Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரியல் போர் ஆயுதமா டெங்கு!? - இந்தியாவை அலற வைக்கும் பின்னணி

ந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வீரியமாகி வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரையில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். ' நமது சூழலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வைரஸ் பரவுவதற்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல காரணங்கள் உள்ளன' என்கிறார் மருத்துவர். புகழேந்தி. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதுவரையில், மதுரவாயல் மாணவர் சுதர்சன், திருத்தணி சிறுமி லதாஞ்சலி என மரணங்கள் ஒருபுறம் வாட்டி வதைக்கிறது. மறுபுறம் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருக்கின்றன. தலைநகர் டெல்லியில் இதுவரையில் 1,100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் 18 பேர் இறந்துவிட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். 

" சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதில், சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் மரணத்தைத் தழுவுகின்றனர். இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்தக் கொசுக்குள், உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன" எனக் கவலையோடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர். புகழேந்தி. தொடர்ந்து அவர், " டெல்லியில் 1996-ம் ஆண்டுதான் டெங்கு காய்ச்சலின் வீரியம் உச்சத்தைத் தொட்டது. அந்த ஆண்டில் 10,252 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். 423 பேர் இறந்தார்கள். 

காய்ச்சல் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ' இந்த மண்ணிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத கொசுக்கள்' என்ற உண்மையும் தெரியவந்தன. ஏடிஸ் எஜிப்த் மற்றும் ஏடிஸ் அல்போபிக்சஸ் போன்ற பெயர்கள் மருத்துவ உலகில் பேசப்பட்டன. இது ஒரு மாற்றமடைந்த வைரஸ்(ஜீனோ டைப் 4) எனக் கண்டறிந்தனர். இந்தக் கொசுக்கள் சுத்தமான நீரில் வளரும்; காலை நேரத்தில் மட்டுமே கடிப்பவை. மற்ற காய்ச்சல்களைப் போல் அல்லாமல், உயிர் குடிக்கும் தன்மைதான் டெங்குவைத் தனித்துக் காட்டுகிறது. டெங்கு பாதிப்பு தொடங்கிவிட்டால், ரத்த பிளேட் லெட்டுகள் குறைவது; ரத்த ஓட்டம் தடைபட்டு முக்கிய உறுப்புகள் செயல் இழப்பது என பாதிப்புகள் அளவிட முடியாதது. ஒவ்வொரு ஆண்டும் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. ஆய்வு முடிவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த சமயத்தில், 2001-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி இந்திய உள்துறை செயலர் கமல் பாண்டே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், ' இது ஓர் உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம். இந்தியா அதை எதிர்கொள்ளும்' எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு முன்னதாக, 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஏடிஸ் ஆய்வு மையம் ஒன்றை சோனிபெட்டில் தொடங்கியது. இந்த ஆய்வின் நோக்கமே, ஏடிஸ் கொசு தொடர்பானதுதான். இந்த மையம் தொடங்கப்பட்ட சில காலங்களில் பிரதமர் இந்திராவுக்கு சில தகவல்கள் வருகின்றன. ' இந்த மையத்தின் மீது சந்தேகம் எழுகிறது. அமெரிக்க உளவு நிறுவனம் இதன் பின்னால் இருக்கிறது' என பிரதமருக்குத் தெரிவிக்கப்பட, அந்த ஒப்பந்தமே ரத்து செய்யப்பட்டது. எனவே, இது ஓர் உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 2015-ம் ஆண்டு 'பிளாஸ்' என்ற அமைப்பின் மூலம் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் பாதிப்படைகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது வெறும் மர்மக் காய்ச்சல் என்ற ஒற்றைச் சொல்லோடு, அரசு அமைப்புகள் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடுகின்றன. ஏனென்றால், டெங்குவுக்கு என எந்த மருந்துகளும் கண்டறியப்படவில்லை. 

 

 

உங்கள் வீட்டை மர்மக் காய்ச்சல் முற்றுகையிடாமல் இருக்க வேண்டுமானால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது; நொச்சி இலைகளை வளர்ப்பது; கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் கம்பூசியா மீன்களை வளர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். அரசின் பங்களிப்பும் மிக முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தைப் பற்றி, விழிப்பு உணர்வு முகாம்களை நடத்த வேண்டும். அதேவேளையில், டெங்குவை அடையாளம் காணும் எலீசா சோதனை உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவ நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். டெங்குவுக்குப் போடப்படும் தடுப்பூசி நல்ல பலன்களைக் கொடுப்பதில்லை எனவும் தகவல்கள் வருகின்றன. எனவே, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை செலுத்தினால் போதும். வரக் கூடிய காலகட்டங்களில் டெங்குவைக் கட்டுப்படுத்த நம்மால் முடியும்" என்றார் உறுதியாக. 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ