Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவை எதற்குச் சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்?! -ஓர் ஆச்சரிய பின்னணி 

மிழக அரசியலில் 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்பதே வேறு கண்ணோட்டத்தில்தான் கவனிக்கப்படுகிறது. இன்று திருமாவளவனை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்ததும்,  'கூட்டணி' என்றெல்லாம் தகவல் பரவியது. ' இந்த சந்திப்பின் மூலம் சில விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால், அரசியல் தொடர்பாக எதுவும் இல்லை' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில். 

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு திடீரென வருகை தந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, அக்குபஞ்சர் மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார் திருமாவளவன். மத்திய அமைச்சர் வருகை குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட, உடனடியாக அலுவலகம் வந்தார் திருமாவளவன். 'இதே தெருவில் எங்கள் கட்சி நிர்வாகி ஒருவரின் வீடு கிரகப் பிரவேச நிகழ்ச்சிக்காக வந்தேன். உங்கள் அலுவலகம் இங்குதான் என்று சொன்னார்கள். அதனால் சந்திக்க வந்தேன்' எனப் பேசியிருக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். அவரை வழியனுப்ப வந்தபோது பேசிய திருமா, ' இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே' எனக் கூறினார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "அரசியல் நிமித்தமான சந்திப்பு இல்லையென்றாலும், திருமாவைத் தேடி வந்ததற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, முதல் ஆளாகச் சென்று முதல்வரை சந்தித்தார் திருமா. இதன்பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்தனர். ' தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவர்கள் வந்து செல்வது சட்டவிரோதமானது. எந்தவகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க வந்தார்கள். மத்திய அரசு வலுக்கட்டாயமாக எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பியிருக்கிறது என்றே தெரிய வருகிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பலவித சந்தேகங்களை எழுப்புகிறது' என பா.ஜ.க அரசை விமர்சித்துப் பேசியிருந்தார் திருமா. 

'இந்தக் கருத்து அநாகரீகமானது' எனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இதன்பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகையைப் பற்றி விமர்சித்தது தொடர்பாக, பொன். ராதாகிருஷ்ணனிடம் அறிக்கை கேட்டது மத்திய அரசு. அவரும், அது தொடர்பாக எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார். 'எங்கள் கட்சியின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது' என விளக்கமும் அளித்தோம். இதன்பிறகு, அவரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், திருமாவுக்கு எதிராக கடுமையாகப் பேசிவிட்டதாக, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார் பொன். ராதாகிருஷ்ணன். இதற்காக நேரில் சந்தித்துப் பேசுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இன்றைக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தது. திருமாவுடன் நட்பு பாராட்டவே அவர் வந்தார்" என்றார் விரிவாக. 

இதுகுறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், 'காவிரி விவகாரம் குறித்துப் பேசினோம்' என்கிறார். பொன்.ராதாகிருஷ்ணனோ, ' கூட்டணி குறித்தெல்லாம் பேசுவதற்கு வரவில்லை. நட்புரீதியான சந்திப்பு மட்டுமே' என விளக்கம் அளித்தார். வழக்கம்போல, ' பா.ஜ.க முகாமுக்குச் செல்கிறதா வி.சி.க' என்ற விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

- ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ