Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘இருக்கிற விதிகளை அமல்படுத்துங்கள்’! - அமைச்சரின் புதிய உத்தரவுக்கு எதிராக ஒலிக்கும் குரல்


‘‘குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகளுக்கு புதிய உத்தரவுகளைப் போடுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதைவிட, இருக்கிற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்க எடுக்க வேண்டும்’’ என அமைச்சர் வேலுமணியின் உத்தரவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த 13-ம் தேதியன்று சென்னை கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கிச் சென்ற தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் காயத்ரி, ஆஷா சுருதி, சித்ரா, ஜெயஸ்ரீ, மீனா ஆகியோர் மீது மோதியது. மேலும், அந்த லாரி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குத் தாறுமாறாக ஓடியதில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆமணகுட்டன் மற்றும் தேவராஜ் என்பவர் மீதும், திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவரின் ஆட்டோ மீதும் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே காயத்ரி, ஆஷா சுருதி, சித்ரா ஆகிய 3 மாணவிகளும் உயிரிழந்தனர். ஆமணக்குட்டன், தேவராஜ், ஜெய, மீனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘‘ஒப்பந்ததாரர்களின் முறைகேடுகளைக் கண்டுகொள்வதில்லை!’’

இந்தக் கோர விபத்தில் சிக்கியவர்கள் அனைவருமே சாலை விதிகளை மீறி நடந்துசென்றவர்கள் அல்ல. சாலை ஓரத்தில் நடைபாதையில் நடந்துசென்றவர்கள்தான். இங்கே விதிகளை மீறியது யார்; இந்த லாரி பிரேக் பிடிக்காமல் போனதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்; தண்ணீர் லாரிகளைப் பராமரிக்காமல் இருந்தது யாருடைய கவனக்குறைவு; விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டியவர் முறையான பயிற்சிபெற்றவரா; ஓட்டுநருக்கான சீருடை அணிந்திருந்தாரா...? இப்படிப் பல கேள்விகள் நீண்டுகொண்டே செல்கின்றன. இந்தக் கோர விபத்து ஏற்படுவதற்கு சென்னைப் பெருநகரக் குடிநீர் வாரியத்தின் நிர்வாகச் சீர்கேடே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘‘அந்த வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கவனக்குறைவாகச் செயல்பட்டதே இந்த விபத்து நிகழக் காரணம். கிளீனர்களைக்கொண்டே லாரிகளை இயக்குகிறார்கள். இதனைக் கண்காணிக்க வேண்டிய மண்டல குடிநீர் வாரியப் பொறியாளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்பந்ததாரர்களின் முறைகேடுகளைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள்’’ என்கிறார், அண்ணாநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் மேலாளர் நடராஜன்.

தண்ணீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு - அமைச்சர் உத்தரவு!

இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமைச் செயலகத்தில், குடிநீர் வாரிய  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கிண்டி விபத்து குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வாரிய மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூரிடம், அமைச்சர் கேட்டறிந்தார். பிறகு, ‘‘குடிநீர் லாரிகளின் தகுதிச்சான்று, அதன் ஓட்டுநர்களின் லைசன்ஸ், முன் அனுபவம் ஆகியவற்றைத் தீர ஆய்வு செய்து, லாரிகளைப் பாதுகாப்புடன் இயக்க வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் டேங்கர் லாரிகளை, மண்டல குடிநீர் வாரியப் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். குடிநீர் லாரிகள் சாலை விதிகளை மீறினாலோ, அதி வேகமாக இயக்கினாலோ உடனடியாக வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில் லாரிகளின் பின்புறம், தொலைபேசி எண்கள் நன்கு தெரியும் வகையில் குறிப்பிடப்பட வேண்டும். குடிநீர் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து லாரிகளும் 30 முதல் அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். இதை மீறி வேகமாக லாரிகளை இயக்கினால், அந்த லாரியின் ஒப்பந்தத்தை வாரியம் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்’’ என அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டிருந்தார்.

‘‘எந்தப் பலனும் இதனால் ஏற்படப்போவதில்லை?’’

அமைச்சர் வேலுமணியின் உத்தரவு குறித்து சட்டப் பொறியாளர் பாலாஜியிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகின்றன என்று வேகக் கட்டுப்பாட்டுக் கருவிப் பொருத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. குறிப்பிட்ட வேகத்தில்போனால் அந்தக் கருவியில் இருந்து சத்தம் வரும். சத்தம் வராத அளவுக்கு ஓட்டுநர்கள் குச்சியை வைத்துவிடுவார்கள். இதனால், அந்தத் திட்டத்தைத் திரும்பப்பெற்றார்கள். இப்போது அமைச்சர் உத்தரவிட்டிருப்பது அதனைப் பிரதிபலிப்பதாகத்தான் உள்ளது. வேகக் கட்டுப்பாடு என்றால் எந்த மாதிரியான வேகக் கட்டுப்பாடு என்று தெளிவுபடுத்த வேண்டும். பெயரளவில் இந்த நடவடிக்கை இருக்குமே தவிர, எந்தப் பலனும் இதனால் ஏற்படப்போவதில்லை. அமைச்சர் போட்டுள்ள மற்ற உத்தரவுகளும் ஏற்கெனவே ஆர்.டி.ஓ விதிகளில் உள்ளன. எனவே, அமைச்சர் புதிய உத்தரவுகளைப் போடுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவதைவிட, இருக்கிற விதிகளைத் தீவிரமாக அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். மேலும், ஓட்டுநர்களை மாற்றாமல் இருக்க என்ன ஒப்பந்தம் போடவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஒரு லாரியை இயக்கும் நபர், அந்த லாரியின் நிலை குறித்து அவர்தான் தெரிந்து வைத்திருக்க முடியும். நாளுக்கு ஓர் ஓட்டுநரை மாற்றினால் எப்படி அவர்களை அதனைக் கையாளுவார்கள்? அதுமட்டுமின்றி,  தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் லாரிகளைக் கொண்டு வருகிற விதிகளைச் சரியாகப் பின்பற்ற வழிவகை செய்யவேண்டும். அதைவிடுத்து புதிய கட்டுப்பாடுகள் என்று அமைச்சர் வெற்று விளம்பரம் தேட வேண்டாம்” என்றார்.  

‘‘தொழில்நுட்ப அறிவை கொடுக்க வேண்டும்!’’

லாரிகளின் கட்டுமான உரிமையாளர் கோவிந்தராஜ், “லாரி ஓட்டுநர்களுக்குத் தொழில்நுட்ப அறிவை ஒப்பந்ததாரர்கள் கொடுக்க வேண்டும். லாரிகளின் தரம் குறித்த கண்காணிப்பை நடைமுறைபடுத்தாமல் வெறும் உத்தரவுகளை மட்டும் போட்டால் என்ன செய்ய முடியும்? உத்தரவுகளைப் போடுவதைவிட அதனைச் செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்த வேண்டும். இவற்றையெல்லாம் மண்டலப் பொறியாளர்கள்  கண்காணிக்க வேண்டும். அதேபோன்று, ஏ.பி பிரேக் முறையை ஒவ்வொரு லாரியிலும் பொருத்த வேண்டும். இந்த முறை, அட்வான்ஸ் ஆனது. பிரேக் போட்டால் அப்படியே நிற்கும். இதையெல்லாம் லாரி ஒப்பந்ததாரர்கள் பொருத்துவதில்லை. 1980-ல் இருக்கும் வண்டிகளைத்தான் இயக்கி வருகிறார்கள். இவற்றை எல்லாம் கவனிக்க  வேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உள்ளது’’ என்றார்.

விபத்து அதிகரிக்க முக்கியக் காரணங்கள்!

‘‘பழுதான தண்ணீர் டேங்குகள்; பிரேக் டிரம்மில் தண்ணீர் விழுவதால் பிரேக் பிடிக்காமை; நீண்ட நாட்கள் பிரேக் டிரம்மைக் கவனிக்காமல் இருப்பது; டேங்க்கில் தண்ணீர் குறையும்போது இழுத்துச்செல்வது; முறையாகப் பராமரிக்காமல் இருக்கும் லாரிகள்; பழைய லாரிகளை இயக்குவது போன்றவற்றாலும், குறைந்த தொழில்நுட்ப அறிவு; போதிய பயிற்சியின்மை; குடித்துவிட்டு வண்டியை எடுப்பது; செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது; கவனமில்லாமல் இருப்பது; கிளீனர்களே வண்டியை ஓட்டுவது; அதிக டிரிஃப் அடிக்க வேண்டும் வேண்டும் என வேகமாக இயக்குவது; சூழல்களைக் கையாள தெரியாத மனப்போக்கு; சமயோஜித யுத்தியின்மை போன்ற ஓட்டுநர்களின் செயல்பாடுகளாலும், இருக்கிற விதிகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது; ஒப்பந்த லாரிகளை கண்காணிக்காமல் விட்டுவிடுவது; மண்டலப் பொறியாளர்கள் லாரிகளைச் சோதனை செய்து அனுப்பாமல் இருப்பது; பழைய வண்டிகளை அனுமதிப்பது; திடீரென்று போய் சோதனைக்கு உட்படுத்துவது இல்லை; பணம் வாங்கிக்கொண்டு உரிமம் சான்று கொடுக்க வழிவகை செய்வது போன்ற குடிநீர் வாரியம் தவறவிடும் காரணங்களாலும் இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்கின்றன’’ என்கிறார்கள் லாரி பாடி கட்டும் ஊழியர்கள்.

விபத்துக்குக் காரணமாக இவ்வளவு பெரிய பட்டியலே இருக்கும்போது... இதை தமிழக அரசு கவனிக்காமல் இருப்பது ஏனோ?
 

- கே.புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ