Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலையாளிக்கு உதவினாரா இன்ஸ்பெக்டர்? கதிகலங்கிய கோவில்பட்டி 

சாத்தூரில் ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பசாமியின் வழக்கில் திடீர் திருப்பமாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், கோவையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஜனனிபிரியா என்ற  பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது கவிதா கர்ப்பமாக உள்ளார். கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த கருப்பசாமி, மீண்டும் ஊருக்குச் செல்ல அக்டோபர் 12-ம் தேதி அரசு விரைவு பஸ்சில் சென்றார். விருதுநகர் நான்குவழிச்சாலை சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி விலக்கு அருகில் வந்தபோது பஸ்சுக்குள் இருந்த கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக சாத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

"கோவில்பட்டி செண்பகா தெருவைச் சேர்ந்தவர் முகமதுரபீக். இவரது மகன் அப்துல்லா. இவர், திருச்செந்தூரில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கோவில்பட்டியில் உள்ள ஒரு பெண்ணை விரும்பியதாகத் தெரிகிறது. அதே பெண்ணை கருப்பசாமியின் அண்ணனும் விரும்பியுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் அப்துல்லா கடந்த 2.7.2016-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருப்பசாமியின் அண்ணன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்குப் பழிக்குப்பழியாகவே கருப்பசாமி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கருப்பசாமி கொலையில் போலீஸாரின் சந்தேகப்பார்வை அப்துல்லாவின் அப்பா முகமதுரபீக் மீது விழுந்தது. முகமதுரபீக், தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய ஆதரவாளர். அவர் பதவியில் இருந்தவரை மதுரையில் சி.டி. தொழிலில் கொடிக்கட்டி பறந்தார். பிறகு, மதுரையிலிருந்து கோவில்பட்டி வந்துள்ளார். இங்கிருந்து கொண்டே மும்பை வரை தன்னுடைய சி.டி தொழிலில் தனி சாம்ராஜியத்தை ஏற்படுத்தினார். அப்துல்லாவை இழந்து முகமதுரபீக் கடந்த 3 மாதங்களாக தனிமரமாக தவித்து வந்தார்.

தற்போது கருப்பசாமி கொலை செய்யப்பட்ட பிறகு முகமதுரபீக், மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அப்போது, அவர், கருப்பசாமியை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து  கொலை நடந்த  இடத்திலிருந்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் முகமதுரபீக்கும், ஒருவரும் அங்கு வருகின்றனர். அந்த நபர், கருப்பசாமி பயணித்த பஸ்சில் ஏறுகிறார். இதன்பிறகே துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால் முகமதுரபீக், கருப்பசாமி பயணித்த பஸ்சில் செல்லவில்லை. இதனால் கூலிப்படை மூலம் இந்த கொலை நடந்திருக்கிறது என்ற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர்.

இதற்கிடையில் முகமதுரபீக்வுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், முகமதுரபீக்குக்கு பல ஆலோசனைகளை வழங்கியதோடு, போனிலும் பேசியுள்ளனர். இந்த தகவல் வெளியானதும் இருவரும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மகனின் மரணத்துக்காக பழிக்குப்பழி வாங்கிய முகமது ரபீக்கிடம் விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த வழக்கில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.

கருப்பசாமி குடும்பத்தினர் அனைவரும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள். இதனால் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்திருந்தனர். அப்துல்லா கொலைக்குப் பிறகு சொந்த ஊரை விட்டுக் கோவைக்கு கருப்பசாமி சென்றார். கருப்பசாமியை துப்பாக்கியால் சுட்டது யார்? என்ற விவரம் மட்டும் போலீஸாருக்கு தெரியாமல் உள்ளது. இதனால் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட இருக்கன்குடியிலிருந்து ஒரு பெண்ணையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண்ணுக்கும், முகமதுரபீக்குக்கும் நெருங்கிய பழக்கம் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கொலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படை ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருப்பசாமியின் குடும்பம் அ.தி.மு.க.வின் அனுதாபி என்கிறார்கள். இதனால் கட்சி ரீதியாகவும் இந்த கொலை நடந்ததா என்று போலீஸார் விசாரித்தனர். அந்த விசாரணை அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை. இதனால் அப்துல்லா கொலைக்காகவே கருப்பசாமியின் கொலை நடந்துள்ளதாக போலீஸார் முடிவு செய்து அந்தக் கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீஸாரின் சந்தேகப்பிடியில் 13 பேர் உள்ளனர். அவர்களில் 5 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

முகமதுரபீக் குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முகமதுரபீக் சி.டி தொழில் செய்து வருகிறார். திருட்டு சி.டி. தொடர்பாக இவர் மீது 28 வழக்குகள் உள்ளன. புதுப்படம் வெளியானதும் அடுத்த நிமிடமே அதன் காப்பி இவருக்கு வந்துவிடும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படும். கோவில்பட்டிக்கு வரும் காவல்துறை அதிகாரிகள் எல்லோரிடமும் முகமதுரபீக் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். இதனால் அவர் மீது எளிதில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இந்தச் சூழ்நிலையில் முகமதுரபீக்கின் மூன்று மகன்களில் இரண்டு பேர் கோவில்பட்டியில் பல்வேறு பிரச்னைகளில் சிக்குகின்றனர். அப்துல்லா கொலை செய்யப்பட மற்றவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்கின்றனர். சமீபத்தில் மும்பைக்கு ஒரு மகன் செல்கிறார். அங்கிருந்துதான் துப்பாக்கி வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. தற்போது முகமதுரபீக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

முகமதுரபீக்கை காப்பாற்ற அனைத்து முயற்சிகளிலும் போலீஸ் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதுகூட அவரது பாதுகாப்புக்காகத்தான். கருப்பசாமி மற்றும் அவரது அண்ணன்களுக்கு முகமதுரபீக் தரப்பு ஸ்கெட்ச் போட்டது. ஆனால் கருப்பசாமி மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்காகதான் இந்த கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். இந்த தகவல் எல்லாம் போலீசுக்கும் தெரிந்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கருப்பசாமி கொலை நடந்ததும் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூட பேரம் பேசப்பட்டுள்ளது. இதனால் கடுப்பாகிப்போன அந்த அதிகாரி, உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். கருப்பசாமியை கொலை செய்ய சிறையிலிருந்து கூட ரவுடி ஒருவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அடுத்த அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு போலீஸார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நமது நிருபர்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ