Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருமைநாயகத்தை அலற வைத்த பெண் போலீஸ் ஆடியோ! - திகில் திருப்பம்

நெல்லையில் பெண் போலீஸை திருமணம் செய்து கொள்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ஏமாற்றியதால் மனம் உடைந்த  அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் இருவரும் பேசிய ஆடியோ வீதிக்கு வந்துள்ளது.

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பொட்டல் அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராமு (23). இவர், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றினார். இவர், சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ஆலங்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக பணியாற்றிய ஆலங்குளத்தை சேர்ந்த அருமைநாயகத்துடன் நட்பு ஏற்பட்டது. அருமைநாயகத்துக்கு திருமணமாகி, குழந்தை உள்ளது. அதையெல்லாம் மறுத்து ராமுவுடன் அருமைநாயகம் நெருங்கிப் பழகினார்.

இவர்களது பழக்கம், எல்லைமீறியதாக தெரிகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருமைநாயகத்திடம் பலமுறை வற்புறுத்தினார் ராமு. ஆனால் அதை அவர் நிராகரித்து வந்தார். இந்தநிலையில் அருமைநாயகம், தேர்வு எழுதி சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இதற்கிடையில் திருமணத்துக்கு மறுத்த அருமைநாயகம் மீது ராமு, போலீஸில் புகார் கொடுத்தார். அப்போது ராமுவை சமரசப்படுத்திய அருமைநாயகம் வழக்குப்பதிவு செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதன்பிறகு ராமுவை அருமைநாயகம் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் ராமு, மனுதாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அருமைநாயகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் மனம் உடைந்த ராமு, கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை அருமைநாயகத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அருமைநாயகமும், ராமுவும் பேசிய போன் உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மூன்று ஆடியோக்கள் போலீசிடம் சிக்கியுள்ளன. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

அந்த போன் உரையாடலில் அருமைநாயகம், ராமுவை திருமணம் செய்து கொள்வதாக சொல்கிறார். அதற்கு ராமு சம்மதிக்காமல் கண்ணீர் மல்க பேசுகிறார். அவரது குரல் உடைந்து காணப்படுகிறது. மேலும் மனமுடைந்து அவரது வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கித்தடுமாறுகின்றன. இவ்வாறு உரையாடல் நீண்ட நேரம் செல்கிறது. ஒருகட்டத்தில் அருமைநாயகம், 'போலீஸ் டி.ஐ.ஜி அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்துவிடு. அங்கு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினால் இந்த வழக்கு முடிந்து விடும். நீ என் மனைவி என்ற உரிமையில் சொல்கிறேன்' என்று ராமுவிடம் பேசுகிறார். ஆனால் அதற்கெல்லாம் ராமு சம்மதிக்கவில்லை. இதன்பிறகு ராமுவின் உறவினர் ஒருவர் பேசுவதாக சொல்கிறார். இத்துடன் ஒரு ஆடியோ முடிவடைகிறது. 'என்னை இந்த கட்டத்திலிருந்து நீ காப்பாற்றினால் உன்னை நான் காப்பாற்றுவேன்' என்கிறார் அருமைநாயகம். அதற்கு ராமு, என்வாழ்க்கை முடிந்து விட்டது என்று கதறுகிறார்.  அடுத்து 'ஒன்னும் இல்லடா.... உனக்கு என்று அன்பாக சொல்கிறார்' அருமைநாயகம். 'ஒன்னும் இல்ல... ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு இவ்வளவு பிரச்னையை கொடுத்திட்டீங்களே... என்னால எப்படி வெளியில தலை காட்ட முடியும்.. காரித்துப்புவாங்க' என்கிறார் ராமு. இவ்வாறு ஆடியோ உரையாடல் தொடர்கிறது.

ராமு, தற்கொலை செய்தவுடன் அவரது மரணத்துக்கு நீதிகேட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி தினகரனிடம் சில அமைப்புகள் மனு கொடுத்தனர். அருமைநாயகத்தின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ராமுவை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால் மனம் உடைந்த பெண் காவலர் ராமு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

- ஆர்.பி., எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ