Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியால் கைநழுவிய சிப்பெட்!  -தமிழகத்துக்கு நேர்ந்த மற்றுமொரு அநீதி

சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மத்திய அரசின் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன. ' பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொடர்பான 12 நிறுவனங்களில் சிப்பெட் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரின் கண்களை இது உறுத்தியதால், டெல்லிக்கு மாற்றப்படுகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் தொழிற்சங்கங்கள். 

மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது சிப்பெட்(மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்). 1968-ம் ஆண்டு முதல் இன்று வரையில் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. பிளாஸ்டிக் பொறியியல் படிப்புகள், எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான ஆப்ரேட்டர் பயிற்சி வகுப்புகள், தரப் பரிசோதனை மையங்கள் என இதன் பணி அளவிட முடியாதது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 250 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. " எங்களுக்கான நிதித் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்கிறோம். கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசிடம் நிதிக்காக கையேந்தாத நிறுவனமாக சிப்பெட் உள்ளது. இதுதான் தவறு என்று நாங்கள் நினைக்கிறோம்" என வேதனையோடு பேசத் தொடங்கினார் சிப்பெட் உயர் அதிகாரி ஒருவர். தொடர்ந்து நம்மிடம், 

" இந்தியா முழுவதும் 2,500 ஊழியர்கள் சிப்பெட்டில் வேலை பார்க்கிறார்கள். எங்களிடம் ஆறாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 48 ஆண்டுகளில் சிப்பெட்டிற்கு 28 கிளைகள் உருவாகியுள்ளன. இவை அனைத்திற்கும் தலைமையிடமாக சென்னை திகழ்கிறது. எங்களால் சிறுதொழில் நிறுவனங்கள் அதிக லாபம் அடைகின்றன. மோல்டிங் தொடர்பான பணிகளுக்கு, எங்களுடைய இயந்திரங்களை சலுகை விலையில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறோம். இந்த இயந்திரங்களின் விலை இருபது லட்ச ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இவற்றை வாங்க முடியாத சிறு நிறுவனங்களுக்கு கை கொடுக்கிறோம். இதுமட்டுமல்ல, மாநில அரசின் இலவசப் பொருட்களுக்கான பரிசோதனைகள் அனைத்தும், சிப்பெட்டில்தான் நடக்கிறது. கிரைண்டர், மிக்ஸி என அரசின் விலையில்லா பொருட்களை தரப் பரிசோதனை செய்து தருகிறோம். இதனால், எங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது" என விவரித்தவர், 

" தமிழ்நாடு சிப்பெட்டின் வளர்ச்சி, மத்திய அரசில் உள்ள சிலரது கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஒருமுறை, நாங்கள் பி.இ, எம்.இ படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்க முயன்றார்கள். அதையும் போராடி தடுத்து நிறுத்தினோம். தற்போது நிலைமை கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம். மத்திய உரத்துறை அமைச்சராக இருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார்தான். சில மாதங்களுக்கு முன்பு, 'டெல்லிக்கு சிப்பெட் மாற்றப்படும்' என்ற பேச்சு வந்தபோது, தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டு குரல் கொடுத்தன. உடனே, அமைச்சரும் முடிவை மாற்றிக் கொண்டார். அடுத்த சில வாரங்களில் காவிரி விவகாரத்தால் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்தே, ' தமிழ்நாட்டில் சிப்பெட் இருக்கவே கூடாது' என அமைச்சர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே, நம்முடைய சிப்பெட் நமது கையை விட்டுப் போகாது" என்றார் ஆதங்கத்துடன். 

இன்று ஜெர்மனி நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மத்திய அமைச்சர் ஆனந்த் குமார். அவருடன் சிப்பெட்டின் இயக்குநர் ஜெனரல் எஸ்.கே.நாயக்கும் செல்கிறார். இந்தப் பயணத்தில், ' அமைச்சர் எடுத்த முடிவை மாற்ற முயற்சி செய்கிறேன்' என சிப்பெட் ஊழியர்களுக்கு உறுதியளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். ' ஆனால், இந்த விவகாரத்தில் அமைச்சரின் முடிவை வரவேற்பவர்களில் ஒருவராகத்தான் நாயக் இருக்கிறார். அவர் அளிக்கும் உறுதிமொழியை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை' என்கின்றனர் சிப்பெட்டை நம்பியிருக்கும் தொழிலாளர்கள். 

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ