Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சிக்கலுக்கு இவர்தான் காரணமா...?

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்று, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை, திருநாவுக்கரசர் அ.தி.மு.க பக்கம் திருப்புகிறார் என்று தி.மு.கவினர் புலம்ப, அ.தி.மு.க வினரோ ஆச்சர்யத்தோடு பார்க்கின்றனர்.

கடந்த 2004 முதல் 2013 இறுதி வரை இணைபிரியாத கூட்டணியாக இருந்து வந்தது தி.மு.க- காங்கிரஸ். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பிரிவை சந்தித்த இந்த கூட்டணி மீண்டும் 2016 சட்டமன்ற தேர்தலில் கரம் கோர்த்தன.இந்த கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாவிட்டாலும், பலமான எதிர்க்கட்சியாக இந்த கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த இளங்கோவன் ராஜினாமா செய்ய, கட்சிக்குள் தலைவர் பதவிக்கு ரேஸ் ஆரம்பித்தது. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களின் கோஷ்டி அரசியலால் மிரண்டு டெல்லி தலைமை தலைவர் அறிவிப்பையே தள்ளிப்போட வேண்டிய நிலைக்கு வந்தது.

அதேநேரம் சட்டமன்றத்தில் தி.மு.க வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்து வந்தது. ஆனால் தி.மு.கவின் முக்கிய தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் ஒத்துப்போகாத நிலை இருந்துவந்தது. “ காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை விட்டு கொடுத்ததால் தான், தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது” என தி.மு.கவினர் புலம்ப, “ இத்தனை இடங்கள் வெற்றி பெற்றதற்கு காரணமே, நாங்கள் தான்” என காங்கிரஸ் கட்சியினர் தம்பட்டம் அடித்து வந்தனர். இந்த பனிப்போருக்கு இடையே முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் பேசும் போது “ உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது சந்தேகம்” என்று பேசியிருந்தார். அதன் அர்த்தம் புரியாமல் அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அமைதிகாத்தனர்.

 

மூன்று மாதங்கள் தலைவர் இல்லாமல் சத்தியமூர்த்தி பவன் வெறிச்சோடியது. இந்நிலையில் கடந்த மாதம் திடீர் என டெல்லி காங்கிரஸ் தலைமையிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர் நியமிக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வந்தது. காங்கிரஸ் கட்சியில் சிலருக்கு இந்த நியமனத்தில் வருத்தம் இருந்தாலும், எல்லோருக்கும் அட்ஜஸ்ட் செய்து போகக்கூடியவர் என்ற நோக்கத்தில் இவர் பதவியேற்பு விழாவில் கோஷ்டி தலைவர்கள் பங்கேற்றனர், வீட்டிற்கே சென்று வாழ்த்தினார்கள், பதவியேற்புக்கு முன்பே டெல்லியில் ஒரு தலைவர் சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவி்த்தார். கோஷ்டிகளுக்கு பழக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களை எப்படி ஒருங்கிணைப்பது என்ற சவாலோடு தான் திருநாவுக்கரசரும் பதவியேற்றார்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க, திருநாவுக்கரசர் தலைவர் பதவிக்கு வந்ததை ஆரம்பத்தில் வரவேற்றது. இணக்கமாக போகக்கூடியவர் இவர் என தி.மு.க கணக்கு போட்டது. உள்ளாட்சித் தேர்தல் வேறு நெருங்கியதால்,கூட்டணியை பலப்படுத்தும் திட்டத்தில் இருந்த தி.மு.கவுக்கு வலியச் சென்று ஆதரவு தந்தார் வாசன். வாசன் வருவதை திருநாவுக்கரசர் விரும்பவில்லை. அதை நாசுக்காக கருணாநிதியிடம் சொல்ல, வாசனுக்கு தி.மு.கவின் கதவு சாத்தப்பட்டது. வாசன் வராத வருத்தம் ஸ்டாலினுக்கு இருந்தது, அந்த வருத்ததை காங்கிரஸ் கட்சியின் சீட் விசயத்தில் காட்டிவிட்டார் ஸ்டாலின். உள்ளாட்சித் தேர்தல் சீட் குறித்து ஸ்டாலினை காணச் சென்ற திருநாவுக்கரசரிடம், “ மாவட்டச் செயலாளர்களை பார்த்து பேசுங்கள்” என்று பதில் சொல்ல, ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவரிடம் இப்படி பதில் சொல்லிவிட்டார்களே என்ற வருத்தம் திருநாவுக்கரசருக்கு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சீட் ஒதுக்கீட்டிலும், தி.மு.க  கறார் காட்டியது. “ நாங்கள் ஒரு தேசியக் கட்சி, நீங்கள் எங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடங்கள் போதாது” என திருநாவுக்கரசர் கேட்க “ தேசிய கட்சி என்ற செல்வாக்கு இருந்தால், தனித்தே நின்று கொள்ளுங்கள்” என்ற பதில் தி.மு.க தரப்பில் இருந்து வந்தது.ஒரு கட்டத்தில் தனித்துகூட போட்டியிடலாம் என்று கூட திருநாவுக்கரசரை புலம்ப வைத்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி கவலையோடு இருந்த நேரத்தில் தான், தேர்தல் ரத்து அறிவிப்பும் வந்தது. ஏற்கெனவே, அ.தி.மு.க மீது பழைய பாசம் திருநாவுக்கரசருக்கு இருக்க, ஜெயலலிதாவின் உடல்நிலை குறைவு இவருக்கு ஒருவிதத்தில் சாதகமாக அமைந்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேல் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால் ஒரு முறைகூட கோபாலபுரம் வீட்டிற்கு ராகுல் காந்தி வந்தில்லை. ஆனால் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதாவினைக் காண சென்னை வந்தார் ராகுல் காந்தி, இவரின் வருகை திருநாவுக்கரசரைத் தவிர யாருக்கும் தெரியவுமில்லை. இது தி.மு.க வுக்கும் ஷாக் கொடுத்தது. அ.தி.மு.க-வின் பக்கம் காங்கிரஸ் நகர்கிறது என்ற யூகத்தை இந்த வருகை தான் ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் திருநாவுக்கரசர், தி.மு.க வின் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து காங்கிரஸ் கட்சி எதற்கும் தயாராக இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். அதாவது கூட்டணியில் இருந்தால்,நீங்கள் சொல்லுவதை எல்லாம் நாங்கள் ஆமோதிக்கவேண்டிய அவசியமில்லை” என்பதை தான் நாசூக்காக உணர்த்தினார் திருநாவுக்கரசர்.

 ஸ்டாலின் தஞ்சை சென்றபோது தனது நண்பர்களிடம் “திருநாவுக்கரசர் நமக்கு உடன்பட்டுப் போவார் என்பது சாத்தியமில்லை” என்று பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் தரப்பிலே “ராகுலின் அஸைன்மென்ட்டை திருநாவுக்கரசர் செய்து வருகிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் தி.மு.கவினர் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ராகுலுக்கு ஏற்பட்ட பிம்பம் இன்றும் போகவில்லை. அதேபோல், கடைசி நேரத்தில் கழண்டு கொண்டு போனவர்கள் அவர்கள் என்று தி.மு.க மீது கடுப்பில் தான் ராகுல் உள்ளார். உள்ளாட்சியில் வெற்றியே பெறாவிட்டாலும் வளைந்து போகாதீர்கள், என்று தமிழக காங்கிரஸ் தலைவரிடம் சொல்லியுள்ளார். நமது இலக்கு, நாடாளுமன்றத் தேர்தல் தான், அப்போது தி.மு.க நம்மிடம் தான் வருவார்கள். ஆனால் நாம் அ.தி.மு.கவையும் ஒரு சாய்ஸில் வைத்திருப்போம் என்று திருநாவுக்கரசரிடம் சொல்ல அதை அவர் செய்து வருகிறார்” என்கிறார்கள்.

திருநாவுக்கரசர், நடராஜனை சந்தித்தார் என்று செய்திகள் வெளியானபோது அதை திருநாவுக்கரசர் பெரிதாக எடுத்து கொள்ளாததும் தி.மு.க வுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், தி.மு,க கூட்டணியை பற்றி இவர் சொன்ன ஒரு வார்த்தை தி.மு.க தலைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். அ.தி.மு.கவுக்கு ஆதரவாக போக ஆசைப்படுவது சரி, அதற்காக நம்மை இப்படி ஏன் விமர்சிக்க வேண்டும் என தி.மு,க தலைமையில் பேச்சு எழுந்துள்ளது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களில் பாதிபேர், தி.மு.க கூட்டணி வேண்டாம், என்று சொல்லியுள்ளார்கள். இந்த தகவலை நான் ராகுலிடம் சொல்லுகிறேன் என்று சொல்லியுள்ளார் திருநாவுக்கரசர்.

இதைத் தான் இவரும், ராகுலும் எதிர்பார்த்தார்கள் என்பது வேறு விசயம். ஆனால் தி.மு.கவின் கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை திருநாவுக்கரசரும் மறுக்கவில்லை.அ.தி.மு.கவின் பக்கம் சாய்வதற்கு காரணம், திருநாவுக்கரசரா? ராகுலா? என்பது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே தெரிந்துவிடும்.

- அ.சையது அபுதாஹிர்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close