Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெண்கள் சாதிக்க சுதந்திரம் கொடுங்க!' - சாம்பியன் வாய்ஸ்!

 

"உங்களைத் தாக்க ஒரே நேரத்தில் வரும் 10 எதிராளிகளைத் அடிக்க முடியலைன்னாலும், அவங்களை எதிர்த்து நிக்கிற தைரியத்தை கராத்தே கொடுக்கும்" என்கிறார்  பனிரெண்டாம் வகுப்பு மாணவி  பத்மஶ்ரீ. தெற்காசிய கராத்தே போட்டியில் தங்கத்தை கொத்தி வந்த இந்த கொங்கு நாட்டுப்புயல், அடுத்து வரவிருக்கும் ஆசியப் போட்டிக்காக, முனைப்புடன் பயிற்சியில் இருக்கிறார்.

"நான் கோவை சோமனூர் ஏ.ஆர்.சி பள்ளியில் படிக்கிறேன். அப்பா, அம்மா, அக்கானு அழகான குடும்பம். அப்பா தன் கடின உழைப்பால எங்களைப் படிக்கவைக்கிறார். எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே கராத்தே பள்ளி இருக்கு. சின்ன வயசில் இருந்தே அதைப் பார்த்து வளர்ந்ததால, அதில் என் ஆர்வமும் வளர்ந்துச்சு. என் ஆசைப்படி ஆறாம் வகுப்பில் என்னைக் கராத்தே க்ளாஸில் சேர்த்துவிட்டார் எங்கப்பா'' என்று சொல்லும் பத்மஶ்ரீ, ஆரம்ப நாட்களில் கராத்தே போட்டிகளில் பள்ளிகள் அளவிலும் மாவட்ட அளவிலும் பல வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.

தொடர்ந்து, 2013-ம் ஆண்டு மாநில சாம்பியன், 2014-ம் ஆண்டு மாநில அளவில் மூன்றாம் இடம், 2016-ல் மாநில சாம்பியன்,  டெல்லியில் நடைபெற்ற தேசியப் போட்டியில் தங்கம் என்று தொடர் வெற்றிகள் பெற்று வளர்ந்தவருக்கு, அடுத்து தெற்காசியப் போட்டியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் வெற்றி பெற்று, இப்போது ஆசியப் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளார்.

 

"என் வெற்றிகளுக்குக் காரணம், என்னோட மாஸ்டர் சென்ஸாய் தங்கவேலு, சீனியர் மாஸ்டர் டி.மெ.சி.மனோகரன் மற்றும் என் குடும்பமும் நண்பர்களும். வெளியூர்கள், வெளிமாநிலங்கள்னு எங்க போட்டிக்குப் போகவேண்டி வந்தாலும், எங்க வீட்டுல எனக்கு அனுமதியும் நம்பிக்கையும் கொடுத்து அனுப்பிவைப்பாங்க. திறமை இருந்தும், அந்தச் சுதந்திரம் இல்லாததாலதான் பல பெண்கள் சாதிக்க முடியாமத் தவிக்கிறாங்க'' என்று தன் சக தோழிகளுக்காக வருந்தியவர்,

 "ஆசியப் போட்டியில வெற்றிபெற்று அடுத்து நடக்கவிருக்குற உலகக் கராத்தே போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை நிச்சயம் வெல்வேன்.  2020-ல் டோக்கியோவுல நடக்கவிருக்குற ஒலிம்பிக்கிலும் பங்கெடுத்து நம் நாட்டுக்கு நிச்சயம் பெருமை சேர்ப்பேன்'' என்று நிறைந்த நம்பிக்கையுடன் சொல்லும் பத்மஶ்ரீ, படிப்பிலும் கெட்டி. மருத்துவப் படிப்பே அவரின் இலக்கு!

பெண்கள்  தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்வது அவர்களை பாதுகாத்துக் கொள்ள உதவுவதோடு சாதிக்கவும் வழிவகை செய்கிறது.

- செ.சங்கீதா (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ