Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினாலும் கைது... மிரட்டும் வழக்குகள்!

கோவை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அடுத்தடுத்து சிலர் கைதாகி வரும் நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து பேசியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவதூறு பரப்பினால் கைது  செய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் சமூக வலை தளங்களில் முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக மதுரை, நாமக்கல்லைச் சேர்ந்த இருவரை போலீசார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து பேசியதாக இருவரை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் புனிதாதேவி. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்றார். அப்போது தொண்டாமுத்தூர் 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தனக்கு அறிந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது முதல்வரின் உடல்நிலை குறித்து பேச்சு கிளம்பியது. வங்கியில் பணியாற்றும் ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவர் முதல்வர் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல்களை தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து புனிதா தேவி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். கட்சி நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பாக புனிதா தேவி தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக வங்கி ஊழியர்களிடம் பேசினோம். "வங்கியில் இருந்தபோது, முதல்வர் உடல்நிலை குறித்த மெசேஜ் வந்தது. அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம். யாரும் வதந்தியை பரப்பவில்லை. இதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன," என்றனர்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூரில் அமைச்சர் உத்தரவின் பேரிலேயே இந்த வழக்கு பதியப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இனி பேசினாலே கைது செய்யப்படும் என்ற ரீதியில் தொடர்ந்துள்ள போலீசாரின் நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- தி.விஜய்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ