Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீட்டுக்காக பண பேரம் நடத்தியது தி.மு.க!  -கூட்டத்தில் குமுறிய காங்கிரஸ் தலைவர்கள்

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது. ' தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பணபேரம் நடத்துகிறார்கள். தோற்றுப் போகும் வார்டுகளைப் பெறுவதைவிட, தனித்துப் போட்டியிடுவோம்' என மாநிலத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். 

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பங்கீட்டில் தொடக்கம் முதலே குழப்பம் நீடித்து வந்தது. ' மாவட்டச் செயலாளர்களிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்' என தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியாகக் கூறிவிட்டதால், காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்டங்களில் பேசச் சென்றனர். அங்கும், எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், திருச்சி உள்பட பல மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளித்தனர். சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 14 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. எவ்வளவோ போராடியும் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இறங்கி வரவில்லை. இதையடுத்து, நேற்று நடந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில், தி.மு.கவின் செயல்பாடு குறித்து விமர்சித்துப் பேசியுள்ளனர். திருநாவுக்கரசரும், ' தேர்தல் தேதி அறிவித்ததும், கூட்டணியில் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவோம். இந்தமுறையும் உரிய இடங்கள் வழங்கப்படாவிட்டால், மேலிடத்தில் பேசி தனித்துக் களம் காண்பது பற்றி அறிவிப்போம்' எனத் தெரிவித்துவிட்டார். 

" நேற்று கூட்டத்தில், ' தி.மு.கவுடன் கூட்டணி வேண்டாம்' என்று கையை உயர்த்தியவர்கள் 11 மாவட்டங்களின் தலைவர்கள் மட்டும்தான். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் 45 பேர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். இவர்களில் சிலர் பேசும்போது, ' தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்றால், தனித்துப் போட்டியிட்டு எப்படி வெற்றி முடியும்? நமக்கு அவ்வளவு போதுமான வாக்கு வங்கி இல்லை. மாற்று ஏற்பாடாக எந்தக் கட்சியோடு சேர முடியும்? அதற்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை. ராகுல் வந்துவிட்டுச் சென்ற பிறகு, தி.மு.கவுடன் நமக்கு இடைவெளி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உள்ளாட்சி அறிவிப்பு வெளியாவதற்குள், தி.மு.கவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட வேண்டும்' என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்" என்கிறார் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர்.  

" நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தலைவர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், உள்ளாட்சி என்பது கட்சித் தொண்டர்களின் திருவிழா. இதில் வெற்றி பெற்று ஏதேனும் ஒரு அடையாளத்தைப் பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆரம்பம் முதலே, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை. நாங்கள் வலிமையுள்ள நாகர்கோவில் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கூடுதல் இடங்களை ஒதுக்கினார்கள். அதுவும், எங்கள் பலம் அவர்களுக்குத் தேவை என்பதால். ஆனால், திருச்சி உள்பட சில மாவட்டங்களில் தி.மு.க நிர்வாகிகள் எங்களை அவமானப்படுத்தினார்கள். சீட் கொடுப்பதற்காக பண பேரத்தை நடத்தினார்கள்" எனக் கொந்தளித்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர், " எங்களுக்கு சீட் ஒதுக்காமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்தார்கள். 

சீட் கேட்டுச் சென்றால், ' ஏற்கெனவே எங்கள் கட்சி பொறுப்பாளருக்கு அந்த வார்டை ஒதுக்கிவிட்டோம். அவர் பத்து லட்சம் கொடுத்திருக்கிறார். அதைக் கொடுத்துவிட்டு சீட் வாங்கிக் கொள்ளுங்கள்' என பகிரங்கமாகவே கேட்டார் ஒரு நிர்வாகி. தவிர, ' இந்த இடத்தில் உங்களுக்கு என்ன வலிமை இருக்கிறது? நீங்க நின்னா அ.தி.மு.க வெற்றி பெறும்' என கிண்டல் செய்தார்கள். இது ஏதோ மாவட்டச் செயலாளர்களின் திட்டமாக தெரியவில்லை. எங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை தி.மு.க முன்னமே எடுத்துவிட்டதை உணர்ந்தோம். இவ்வளவு அவமானத்துக்குப் பிறகும், சீட் வாங்குவதைவிட தனித்துப் போட்டியிட்டு கூடுதல் இடங்களில் வெற்றி பெறலாம் என்பதைத்தான் கூட்டத்தில் எடுத்து வைத்தோம்" என்றார் விரிவார். 

" ராகுல்காந்தியின் அப்போலோ வருகை ஒருபுறம் இருந்தாலும், முதல்வர் உடல்நிலை குறித்து ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லி வருவதை தி.மு.க தலைமை ரசிக்கவில்லை. இதுவே இளங்கோவன் இந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என தி.மு.க நிர்வாகிகள் பேசியுள்ளனர். வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் தனித்துக் களமிறங்குமா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்" என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

-ஆ.விஜயானந்த்
படங்கள்:ஆ.முத்துக்குமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close