Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் இப்படித்தான் உருவானதாம்!

மிழ் எப்படித் தமிழென்றானது என்பதை ஓவியங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொடுத்தும், புடவி என்றால் உலகம் என்பது தொடங்கி சுவையான தனித்தமிழ் சொற்கள் பலவற்றையும் தன் தகவல் திரட்டுகள் வழியாக மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது சென்னை நந்தனம் விளையாட்டு மைதானத்தில் அக்டோபர் 14-16 வரை நடைபெறும் 10-ம் ஆண்டு தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி.

தமிழ்நாடு பெண்கள் செயற்களம் நடத்தும் இந்த மூன்று நாட்கள் கண்காட்சியில்... இவை தவிர, தமிழர் நாகரிகத்தில் தெய்வங்கள் எப்படி உருவாகின; உழைப்பு நாகரிகம் எப்படிப் பிரித்தறியப்பட்டது; ஐவகை நிலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு மக்களும் பின்னர், எப்படிச் சாதிவாரியாகப் பிரித்தறியப்பட்டார்கள் போன்ற கவனிக்கப்பட வேண்டிய தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. தேசியத் தலைவர்கள் என்றால் காந்தியும் நேருவும் மட்டுமே அறிந்த பலருக்கு தமிழகத்தைச் சேர்ந்த பெரும் தலைவர்கள் பற்றிய விரிவான மொழி மற்றும் ஓவிய விளக்கங்களும் இடம்பெற்று இருந்தன.

ராஜாக்களின் கதைகள் பிடித்த குழந்தைகளுக்கு அவர்கள் பாணியிலேயே விளக்கும் வகையில் சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர்கள் பற்றிய வண்ணமயமான வரலாறு, குமரிக்கண்டம் எப்படித் தமிழகமாக சுருங்கிப்போனது என்பது பற்றிய அறிவியல் உண்மைக் கூறுகள் என கற்காலத்துக்கு முன்னும் பின்னுமான தமிழர்களின் வாழ்வியல் வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய தமிழகம்கூட கடந்த சில 10 ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்பதை கண்காட்சியின் வழியாக உணர முடியும். உதாரணமாக இளவட்டக்கல்லும், குச்சு குச்சு ராக்கம்மாவும், பச்சைக் குதிரையும் இந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப வாழ்க்கையால் எப்படி நம்மால் முற்றிலுமாய் மறக்கப்பட்ட தமிழர் விளையாட்டுகள் ஆனது. உழைப்புக்கும் ஆரோக்கியத்துக்குமான கூழையும் மோரையும், களிச்சோறையும் அப்புறப்படுத்திவிட்டன பதப்படுத்தப்பட்ட பழச்சாறும், ஃபாண்டாவும், பெப்ஸியும். நோய்களுக்கு அல்லோபதி மருந்துகளையே முற்றிலுமாய் நம்பி இருக்கும் நாம், அந்த மருந்துகளின் மூலப்பொருட்களான தமிழ் மண்ணின் செடி, கொடி வகைகளை எப்படி மறந்துள்ளோம் என்பதை கண்காட்சி மீள் நினைவுகூர்கிறது.

மேலும், தமிழர் இசைக்கருவி என்றாலே நாயணமும் தவிலும்தான் என்பது மட்டுமே அறிந்த நமக்கு, இசை அது மட்டுமே இல்லை என்று நெடுந்தாரை, குறுந்தாரை, சங்கு, மத்தளம், பறை, பம்பை, துடி, அளிக்கிசட்டி,  கஞ்சிமத்தளம் உள்ளிட்ட தோற்கருவிகளையும் குழல் கருவிகளையும் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

நிகழ்வில் சுவாரஸ்யத்துக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாய் பேய் வீடு என்ற ஓர் அறையை உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளே, பேயின் பித்தலாட்டம் எதுவும் இல்லை. பீசாவும், பர்கரும், புகையும், மதுவும், காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களும், கூடவே சில எலும்புக்கூடுகளும் இருக்கின்றன. பார்த்ததுமே உரைக்கிறது என்ன கூறிவருகிறார்கள் என்று?! அதை நடைமுறைபடுத்துவதில்தான் சிக்கல்.

“தொடர்ந்து 10 வருடங்களாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சிக்காகப் பல மக்களின் உழைப்பும் ஆய்வும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பல ஆய்வுகள் இன்னும் முழுதும் அறியப்படாத நிலையிலேயே இருக்கின்றன” என்கிறார், இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இசைமொழி. இவர் புலவர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெயர்த்தி என்பது கூடுதல் தகவல்.

ஓட்டமெடுக்கும் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட நம் உடலுக்கு சில மணி நேரங்கள், ‘நீ தமிழன்’ என்கிற உணர்வைத் தருகிறது இந்தப் பண்பாட்டுக் கண்காட்சி.

-ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்