Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘சந்தன மரத்தையும் தந்தத்தையும் வீரப்பன் கடத்தவில்லை!’  -குருபூஜைக்குத் தயாராகும் சீமான்

ந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் தமிழர் கட்சி மட்டுமே முகநூலில் வீரப்பனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. ' இன்றைக்கு வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், கர்நாடகாவுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்காது. அவரை எங்கள் எல்லைச்சாமியாகவே பார்க்கிறோம்' என்கிறார் சீமான். 

காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளன. ' வீரப்பன் மறைந்த தினமான அக்டோபர் 18-ம் தேதியன்று குருபூஜை நடத்துவோம்' என அறிவித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று காவிரிக்கான போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால், குருபூஜை நிகழ்வை நடத்த முடியவில்லை. வீரப்பனின் உறவினர்கள் மட்டுமே, சமாதியில் அஞ்சலி செலுத்தினர். " இரண்டு மாநில அரசுக்கும் பெரும் சவாலாக இருந்தவர் வீரப்பன். அவர் இருந்தவரையில், ‘ஒகேனக்கல் என்னுடையது’ என்று கர்நாடகா சொல்லவில்லை. ‘மேகதாதுவில் அணை கட்டுவோம்’ என கிளம்பவில்லை. அவர் இறந்ததும், அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா ஒகேனக்கலில் கால் வைத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால், கர்நாடகாவில் இவ்வளவு தமிழர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்” எனக் கொந்தளிப்போடு நம்மிடம் பேசினார் சீமான். தொடர்ந்து, 

“ வீரப்பனுக்கு இவர்கள் கொடுத்துள்ள தோற்றம் எதுவும் உண்மை கிடையாது. யானைகளைக் கொன்றது; சந்தன மரக்கட்டைகளை கடத்தியது எல்லாம் இவர்கள்தான். அவர் காட்டுக்குள் இருந்ததால், அவர் மீது பெரும்பழியைச் சுமத்திவிட்டார்கள். இதுதான் எதார்த்த உண்மை. அவர் இருக்கும் வரையில் காடு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. இதை வன அதிகாரிகளே ஒத்துக் கொள்வார்கள். இன்றைக்கு பல மடங்கு காடுகள் வெட்டி அழிக்கப்படுகிறது. அதற்கு இடையூறாக இருந்ததால்தான், குறிவைத்து அடிக்கப்பட்டார் வீரப்பன். அவர் பொதுமன்னிப்போடு வெளியில் வந்திருந்தால், பல உண்மைகளை அம்பலப்படுத்தியிருப்பார். அதனால்தான் மோரில் விஷம் வைத்துக் கொன்றார்கள். இரண்டு நாள் கழித்து அவரது உடலை வெளி உலகிற்குக் கொண்டு வந்து, சுட்டுக் கொன்றது போல் நாடகம் ஆடினார்கள். 

நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாராய ஆலை வைத்திருக்கிறார்கள். காட்டுக்குள் அவர் சாராயம் காய்ச்சினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவரோடு இருந்தவர்கள், எதாவது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்திருப்பார்களா? ஆனால், விசாரணை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்தது நமது அதிரடிப்படை. மது, புகை என எந்தவித கெட்ட பழக்கங்கள் இல்லாமல் வாழ்ந்த ஒழுக்க சீலர் அவர். அவர் சந்தன மரத்தை வெட்டினார் என்று இவர்கள் சொல்கிறார்கள். அதை வாங்கியவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களுக்கு எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? 

இன்றைக்கு வீரப்பன் இருந்திருந்தால், காவிரி விவகாரத்தில் இந்தளவுக்கு கர்நாடகம் பிடிவாதம் காட்டியிருக்காது. தமிழர்களைத் தாக்குவதோ, அவர்களது உடமைகளை சேதப்படுத்துவதோ கட்டாயம் நடந்திருக்காது. அவர் வனக் காவலராக இருந்தார் என்பதுதான் உண்மை. வீரப்பன் ஓர் எழுச்சிக் குறியீடாக இருந்துவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதேபோல்தான், பிரபாகரனையும் பயங்கரவாதி என்று சொல்லி கட்டமைக்க நினைக்கிறார்கள். தமிழனுக்கு எங்கெல்லாம் வீர அடையாளம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அழிக்க நினைக்கிறார்கள். வீரப்பன் இருக்கக் கூடாது என்பதில் கர்நாடக அரசின் சூழ்ச்சியும் இருக்கிறது. வீரப்பன் கடத்தல்காரன் என்றால், ஆட்சியாளர்கள் யார்? உழைக்கும் மக்களின் உழைப்பையும் மண்ணின் வளத்தையும் சுரண்டி எத்தனை ஆயிரம் கோடிகளை ஆட்சியில் இருந்தவர்கள் சம்பாதித்தார்கள்? 

எத்தனை பங்களாக்களை, எஸ்டேட்டுகளை வீரப்பன் வாங்கினார்? சங்கரலிங்கனாரை சமூகம் புறக்கணித்தது; நடிகர் திலகத்தை போற்ற யாரும் இல்லை; கண்ணதாசனை கண்டுகொள்ள யாரும் இல்லை; மறைமலை அடிகளையோ, திரு.வி.கவையோ, ரெட்டை மலை சீனிவாசனையோ, அயோத்திதாச பண்டிதரையோ கொண்டாடுவதற்கு ஒருவரும் இல்லை. தேவநேயப் பாவாணரைப் போன்ற ஓர் அறிஞரைப் பார்ப்பது அரிது. எங்கள் மாமா காளிமுத்து தமிழ்க்கடல் என்று போற்றப்பட்டவர். இந்த மண்ணில் அம்பேத்கர், பெரியார் இருக்கும் அளவுக்கு ஜீவாவோ, ரெட்டை மலை சீனிவாசனோ வெளிக்கொண்டு வரப்படவில்லை. காலம்காலமாக தமிழ் சான்றோர் வஞ்சிப்பதைக் கண்டு கொதித்துப் போய்த்தான், இனத்தின் வேர்களைத் தேடித் தேடிக் கொண்டாடுகிறோம்”. 

இவர்கள் வரிசையில்தான் வீரப்பனும் வருகிறாரா? 

“ ஆமாம். இந்த வரிசையில்தான் அவரும் வருகிறார். அவர் ஒரு திருடன் என சமூகம் சொல்கிறது. பிரபாகரனை பயங்கரவாதி என்கிறது. காந்தியின் பார்வையில் நேதாஜியும் பகத்சிங்கும் தீவிரவாதிகள். வெள்ளைக்காரன் பார்வையில் காந்தியே தீவிரவாதிதான். அவரவர் பார்வையில்தான் எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. என் பார்வையில் பிரபாகரன் என்னுடைய இனக் காவலர். வீரப்பன் எங்களுடைய வனக் காவலர். வருகிற ஆண்டுகளில் வீரப்பனுக்குக் கட்டாயம் குருபூஜை நடத்துவோம்” என்றார் உறுதியாக. 

- ஆ.விஜயானந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close