Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' 3 தொகுதி இடைத்தேர்தல் நமக்கானது!'  -அ.தி.மு.கவுக்கு எதிராக ஸ்டாலின் வியூகம்

ட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ' மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறுவதன் மூலம், அடுத்து வரக் கூடிய தேர்தல்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தலைமை' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு, நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. அ.தி.மு.வுக்கும் தி.மு.கவுக்கும் இடையில்தான் நேரடி போட்டி என்றாலும், தே.மு.தி.க, பா.ஜ.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. மக்கள் நலக் கூட்டணியும் பா.ம.கவும் முடிவை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில், ' இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெல்லும் என்ற மாயையை உடைத்தெறிய வேண்டும். சட்டமன்றத்தில் தி.மு.கவின் பலத்தை அதிகரிக்க வேண்டும்' என்பதில் தி.மு.க உறுதியாக இருக்கிறது. இன்று காலை 10.45 மணியளவில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனையில் இறங்கினார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில், திருச்சி மா.செ கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, மதுரை மூர்த்தி, மணிமாறன், தஞ்சை மா.செ துரை.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ' தலைமையில் இருந்து விருப்பமனுக்களை வாங்கிச் செல்லுங்கள். போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளுக்கு உடனடியாக பதில் கொடுக்கும் வகையில் வழக்கறிஞர் அணியை தயார்படுத்தி வையுங்கள். ஊருக்குச் சென்றதும் வழக்கறிஞர் அணி கூட்டத்தைக் கூட்டுங்கள்' என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். 

" சட்டமன்ற பொதுத் தேர்தலாக இருந்தால் கழகத்தின் வேட்பாளர்களுக்கு எந்தக் கவலையும் இருந்திருக்காது. இடைத்தேர்தல் என்பதால், ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதற்காகவே, விருப்பமனு பெறும் வேலைகள் நடந்து வருகின்றன" என விவரித்த, தி.மு.க நிர்வாகி ஒருவர், " அரவக்குறிச்சியில் அ.தி.மு.கவின் செந்தில் பாலாஜியை எதிர்த்துப் போட்டியிட இருந்தார் கே.சி.பழனிச்சாமி. தேர்தல் நடந்திருந்தால் கே.சி.பி கட்டாயம் வெற்றி பெற்றிருப்பார். ' தேர்தல் தேதி அறிவித்தாலும், மீண்டும் நான் போட்டியிட மாட்டேன்' என ஒன்றியச் செயலாளர்களிடம் தீர்மானமாகக் கூறிவிட்டார். இதையடுத்து அவரிடம் பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள், ' இப்போதுள்ள சூழல் வேறு. வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயச் சூழல் நமக்கு இருக்கிறது. கட்சிக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். இந்தமுறை நீங்களே நிற்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், நிர்வாகிகளோ, ' இந்த மூன்று தொகுதிகளிலும் வேண்டிய அளவுக்குப் பணத்தை செலவு செய்துவிட்டோம். மீண்டும் முதலில் இருந்து செலவு செய்ய வேண்டுமா?' என்ற கவலைதான் வேட்பாளர்களிடம் இருந்தது. இப்போது அவர்களும் சமாதானமாகிவிட்டனர். 

தவிர, தஞ்சாவூரில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கிறது. இந்தமுறை தி.மு.க சார்பில் டாக்டர்.அஞ்சுகம் நிற்கிறார். இவருடைய வெற்றியும் உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்றுதான். அதற்காக, 'மெத்தனமாக இருந்துவிடாமல் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்' என நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது தலைமை. அதேபோல், திருப்பரங்குன்றத்தில் கடந்த முறை தி.மு.க சார்பில் போட்டியிட்ட மணிமாறனே போட்டியிடலாம். அவருக்கு செலவு செய்வதில் மட்டும்தான் சிக்கல் உள்ளது. அதையும், சரிசெய்வதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. தஞ்சையும் அரவக்குறிச்சியும் தி.மு.க வசம் வருவதற்கே வாய்ப்புகள் அதிகம். ' மூன்றில் இரண்டு தொகுதிகளில் வென்றால்கூட, ஜெயலலிதா பிம்பம் சரியும். அதற்கு அடுத்து வரக்கூடிய தேர்தல்களை நாம் இன்னும் வலுவாக எதிர்கொள்ள முடியும்' என உறுதியாக நம்புகிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக. 

இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம் செய்வார்களா என்பதும் உறுதி செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நடந்தாலும், களநிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ