Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அருமைநாயகத்தை அலற வைத்த 'டைரி'! பெண் போலீஸ் மரணத்தின் அப்டேட்

அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ராமுவின் தற்கொலைக்கு காரணமான எஸ்.ஐ அருமைநாயகத்தை போலீஸார் கைது செய்தனர். 7 நாட்களுக்குப் பிறகு அவரது உடலைப் பெற ராமுவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.ராமு, அருமைநாயகம் பேசிய மொபைல் பதிவுகள் வாட்சாப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருமைநாயகத்துக்கு எதிராக ராமு எழுதிய டைரியும், சி.டி.யும் போலீசிடம் சிக்கியுள்ளதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ராமு, கடந்த 10-ம் தேதி தற்கொலை செய்தார். அவரது தற்கொலைக்கு சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகம்தான் காரணம் என்று ராமுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இன்று அருமைநாயகத்தை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து ராமுவின் உடல் 7 நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆதிதமிழர் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன் கூறுகையில், "ராமுவின் அப்பா சண்முகம், அம்மா பார்வதி. ராமுவுக்கு மூன்று சகோதரிகள். ராமுவும், அவரது சகோதரி ஒருவரும் இரட்டைக் குழந்தைகள். இருவரும் போலீஸ் வேலையில் சேர்ந்தனர். ராமுவின் அப்பா சண்முகம், குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்கிறார். இதனால் பார்வதிக்கு உறுதுணையாக இருந்து ராமுவும் குடும்பத்தைக் காப்பாற்றினார். அவரால்தான் அந்தக் குடும்பம் இன்று ஓரளவு நல்லநிலைமைக்கு உள்ளது. ராமு, பி.காம் வரை படித்துள்ளார். பிறகு போலீஸ் வேலையில் சேர்ந்தார். மணிமுத்தாறு, பாளையங்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றினார். பிறகு வீரவநல்லூர், சீதபற்பநல்லூர், அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது டி.எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றிய அருமைநாயகத்துடன் ராமுவுக்குப் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதுவரை அருமைநாயகத்தின் பெர்ஷனல் வாழ்க்கை குறித்து ராமுவுக்கு தெரியாது. அதுப்பற்றிய கேள்விகள் வரும்போது ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி அருமைநாயகம் சமாளித்து வந்துள்ளார்.

அருமைநாயகத்தின் தந்தை, கடந்த 2015-ம் ஆண்டு இறந்தபோது அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் ராமு. அப்போதுதான் அருமைநாயகத்துக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பது ராமுவுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகே ராமு, அருமைநாயகத்தின் மீது போலீஸில் புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்கப்படாததால் மதுரை உயர் நீதிமன்றத்தின் மூலம் அருமைநாயகத்தின் மீது அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வைத்துள்ளார் ராமு. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர் சில போலீஸ் அதிகாரிகள். அந்த அதிகாரிகள் எல்லாரும் அருமைநாயகத்துக்கு சாதகமானவர்கள்.

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி. விக்ரமனின் உத்தரவின்பேரில் அருமைநாயகத்திடமும், ராமுவிடமும் போலீஸ் அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி விசாரணை நடத்தினர். அப்போது அருமைநாயகத்துக்கு ஆதரவாக போலீஸார் செயல்பட்டதோடு ராமுவை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதோடு, தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளனர். இதனால் மனம் உடைந்த ராமு, கடந்த 9-ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமு, கடந்த 10-ம் தேதி இறந்தார். இதன்பிறகும் இந்த வழக்கில் போலீஸார் எந்தவிட நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தனர். ராமுவின் தற்கொலைக்கு அருமைநாயகம் மட்டுமல்ல அவருக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகளும் காரணம்.

இதனால் ராமுவின் தற்கொலைக்கு நீதி கேட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி தினகரனிடம் புகார் கொடுத்தோம். இதையடுத்து அருமைநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் கைது குறித்த தகவல்கூட போலீஸார் ரகசியமாக வைத்துள்ளனர். அருமைநாயகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், பாலியல் வன்கொடுமை, பி.சி.ஆர் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் ராமுவின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமுவின் உடலை அவரது சொந்த ஊரான அழகப்பபுரத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. ராமு தற்கொலைக்கு நீதி கேட்டு ஆதிதமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுதொடர்பாக மாநில பொறுப்பாளர் கதிரவன், ஒருங்கிணைப்பாளர் சங்கர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது" என்றார். 

ராமுவின் அம்மா பார்வதி கூறுகையில், "என்னுடைய மகள் ராமுவின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அவளால்தான் என்னுடைய குடும்பமே இந்த நிலைக்கு உயர்ந்தது. ராமுவின் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து சென்றபோது எனக்கு உறுதுணையாக  இருந்தவர் ராமு. அவரைக் காதலிப்பதாக கூறி அருமைநாயகம் ஏமாற்றிவிட்டார். அருமைநாயகத்தின் மீது பாரபட்சமின்றி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ராமுவின் நெருங்கிய தோழி நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தது. "ராமு என்னுடைய நெருங்கி தோழி. அவர், அருமைநாயகத்தைக் காதலிக்கும் விவரத்தை என்னிடம் சொன்னார். அப்போதே சில காரணங்களைச் சொல்லி அதைத் தடுத்தேன். ஆனால், இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தனர். பல இடங்களுக்கும் சென்றனர். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் ராமுவிடம் உள்ளது. இவர்களது காதலுக்கு ஆதாரமாக ராமு எழுதிய டைரி இருக்கிறது. அந்த டைரியைப் படித்தாலே அவர்களது காதலை புரிந்து கொள்ளலாம்.

அருமைநாயகமும், ராமுவும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக படித்தனர். அப்போதுதான் இருவரும் நெருங்கிப்பழகினார்கள். ராமு, போலீஸில் உயர்பதவிக்கு வர ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை அருமைநாயகத்தால் நிறைவேறவில்லை. அருமைநாயகம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறி விட்டது. இதனால் ராமு மனம் உடைந்து காணப்பட்டார். அவரது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார். ராஜபாளையத்துக்கு அருமைநாயகமும், ராமுவும் சென்றுள்ளனர். அப்போது இருவரும் அங்குள்ள ஒரு லாட்ஜில் குமார், விஜயா என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளனர். ராமுவுக்கு தெய்வபக்தி அதிகம். இதனால் இருவரும் பல கோயில்களுக்கு செல்வதுண்டு. அகஸ்தியர் அருவியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்ற போது அங்குள்ள சாமி முன்பு ராமுவை திருமணம் செய்து கொள்வதாக அருமைநாயகம் சத்தியம் செய்துள்ளார். ஆனால் அந்த சத்தியத்தை மீறியதோடு, ராமுவை திருமணம் செய்ய மறுத்த அருமைநாயகத்தை அந்த சாமி, சும்மா விடாது.

ராமுவின் செல்போனில் இருவரும் பேசிய உரையாடல்கள், புகைப்படங்கள் எல்லாம் அவர்களது காதலுக்கு ஆதாரமாக இருந்தன. ஆனால் அவைகள் எல்லாம் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. இருவரும் பேசிய உரையாடல் சி.டி.யும், டைரியும் மட்டுமே ராமு தரப்பிடம் உள்ளது. அதில் உள்ள ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. சமூகத்தின் பின்தங்கிய ராமுவின் குடும்பத்தினருக்கும் பலதரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. எனவே ராமுவின் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக காவல்துறை நியாயமாக இந்த வழக்கை அணுகவேண்டும்" என்றார். 

- எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்