Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவின் உதவியும் பணியாளர்களின் நெகிழ்ச்சியும்!

எம்.ஜி. ஆர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் வேலை பார்த்தவர்களில் தொடங்கி  அவரை நேரில் பார்த்தவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அவர் செய்த உதவிகள் ஏராளம். அதனாலே வள்ளல் எம்.ஜி .ஆர் என இன்று வரை மக்கள் அவரை அழைக்கின்றனர். அவர் வழி வந்த ஜெயலலிதாவுக்கு இரும்புப் பெண், சிறந்த நிர்வாகி போன்ற பெயர்கள் கிடைத்தாலும் உதவி செய்வதில் எம்.ஜி.ஆர் போன்றவர் என்ற பிம்பம் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவரும் முதல்வராக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் நிறைய பேருக்கு உதவிகள் செய்து வருபவர்தான்.

எளிய மனிதர்கள் சிலருக்கு ஜெயலலிதா செய்த உதவிகளின் பட்டியல் பெரிது. அதில் சில மட்டும் இங்கே...

காட்சி 1

2011-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, கோட்டையில் இருந்து வீட்டுக்கு திரும்பியபோது, போயஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு மரத்தடியை பார்த்துக்  கடும் கோபம் அடைந்தார். வேதா இல்லத்தின் வாசலில் காத்து இருந்த IAS, IPS, அதிகாரிகள் யாரையும் சட்டை செய்யாமல் முதல்வர் கோபத்துடன் சென்றதைப் பார்த்து அரண்டு போயினர் அங்கு கூடி இருந்த அனைவரும். முதல்வரின் கோபத்துக்கு ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு இருக்க, வீட்டுக்குள் இருந்து ஒடி வந்த உதவியாளர் அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் காதுகளில் கிசுகிசுத்தார். சீறிக் கொண்டு சென்ற வாகனங்கள் சிறிது நேரத்தில், வேதா இல்ல வாசலில் வந்து களைத்து நின்றன.

அதிகாரத்தின் அத்தனை ஜோடி கண்களும் வண்டியின் கதவு திறக்கக் காத்து இருந்தன. கதவுக்குப் பின்னால் கிழிந்த கைலியும், விடுமுறை போதையில் சிவந்த கண்களுமாய் மெலிந்த தேகம் ஒன்று கதவை திறந்து கொண்டு இறங்கியது. மற்றொறு வண்டியில் இருந்து வறுமையே இறங்கியது  பெண் ஒருவரும் இறங்கினார் . இவர்கள் வந்ததை உறுதி செய்து கொண்டு சென்றார் உதவியாளர். இப்போது வேதா இல்ல கதவு திறக்கப்படுகிறது. வெளியில் காத்து இருக்கும் அதிகாரிகள் தாங்கள் கையில் உள்ள பூங்கொத்துகளை மீண்டும் ஒரு முறை இறுக்கிக்  கொண்டனர்.

முதல்வர் முதலில் யாரை அழைப்பார் என மூத்த அதிகாரிகள் தங்களுக்குள் மனப்போர் நடத்தி கொண்டு இருந்தனர். உதவியாளர் நேராக வந்து மெலிந்த தேகதுடன் குறுகி நின்று கொண்டு இருந்தவரை அழைத்தார் "மணி அண்ணன் உள்ள வா ,நீயும் வாம்மா" என இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்த ஜெயலலிதா, “ நீங்க ரெண்டு பேரும் ஏன் இன்னைக்கு கடை திறக்கல” என கேட்க இருவரும் திரு திரு வென முழித்தனர்.

'பயப்படாம சொல்லுங்க'. 

'இல்லம்மா... இது முதல்வர் போற வழி. இனி மேல் இங்க கடை வைக்க கூடாதுன்னு போலீஸ்காரங்க சொல்லிட்டாங்கம்மா” என டீ கடை மணி தைரியத்தை வரவழைத்து சொல்லி முடித்தார்.

'நேத்துக்  கொண்டு வந்த சாப்பாட்டைக்  கூட விக்க விடாம அனுப்பிட்டாங்கம்மா' என அந்தப்  பெண்ணும் சொல்ல, உதவியாளரைப்  பார்த்து அந்த கமிஷனரை வரச் சொல்லு என ஜெயலலிதா சொல்ல அடுத்த நொடி என்ன நடந்தது என்று உதவியாளர் கமிஷனருக்கு விளக்கிக்  கூறினார்.

எங்கக்  கட்சியில இருக்குற பாதி பேரு ரொம்ப சாதாரணமானவங்க. இந்த ஏரியாவுல அவங்க சாப்பிடுற மாதிரி இருக்குறது இவங்க கடை மட்டும் தான். எனக்கு என்ன செய்வீங்கன்னு தெரியாது இன்னும் ஒரு மணி நேரத்துல இவங்க கடை அங்க இருக்கனும்.போலீஸ்காரங்க வருவாங்க போவாங்க அவங்க சொன்னாங்கன்னு இனிமேல் கடையை எடுக்கக் கூடாது புரியுதா என்ன... ஜெயலலிதா சொல்லி முடிக்க, நடப்பது கனவா நனவா என புரியாமல் முழித்த படியே வணக்கம் வைத்துவிட்டு வெளியே வந்தனர். மணியும்,சாப்பாடு கடை அக்காவும்.

கமிஷனர், மணியைப் பார்த்து சரி கடையை போய் திறங்க என கூற, “இப்ப எப்படி சார் திறக்க முடியும்? ரெண்டு நாளா  கடைய திறக்கலை. கையுல காசு இல்ல. அதுவும் இல்லாம 1 மணி ஆச்சு. இனிமேல்நான் எங்க போய் பால் வாங்கி டீ போட்டு...” என எந்தவித பயமும் இல்லாமல் மணி சொல்லி முடிக்க, சரி போங்க உங்களுக்கு தேவையான பொருட்கள் வந்து சேரும் என்றார் கமிஷனர்..

அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டில் நின்று கொண்டு இருந்த மணியின் சைக்கிளையும்,அக்காவின் சாப்பாடு பாத்திரங்களும் போயஸ் கார்டன் சாலைக்கு எடுத்து வந்தது காவல்துறை. சைக்களில் இருந்த டீ கேனில் முழுவதுமாக டீ நிரப்பப்பட்டது.அக்காவின் பாத்திரங்கள் முழுவதும் சரவண பவன் சாப்பாடு நிரம்பி வழிந்தது. சாப்பாட்டையும் டீயையும் இலவசமாக அனைவருக்கு வழங்கி கொண்டு இருந்தனர் இருவரும்.

காட்சி 2

அவருக்கு கார்டனில் செடிக்கு தண்ணீர் ஊற்றும் வேலை. வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி வேதா இல்ல போர்டிகோ. அங்கு உள்ள நீர் ஊற்று, அதை சுற்றியுள்ள புல்தரைகளை பராமரிப்பது. ஓரங்களில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவது பலர் வந்து செல்லும் வாசலை சுத்தமாக வைத்து கொள்வது என வேதா இல்லத்தில் மிக பொறுப்பான பதவி. பொதுவாக இந்த வேலையை கவனிப்பவர்கள் யாரும் கார்டனில் வெகு நாட்கள் நீடித்தது இல்லை என்பார்கள்.

அவர் பொறுப்பு ஏற்கும்போது புல் தரைகள் காய்ந்து இருந்தன .நீர் ஊற்று செயல்படவில்லை. உடனடியாக களத்தில் இறங்கினார். தினமும் புல் தரைக்கு நீர் ஊற்றி பராமரிக்கத் தொடங்கினர். அதே போல் போர்டிகோ முதல் கேட் வரையுள்ள தரையை ஒரு நாளைக்கு 10 முறை அவர் செய்த சுத்தத்தால் பழைய மார்பிள் எல்லாம் உயிர் பெற்று. புதுசாக சிரித்தது. ஸ்பெஷல் கவனிப்பால் புற்கள்  உயிர் பெற்றன. 

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்த காலகட்டம். கார்டனில் இருந்து கோட்டைக்குச்  செல்ல முதல்வர் ஜெயலலிதா தயாராகிக்  கொண்டு இருந்தார்.போர்டிகோவில் அவருக்கான வாகனம் தயாராக இருந்தது.வேதா இல்ல வாசலை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா முகம் மாறியது. காரில் ஏறிய மறு நொடி தன் உதவியாளரை அழைத்தார். இந்த போர்டிகோவை கவனிக்கும் நபரை கோட்டைக்கு வரச் சொல்லுங்கள் என கூறிவிட்டுச் சென்று விட்டார். கார்டனுக்குள் நுழைந்தவரை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டனர்.

'அதிக பிரசங்கி தனமா பண்ணாதேன்னு சொன்னா கேட்டியா'. 'புல் தரையை சரி பண்ண வேண்டான்னு ஒரு தடவ அம்மா சொன்னாங்க'. அதனால தான் நாங்க யாருமே சரி பண்ணல. நீ என்னடான்னா அத போய் சரி பண்ணி இருக்க போ. இன்னையோட உன் சீட்டு கிழிஞ்சது. உனக்கு முன்னாடி இருந்தவனாவது ஆறு மாசம் வரைக்கும் தாக்குப் பிடிச்சான். நீ அது கூட இல்ல” என ஊழியர்கள் கூறியதைக்  கேட்டு தூக்கிவாரி போட்டது அவருக்கு.

பயத்துடன் கோட்டையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். முதல் முறையாக தலைமை செயலகத்துக்குள் அதுவும் முதல்வரை சந்திக்க. ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும் மறு பக்கம் வேலை போகப் போகிறதோ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தார். கோட்டை வாயிலில் நின்ற காவலர்கள் முதல்வரின் செயலர்களிடம் உறுதிப்படுத்திக்  கொண்டு அவரை முதல்வரின்  அறை இருந்த தளத்துக்கு அனுமதித்தனர்.மூன்று மணி நேர காத்திருப்புக்குப் பிறகு முதல்வர் அறைக்குள் அனுப்பப்பட்டார்.

உள்ளே இருந்த ஜெயலலிதா ''இனி மேல் நீ கார்டனுக்கு வேலைக்கு வர வேண்டாம்''என சொல்ல அவருக்கு கண்ணீர் கோர்த்துக்  கொண்டு நின்றது. பயத்துடன் நின்றவரை பார்த்து.’ நாளையில் இருந்து இங்க வேலைக்கு வந்துரு.உனக்கு இனிமேல் தலைமைச் செயலகத்துல தான் வேலை’ என கூறி அடித்து வைக்கப்பட்டு இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை அவர் கையில் கொடுத்தார் ஜெயலலிதா.

இரத்த ஓட்டம் ஒரு நிமிடம் நின்று ஓடியது போல் இருந்தது அவருக்கு. சட்டசபையில் நான் உட்காரும் இருக்கையை சுத்தமாக வைத்து கொள்வது தான் உன் வேலை. என்னை ஒரு கொசு கடிச்சா கூட உன்னை சும்மா விட மாட்டேன் என ஜெயலலிதா சிரித்துக்  கொண்டே சொல்ல அங்கு இருந்த அனைவரும் அனைவரும் சிரித்தனர்,

காட்சி 3

ஜெயலலிதாவை முக்கிய பிரமுகர்களைச்  சந்திக்க வரும்போது அந்தச்  சந்திப்பை புகைப்படம் எடுக்க நேரம் ஒதுக்கப்படும். சந்திப்பின் போது உள்ளே  அனுப்பப்படும் கேமரா மேன்கள் ஜெயலலிதா சைகை செய்த உடன் வெளியே சென்று விட வேண்டும். அது போன்ற ஒரு சந்திப்புக்காக கேமராமேன்கள் வேதா இல்லத்தில் காத்து இருந்தனர்.


டெல்லியில் இருந்து வந்து இருந்த தொழில் அதிபருக்கு அன்று சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கேமராமேன் உள்ளே அனுப்பப்பட்டனர். வழக்கமாக உள்ளே சென்ற 5 நிமிடத்தில் ஜெயலலிதா சைகை காட்டி விடுவார் அவர்களும் வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் அன்று பத்து நிமிடத்துக்கு மேல் ஆகியும் ஜெயலலிதா எந்த சைகையும் காட்டவில்லை.கேமராமேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்க பொறுத்துப் பார்த்த தொழில் அதிபர் கேமரா மேன்களை பார்த்து '' படம் எடுத்துட்டீங்கன்னா வெளியில போங்க. இப்படியா நின்னுகிட்டு இருப்பீங்க. மேனர்ஸ் இல்ல'' என சொல்ல சிவந்து விட்டது ஜெயலலிதாவின் கண்கள்.

'first you may get out 'சத்தம் வந்த திசையை நோக்கி தொழிலதிபர் திரும்ப,” மிஸ்டர் முதல்ல நீங்க வெளிய போங்க. என் வீட்டுக்குள்ள வந்துட்டு என் ஸ்டாஃப வெளிய போகச் சொல்ல நீங்க யாரு? நீங்க உங்க தேவைக்காக இங்க வந்து இருக்கீங்க. அவங்க எனக்காக இங்க இருக்காங்க.” என கோவத்தில் ஜெயலலிதா கொதிக்க கார்டன் ஊழியர்கள் அந்த தொழிலதிபரை அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.

கோபம்  குறையாத ஜெயலலிதா, கேமராமேனை பார்த்து ”தைரியமா எதிர்த்து பேச வேண்டியதுதான. இனி மேல் யாராவது என் முன்னாடி உங்கள அப்படி பேசுனா அவங்ககிட்ட தைரியமா பேசணும்” என்றாராம் ஜெயலலிதா.

 

- பிரம்மா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ