Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாட்டுக்காக ஏன் விளையாடனும்? - பாக்ஸர் துளசி

சமீபத்தில் பெங்களூருவில்,  AIMMAA (All India Mixed Martial Arts Association) நடத்திய தேசிய மார்ஷியல் சாம்பியஷிப்   போட்டியில், பாக்ஸிங்கில் பெண்களுக்கான லைட்வெயிட் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன், நாக்-அவுட் செய்து வெற்றிபெற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல்... அரை இறுதிச் சுற்றில் 9 விநாடிகளில் வெற்றுபெற்று, தேசிய சாதனையும் நிகழ்த்துயுள்ளார்.

தேசிய அளவில் 9 விநாடிகளில் வெற்றிபெற்ற முதல் பெண் பாக்ஸர், துளசி ஹெலன். இதன் மூலமாக இந்தத் தமிழ்ப்பெண்  சர்வதேச பாக்ஸிங் போட்டியில் போட்டியிடத் தேர்வாகியிருப்பது நமக்குப் பெருமை. ஆனால், துளசியின் வெற்றி தமிழ்நாட்டுக்குச் சொந்தமில்லை. ஆம்... இந்தப் போட்டியில் துளசி கர்நாடகத்துக்காக விளையாடி பெற்றுத் தந்துள்ள வெற்றி இது. அதற்கான  காரணம் வலியும் வேதனையும் நிறைந்தது. 

“ தமிழ்நாட்டில் நான் பாக்ஸிங்காக வாய்ப்புகள் தேடி அலைஞ்சப்போ எங்கேயுமே கிடைக்கல. பொண்ணுங்களுக்கு இங்க பாக்ஸிங் இல்லைனு சொன்னாங்க. ஆமா, உண்மைதான். காரணம், அரசுத் தரப்பில் அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி தரப்படுற நிலையில், பாக்ஸிங் பயிற்சிக்கும் அந்தப் பட்டியலில் இடமுண்டு. ஆனா, அது இயங்காம இருக்கு. 




நான் 12 வயசில் இருந்து பாக்ஸிங் பண்ணுறேன். சில வருஷங்களுக்கு முன்னாடி அரசு பாக்ஸிங் பயிற்சி மையத்தில் உள்ள சிலர் மேல நான்  பாலியல் புகார் கொடுத்தேன். அதனால பலவிதங்களில் முடக்கப்பட்டேன், முடங்கிப்போனேன். இப்போதான் எழுந்தேன். ஆனா, எந்த ஆதரவும் இல்லாம நான் தனியாளா பயிற்சி செய்துட்டு இருந்ததைக் கேள்விப்பட்டு, பெங்களூரு சார்பா நான் தேசியப் போட்டியில் விளையாட அழைப்பு வந்தது. விளையாடினேன். 

 ஆறு வருசத்துக்கு அப்புறம் இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற இந்த வெற்றி, தேசிய சாதனையாவும் அமைஞ்சிருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பல அவமானங்களை, புறக்கணிப்புகள், தடைகளைக் கடந்து நான் பெற்றிருக்கிற வெற்றி இது. 
 

 

 

அடுத்து சர்வதேச அளவிலான போட்டி அமெரிக்காவில் நடக்கும். அதற்கு முன் ஜனவரி மாதம் மும்பையில் ஒரு போட்டி இருக்கு. அதில் வெற்றி பெறணும். அதுமட்டும்தான் இப்போ என்னோட இலக்கு. மும்பைப் போட்டியிலும், சர்வதேசப் போட்டியிலும் கர்நாடகாவுக்காக விளையாடச் சொல்லி அந்த அரசாங்கம் என்னைக் கேட்டிருக்காங்க. அதுக்காக அவங்களே பயிற்சி தருவதாகச் சொல்லியிருக்காங்க. 

'தமிழ்நாட்டுக்காக ஏன் விளையாடலை?' னு என்னைக் கேட்கிறவங்களுக்கு, பட்டியலிட்டுச் சொல்ல எங்கிட்ட பதில் இருக்கு. அவங்க எனக்கு வாய்ப்புத் தரலை. என்னைப் புறக்கணிச்சாங்க. என் திறமையை நிரூபிக்க வாய்ப்புத் தர்ற இடத்தில் நான் விளையாடுறேன். ஆனால் தமிழ்நாட்டுக்காக விளையாட வாய்ப்புக்கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி. இந்தியாவுக்காக சர்வதேச அளவில் வெற்றிபெற்று என் திறமையை நிரூபிப்பேன்!" - வலிகளும், வைராக்கியமுமாகச் சொல்கிறார் துளசி.

வாழ்த்துகள் துளசி.. !!!

 

 

தமிழ்நாட்டுக்காக விளையாட துளசிக்கு ஏன் வாய்ப்புத் தரவில்லை, அவரின் திறமையை ஏன் நம்ம மாநிலத்துக்குப் பயன்படுத்திக்கவில்லை என்பதற்கு தமிழ்நாட்டு விளையாட்டுக் கழகத்திடம் என்ன பதில் இருக்கிறது? ஒரு தமிழ்ப் பெண்ணின் வெற்றியைக் கொண்டாடும்போது, அது தமிழ்நாட்டுக்குச் சொந்தமில்லாமல் போகும் அவலம்,  நம் அரசுக்கே சமர்ப்பணம்! 


- கே. அபிநயா
    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close