Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 மாதம் 28 சாவுகள்..! மெரினாவில் நடக்கும் 'மெர்சல் டைவிங்'

நீளமான கடற்கரை எனப்பெயர் பெற்ற சென்னை மெரினாவில் ஆபத்தும் அதிகம் மறைந்திருக்கிறது. கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கியவர்கள் சடலமாக கடற்கரையில் ஒதுங்குவதுண்டு. சிலர் காணாமல் போனதும் உண்டு. அவர்கள் குறித்த விவரங்களைத் தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீருடன் கலங்கி நிற்பவர்கள் பலர். அந்தப்பட்டியலில் சமீபத்தில் பாஸ்கர் என்ற கல்லூரி மாணவரும் இடம்பிடித்துள்ளார்.

நண்பனின் பிறந்தநாள் கொண்ட சென்றபோது கடல் அலையில் சிக்கி காணாமல் போய் இருக்கிறார் கல்லூரி மாணவர் பாஸ்கர். அவரது நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் கண்ணீர் கடலில் அவரது குடும்பம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.  

பாஸ்கர் ஃபிளாஸ்பேக்..

சென்னை கொளத்தூர், பூம்புகார், பசும்பொன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாஸ்கர். இவர், பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பாஸ்கரின் கல்லூரி நண்பர் பாலாஜிக்கு பிறந்தநாள். அதை கொண்டாட சென்னை மெரினா கடற்கரைக்கு பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் வந்தனர். அங்கு பிறந்தநாளை கொண்டாடிய அவர்கள் கடலில் குளித்துள்ளனர். அப்போது வந்த ராட்சத அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் பாஸ்கரனை தவிர மற்றவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுவரை பாஸ்கர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. பாஸ்கர் தாய்மாமாவான வழக்கறிஞர் சுரேஷ் கூறுகையில், "பிறந்தநாளை கொண்ட சென்ற பாஸ்கர், கடல் அலையில் சிக்கி உள்ளார். அவரை மீட்க நண்பர்கள் போராடியுள்ளனர். அவர்களால் முடியவில்லை என்றதும் உடனடியாக மீட்பு குழுவை தேடி கலங்கரை விளக்கம் வரை சென்றுள்ளனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதன்பிறகு ரோந்து போலீஸாரிடம் தகவலை சொல்லியுள்ளனர். அவர்கள் கடற்கரையிலிருந்து கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மெரினா போலீஸார், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கவே காலதாமதப்படுத்தியுள்ளனர். இதன்பிறகு கடலோர காவல்படையினர் தேடியும் எந்த பயனும் இல்லை. பாஸ்கர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் கூட தெரியாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தவித்து வருகின்றனர்.

பாஸ்கரைத் தேடி கடற்கரை பகுதி முழுவதும் தேடி வருகிறோம். ஆந்திராவிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சென்னை மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட மெரினா கடற்கரையில் மீட்பு குழுவினர் இல்லை. ஆபத்தான நேரங்களில் 20 நிமிடங்களுக்குள் அவர்களுக்கு உதவித் தேவை. அந்த நிமிடத்தில் பாஸ்கருக்கு உதவி கிடைத்திருந்தால் நிச்சயம் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மெரினாவில் உள்ள மீட்பு குழுவினர் கடமைக்குகூட பணியாற்றாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. பாஸ்கருக்கு நடந்த நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படாமலிருக்க போலீஸாரும், கடலோர காவல் படையினரும் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

பாஸ்கர், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சில நாட்களுக்குள் இன்னும் மூன்று பேர் கடலில் குளிக்கும்போது மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவரது உடல் எண்ணூர் கடற்கரைப்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு மெரினா கடலில் குளிக்கும்போது உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மெரினா கடலில் குளிக்கத் தடை விதித்து பல  இடங்களில் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளோம். அதைத்தவிர ரோந்து பணியிலும் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதையும் மீறி ஜாலி என்ற பெயரில் ஆழமான பகுதிகளில் குளிக்கும்போது சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. பலி எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

சென்னை மெரினா கடற்கரையில் பலியாகுபவர்களின் உண்மையான நிலவரம் இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டு 41 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரம் உள்ளது. மெரினா கடற்கரை நடக்கும் உயிர்பலிகளைத் தடுக்க சென்னை போலீஸார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒருகட்டமாக 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வாரநாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்களை போலீஸாரால் கண்காணிக்க முடிவதில்லை. இதனால் கடல் அலையில் சிக்கி உயிர்பலி நடப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே மெரினா கடலில் உயிர்பலி ஏற்படுவதைத் தடுக்க சென்னை போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் அலையில் சிக்குபவர்களை உடனடியாக மீட்கவும் தயார் நிலையில் மீட்பு குழுவினரும் செயல்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ