Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' உங்களுக்கு டெல்லிதான் சரியான சாய்ஸ்...!' -இளங்கோவனை மடைமாற்றிய ராகுல்

கில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து சந்தித்துள்ளனர் திருநாவுக்கரசரும் இளங்கோவனும். 'டெல்லி அரசியலில் கோலோச்சும் வகையில் இளங்கோவனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம்' என்கின்றனர் சத்யமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை டெல்லிக்கு வரவழைத்தார் ராகுல்காந்தி. 'சட்டமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் எட்டு எம்.எல்.ஏக்கள் கிடைத்ததற்கும் பாராட்டு கிடைக்கும்' என ஆவலோடு ஃபிளைட் ஏறினார் இளங்கோவன். ஆனால், அங்கு கிடைத்த வரவேற்பை இளங்கோவன் ரசிக்கவில்லை. ' தி.மு.கவுடன் சரியான முறையில் பேசி கூடுதல் தொகுதிகளை வாங்கவில்லை; வேட்பாளர் தேர்வில் சரியானபடி செயல்படவில்லை' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் ராகுல். ' இதற்கு மேலும் தலைவர் பொறுப்பில் நீடிப்பது சரியல்ல' என முடிவெடுத்து, ராஜினாமா கடிதத்தை சோனியாவுக்கும் ராகுல்காந்திக்கும் அனுப்பினார். இதற்குப் பின்னரும் புதிய தலைவர் நியமிக்கப்படுவதில் மிகப் பெரிய இழுபறி நீடித்தது. ஒருவழியாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் திருநாவுக்கரசர். கட்சித் தலைவர்களை சந்திப்பது; ராகுல்காந்தியை அப்போலோவுக்கு வரவழைத்தது; காவிரிக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது என சுறுசுறுப்பாக வலம் வருகிறார். ஆனால், எந்தக் கூட்டத்துக்கும் செல்லாமல் அமைதியாக இருந்து வந்தார் இளங்கோவன். இந்தநிலையில், டெல்லியில் இரண்டு தலைவர்களும் முகாமிட்டிருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ' இளங்கோவன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது பற்றி ராகுல்காந்தியிடம் குறை சொல்லி இருக்கலாம்' என்ற ரீதியிலும் செய்திகள் பரவின. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " டெல்லிக்கு இளங்கோவனை வரவழைத்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. தமிழக அரசியலில் அவருடைய பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. உடல்நலமில்லாமல் இருந்தபோதும், சட்டமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரசாரம் செய்தார். அவருக்கு எதிராகக் கோஷ்டித் தலைவர்கள், தலைமையின் கவனத்துக்குப் புகார்களைக் கொண்டு சென்றனர். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. முன்பு அ.தி.மு.கவுக்கு எதிராக கடுமையான பிரசாரம் செய்தார். தற்போது அப்போலோவுக்கு ராகுல் வந்துவிட்டுச் சென்ற பிறகு, நிலைமை மாறிவிட்டது. இளங்கோவனும் அப்போலோ சென்று பார்த்தார். அதே தேதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ' கட்சி போராட்டத்தில் பங்கேற்காமல், அப்போலோ சென்றது சரிதானா?' என்ற சர்ச்சையும் எழுந்தது. 

ஆனால், போராட்டத்தில் பங்கேற்குமாறு இளங்கோவனிடம் திருநாவுக்கரசர் கேட்டபோது, ' எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. மௌனமாகவே இருக்க விரும்புகிறேன்' எனச் சொல்லிவிட்டார். இதைப் பற்றியெல்லாம் மேலிடத்தின் கவனத்துக்குத் தகவல்கள் சென்றன. ' மாநில அரசியலில் இளங்கோவன் மிக முக்கியமானவர். அவரை அப்படியே வைத்திருக்க வேண்டாம்' என ராகுல்காந்தி முடிவு செய்தார். இதன்பின்னர், சோனியாவிடம் கலந்தாலோசித்துவிட்டு, ' காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் பதவியை இளங்கோவனுக்கு வழங்கலாம். இதன்மூலம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் கோஷ்டிப் பூசலை சரிசெய்ய முடியும். மாநிலத் தலைமையோடு இளங்கோவன் அனுசரித்துச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும்' என முடிவு செய்தார் ராகுல் காந்தி. இதையடுத்து, இளங்கோவனை நேரில் வரவழைத்தார். அப்போது முகுல் வாஸ்னிக்கும் உடன் இருந்தார். சந்திப்பு குறித்து எங்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்., ' மிகுந்த உற்சாகத்தோடு என்னை வரவேற்றார் ராகுல். முந்தைய மன வருத்தங்கள் எதையும் அவர் காட்டவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையான உற்சாகத்தை உணர்கிறேன்' என நெகிழ்ந்தார். திருநாவுக்கரசர் முன்பு வகித்த அகில இந்தியச் செயலாளர் பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்துக்கு ஈ.வி.கே.எஸ் நியமிக்கப்பட இருக்கிறார்" என்றார் விரிவாக. 

இளங்கோவனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், " அப்படி வழங்கப்பட்டால் மிகுந்த சந்தோஷம்" எனப் பதில் அளித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை, தன்னுடைய அதிரடியால் நிலை நிறுத்தினார் ஈ.வி.கே.எஸ். டெல்லி அவரை எப்படி வரவேற்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம். 

- ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ