற்றபோது, அலுவலகத்தில் 7 கம்ப்யூட்டர்கள் தான் இருந்தன. ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொண்டு வந்தார். மொத்த பூம்புகார் வளாகங்களும் ஆன்லைனில் இணைந்தன. விற்பனை மையத்தின் பொறுப்பாளர்களுக்கு ஐபேடு கொடுத்தார். அதன்மூலம் தினமும் அவர்கள் முகம் பார்த்து பேசுவார். ஷோரூமில் பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் விதத்தை லைவ்வாக காட்டச் செய்து, கரெக்ஷன் சொல்வார். 

முன்பு, பூம்புகாரின் உற்பத்தி மையங்களில் ஒரு சிலை செய்ய வேண்டும் என்றால், அதற்கு அப்ரூவல் வாங்குவது சவாலான வேலையாக இருக்கும். அங்கிருந்து விண்ணப்பம் அனுப்பி, நான்கைந்து டேபிள்களுக்கு மாறி அனுமதி பெற குறைந்தது 25 நாட்களாவது ஆகும். இதை முற்றிலுமாக மாற்றினார். 25 நிமிடத்தில் ஆன்லைனில் அனுமதி பெற்று விடலாம். சென்னை, ஷோரூமில் "ப்ரீ ஹோம் டெலிவரி" திட்டத்தை ஆரம்பித்தார். ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்தால், அடுத்த சில மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடும். 

ஷோரூம் விற்பனையையும், ஆன்லைன் விற்பனையையும் மட்டுமே நம்பியிராமல், இன்டீரியர் செய்யும் வேலையையும் தொடங்கினார். சென்னை ஏர்போர்ட்டில் 5.68 கோடிக்கும், சென்னை மாநகராட்சியில் 43 லட்சத்துக்கும், எண்ணூர் துறைமுகத்தில் 1.10 கோடிக்கும் பூம்புகார் நிறுவனம் இன்டீரியர் பணிகளை செய்து தந்தது. 

அரசு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கலைப்பொருட்கள் வாங்க டெண்டர் விடுவதைத் தவிர்த்து நேரடியாக பூம்புகார் நிறுவனத்திலேயே கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசாணை வெளியிடச் செய்தார். இப்படி விற்பனையை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்ததோடு, செலவுகளையும் குறைத்தார். 

ஒரு 407 வாகனம்... கைவிடப்பட்டு பல வருடங்களாக அலுவலகத்தில் நின்றது. பொருட்கள் பரிவர்த்தனை செய்ய தனியார் வாகனங்களைத் தான் பயன்படுத்தினார்கள். அதற்கே ஆண்டுக்கு கோடிக்கணக்கில் செலவாகியது. இந்த வாகனத்தை டெண்டர் விட்டபோது 60 ஆயிரத்துக்கு கேட்டார்கள். இவர், அதை சரி செய்து, பிரசார வாகனமாகவும், பொருள் பரிவர்த்தனைக்கான வாகனமாகவும் ஆக்கிவிட்டார். அதனால் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுப்பதேயில்லை.

முன்பெல்லாம் விற்பனை மையங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போகும். அதற்கெல்லாம் எந்தக் கணக்கும் இருக்காது. இவர் எம்.டியாகப் பொறுப்பேற்றதும், எல்லாப் பொருட்களுக்கும் பார்கோடிங் கொண்டு வந்தார். அதன்மூலம் பொருட்கள் காணாமல் போவது உடனுக்குடன் கண்டறியப்பட்டதோடு, எந்தப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்பதையும் எளிதாகக் கண்டறிந்து அதன் உற்பத்தியை அதிகப்படுத்த முடிந்தது. 

நிறைய திட்ட வரைவுகளை உருவாக்கி, மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார். வழக்கமாக, கைவினைக் கலைஞர்கள் மரபு சார்ந்த டிசைன்களில் மட்டுமே பொருட்களை உருவாக்குவார்கள். சந்தையில் பலவிதமான தேவைகள் உண்டு. அதற்கேற்றவாறு உற்பத்தி வடிவத்தை மாற்றும் வேலைகளிலும் இறங்கினார். டிசைன் ரிசர்ச் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் உதவியோடு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 1.68 கோடி செலவில் 3டி பிரிண்டிங் டிசைன் சென்டர் ஒன்று கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஷோரூமுக்கு இளைஞர்களை ஈர்க்கும் வகையில், சென்னை கிளையில் பாரம்பரிய உணவுகள் கொண்ட ஒரு கஃபேயை திறந்திருக்கிறார்..." என்று சிலாகிக்கிறார்கள் ஊழியர்கள். 

இதுகுறித்து, பூம்புகார் நிர்வாக இயக்குனர் சந்தோஷ்பாபுவிடம் பேசினோம். 

“தனிப்பட்ட முறையில் நான் புதிதாக எதையும் செய்யவில்லை. ஊழியர்களின் ஆர்வமும், உழைப்புமே இதற்குக் காரணம். இந்தாண்டு 40 கோடியைத் தாண்டியிருக்க வேண்டும். மழை மற்றும் தேர்தல் காரணமாக சில விற்பனை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டன. எங்களைப் பொறுத்தவரை இது வளர்ச்சியில்லை. இலக்கு மிகப்பெரியதாக இருக்கிறது. அடுத்த நிதியாண்டில் 100 கோடி விற்பனை இலக்கை எட்டுவோம்..." என்கிறார் அவர். 

தமிழகத்தில் பெரும்பாலான கைவினைத் தொழில்கள் பூம்புகார் நிறுவனத்தை நம்பியே இருக்கின்றன. பல ஆயிரம் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பூம்புகார் நிறுவனத்தின் வளர்ச்சி, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. 

- வெ.நீலகண்டன்

படங்கள்: ஆ.முத்துக்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ