Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரி பிரச்னை இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை என்ன செய்திருக்கிறது தெரியுமா...?

காவிரிப் பிரச்சனை காரணமாக, தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே  சில வாரங்களுக்கு முன் வன்முறை வெடித்தது. சிலர் அராஜகத்தில் ஈடுபட்டு, தாக்குதல்களை நடத்தினர். இரு மாநிலங்களிலும் பரஸ்பரம் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.  பல பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது விவசாயிகளுக்கான  தண்ணீர் பிரச்சினை என்பதைத் தாண்டி, தமிழர்களும், கர்நாடக மாநிலத்தினரும் ஏதோ இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த பகையாளிகளைப் போல நடந்து கொண்டனர். இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் இரு மாதங்களுக்கும் மேல் பேருந்துகள் இயக்கப்படாத நிலையும் நீடித்தது.

இதனால் இரு மாநிலத்திற்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், அண்மையில் நவராத்திரி, தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகைக்கு தேவையான கொலு பொம்மைகளை, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர், தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள கொலு பொம்மை தயாரிக்கும் வியாபாரிகளிடம் ஆர்டர் செய்திருந்தனர். ஆனால், காவிரிப் பிரச்சினையால் எழுந்த போக்குவரத்து பாதிப்பால்,  பேருந்துகள் இயக்கப்படாததால், கொலு பொம்மைகளை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்ப முடியவில்லை என்று தர்மபுரி வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. அதியமான் கோட்டையில் கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் உள்ள இந்திராணி என்பவரைச் சந்தித்து நாம் பேசினோம்.

உங்கள் தொழில் பற்றி கூறுங்கள்?

"இந்த தொழில் எங்களோட  வம்சாவளி  தொழிலாகும். என்னோட கணவர் காலத்திலிருந்தே செஞ்சிக்கிட்டு இருக்கோம். இப்ப என்னோட கணவர் இல்ல. அவர் இறந்துட்டாரு. ஆனாலும் நான் இப்பவும் கொலு பொம்மை செய்யும் தொழிலை செஞ்சிக்கிட்டுதான் வர்றோம்".

எத்தனை வருடங்களாக இந்த தொழிலை நீங்கள் செய்து வருகிறீர்கள்?

"40 வருசமா இந்த தொழில நாங்க செஞ்சிக்கிட்டு  வர்றோம். நான், என்னுடைய பிள்ளைகள் என அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். எங்களோட தலைமுறை இந்த தொழில தொடர்ந்து செஞ்சிக்கிட்டு தான் இருக்கும்".

எந்த மாதிரியான, எந்தெந்த விதமான பொம்மைகளை நீங்கள் செய்வீர்கள்?

"70 வகையான பல்வேறு ரகங்களிலான கொலு பொம்மைகளை நாங்க செய்யறோம். பல காவியப் பொம்மைகளையும் செய்யறோம். எல்லா விசேஷங்களுக்கும் தேவையான பொம்மைகளையும் செய்யறோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கறோம். .எங்களோட பாரம்பரிய தொழிலே இதுதான்".

மக்களிடம் தற்போது வரவேற்பு எப்படி உள்ளது?

"இப்பல்லாம் இந்த மாதிரி  கைவினைத் தொழில்முறை கொஞ்சம் கொஞ்சமா  அழிஞ்சிகிட்டே வருது. இது நம்மளோட அடையாளம் ஆனா இப்போதெல்லாம் மக்கள் இதற்கு வரவேற்பு தருவதில்லை. எல்லாரும் நாகரிகம்ன்னு சொல்லிட்டு  பிளாஸ்டிக் பொம்மைங்கள தான் அதிகம்  வாங்குறாங்க, ஆனா, பிளாஸ்டிக்க பயன்படுத்தக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இந்த தொழில் நல்லா இருக்கணும்னா, மக்கள் எங்களுக்கு ஆதரவா இருக்கணும்".

காவிரி பிரச்சினையால் உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன?

"ஒவ்வொரு வருசமும் நவராத்திரி, தசரா பண்டிகைக்கு கேரளா, கர்நாடகாவில இருந்து எங்ககிட்ட தான்  வந்து பொம்மைகள ஆர்டர் செய்வாங்க. நாங்க தான் பொம்மைங்கள  செஞ்சி  கொடுப்போம்.

15 வருசமா கர்நாடக மாநிலத்திற்கு பொம்மைகள கொடுத்துகிட்டு வர்றோம். இந்த வருசமும் எங்ககிட்டதான் ஆர்டர் பண்ணிட்டு போனாங்க. ஆனா, இந்த காவிரி தண்ணிப் பிரச்சினை வந்ததால வண்டி எதுவும் கர்நாடகாவுக்கு போகல. அதனால பொம்மைங்கள அனுப்ப முடியாமை தேங்கிடுச்சு. அவங்களுக்கு போன் பண்ணிக் கேட்டாலும் 'நாங்க என்னம்மா பன்றது? வண்டிங்க எதுவும் தமிழ்நாட்டுகுள்ள விட மாட்டேங்கிறாங்க', அப்படின்னு சொல்லிட்டாங்க. நாங்களும் பாக்கற வரைக்கும் பாத்தோம். ஒண்ணும் பண்ண முடியல. அதனால பொம்மங்கள மூட்டக்கட்டி, எல்லாத்தையும் தூக்கி குடோன்ல போட்டுட்டோம்.  ஆயிரக்கணக்கான ரூபா எங்களுக்கு நஷ்டம் ஆயிருச்சு".

உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை  உள்ளதா?

"நாங்க செய்யற இந்த தொழில் பாத்தீங்கனா எங்களோட பாரம்பரிய தொழில். இன்னைக்கு எல்லாமே விலை  ஏறிப்போச்சு. பெயிண்ட் விலை  உள்பட எல்லா விலையும் அதிகமாயிருச்சு. இதனால எங்களால, இந்த தொழில லாபகரமா பண்ண முடியல. எங்களால பரம்பரை தொழில விட்டுட்டு வேற தொழிலும் செய்ய முடியாது. வேற தொழிலும் எங்களுக்குத் தெரியாது. பொம்மையோட விலைய சொன்னாவே 'என்னாங்க சின்ன பொம்மைக்கே இந்த விலை சொல்றீங்க', அப்படின்னு ஜனங்க  யாரும் வாங்க முன்வர மாட்டேங்கிறாங்க. எங்களோட கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும். தொழிலே  ரொம்ப நஷ்டமா போயிட்டிருக்கு, சொல்லப்போனா  இந்த தொழிலயே விட்டுறலாம்னு தோணுது. ரொம்பவே கஷ்டமா இருக்கு".

உங்களின் நஷ்டத்தில் இருந்து மீள ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

"இது வரைக்கும் செஞ்ச பொம்மைங்க எல்லாமே நஷ்டம் தான். செஞ்சிட்டிருந்த பொம்மைங்களோட வேலையையும்  பாதிலேயே நிறுத்திட்டோம். நஷ்டத்துக்கு நாங்க என்ன பண்ண முடியும்? அரசாங்கம் தான் பார்த்து  ஏதாவது பண்ணனும். எல்லாருக்கும் உதவி செய்யற அரசாங்கம் எங்களுக்கும் உதவி செய்யணும்ங்கறதுதான் எங்களோட கோரிக்கை" என்று புலம்புகிறார் இந்திராணி.

உலகில் எத்தனயோ தொழில்கள் இருந்தாலும் கைவினைத் தொழில் என்பது, அழகுடன் தொடர்புடைய ஒரு தொழிலாகும். நம்முடைய பாரம்பரிய அடையாளமாகத் திகழும் இந்தத் தொழில், பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்களால் ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளது. இது போன்ற கலைத் தொழிலில் கைதேர்ந்தவர்கள், அக்காலத்தில் செருக்குடன் வீறுநடைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு நம்முடைய பாரம்பரிய தொழில்கள் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருப்பதைத் தடுப்பதுடன், அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதுபோன்ற பாரம்பரியத் தொழிலுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கி, இதுபோன்ற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும், வேண்டுகோளாகவும் உள்ளது.

மா.விஜய் சூர்யா,
(மாணவப் பத்திரிகையாளர்)
 

எடிட்டர் சாய்ஸ்