Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மீண்டும் தலை தூக்கிய டெங்கு பீதி': அரசு செய்ய வேண்டியது என்ன?

           

டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சல் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் 3 பேரும்,காசநோய் உள்ளிட்ட பிரச்னையில் சிகிச்சையில் இருந்த சிறுமி ஒருவரும் திடீர் மரணமடைந்ததால்,தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பீதி நிலவுகிறது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் லட்சுமி நகர் கண்ணகி தெருவைச் சேர்ந்த முகமது இத்ரீஸின் மகள் பாகிமா,மகன் முகமது ஆகிய இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். முதல் கட்டமாக இருவரையும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு தொடர் மருத்துவம் பார்த்தும் காய்ச்சல் குறையாததால், மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் இருவரையும் சேர்ந்துள்ளார் இத்ரீஸ்.

ஆனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும்,பாஹிமாவும்,முகமதுவும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளான பெற்றோர் அழுது அரற்றியது மருத்துவமனை வளாகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. அதே போல மதுரவாயல் ஆரோக்கியசாமி மகள் லட்சிதாவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சில நாட்களாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி லட்சிதாவும் உயிரிழந்தார். மேலும்,காசநோய் உள்ளிட்ட பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த திருத்தணி கீர்த்தனா என்ற சிறுமியும் உயிரிழந்தார். நான்குபேருமே 11 வயதைக் கூட தாண்டாத பிஞ்சுகள்.

இந்நிலையில், இறந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை,மர்மக் காய்ச்சலால்தான் குழந்தைகள் இறந்துள்ளனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு இந்த நேரத்தில் டெங்கு குறித்த மர்மத்தை மக்களுக்கு விளக்கி உண்மை நிலையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

       

உண்மையில் டெங்கு விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம். அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் இறப்பதை, மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. டெங்குவால்தான் மரணம் நிகழ்கிறது என்று அரசு கூறினால் தான் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். எனவே இதை அரசு உடனே செய்யணும். அதையடுத்துப் பொதுவாக,பொருளாதார நலன் பாதிக்கும், வர்த்தகம் பாதிக்கும், வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கும், டூரிஸம் பாதிக்கும் என்பதால்தான் அரசு டெங்குவை மறைக்கிறது. அதனால் அதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கு. அதே சமயத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இதான் இப்போது அவசியம்.தேவையில்லாமல் பொய் சொல்லணும் என்று அவசியம் இல்லை.

டெங்கு தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பிரச்னை அல்ல. சர்வதேச பிரச்னை இது. உலக அளவில் கிட்டத்தட்ட 140 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருக்கிறது. அதனால் இதனை சர்வதேச நிகழ்வாகத்தான் பார்க்கணும். எனவே, டெங்குவைக் கட்டுப்படுத்த புதுமையான முறைகளைக் கையாளணும். கொசு ஒழிப்பில் தீவிரமாகச் செயல்பட காலிப்பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும். கொசு ஒழிப்பை முழுமையாகச் செயல்படுத்த அதற்கான பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். வீடுவீடாகச் சென்று கொசுக்களை ஒழிப்பதில் ஈடுபடவேண்டும். அனைத்து மக்களுக்கும் கொசு ஒழிப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். திரையரங்குகள், செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

கொசு ஒழிப்பில் வழி காட்டும் சீனா!

கொசுக்களை ஒழிப்பதில் சீனாவும்,அமெரிக்காவும் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கின்றன. சீனாவில் எடுத்துக்கொண்டால், கொசுஒழிப்பை மரபியல் மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் மூலமாக மேற்கொள்கிறது அந்நாட்டு அரசு. சீனாவில், மரபியல் மாற்றம் மூலம் உருவாக்கப்பட்ட ஆண் கொசுக்களை, மற்ற கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பரப்புகிறார்கள். அப்போது நடக்கும் இனச்சேர்க்கை மூலமாக பெண்கொசுக்கள் மலட்டுக் கொசுக்களாக உருவாகின்றன. இதனால் புதியதாக கொசுக்கள் உருவாகாமல் இனவிருத்தி வெகுவாகக் குறைகிறது. கொசு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

அதே போல அமெரிக்காவிலும் செய்கிறார்கள். நியூயார்க் சிட்டி பக்கத்தில் உள்ள ஒரு பகுதியில், ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு தலை சிறுத்த குழந்தை பிறந்தது. அதனால் அங்கே கொசுஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. புதிய வகை மருந்துகளை தெளித்து கொசுக்களைக் கட்டுப்படுத்தினார்கள். கொசுவின் வளர்ச்சிப் பருவத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் கொசு வளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கான புதிய மருந்தை பெல்லட் குண்டுகள் வடிவத்தில், ஹெலிகாப்டர் மூலமாக தூவினார்கள். இவற்றையெல்லாம் பரிசீலித்து தமிழ்நாட்டில் கொசு ஒழிப்பை அரசு தீவிரப்படுத்தவேண்டும்.

      

பிரான்சில் டெங்குவுக்கான தடுப்பூசி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்தத் தடுப்பூசியை பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மெக்சிகோ என்று பல நாடுகளில் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. 9 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழேயும் உள்ளவர்களுக்கு டெங்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுபோன்ற தடுப்பூசி முறையையும் இந்தியாவில் நடைமுறைப்படத்த வேண்டும். இந்தியாவிலும், டெங்குவுக்கு தடுப்பூசியை நவீன் கண்ணா என்ற டாக்டர் கண்டுபிடித்துள்ளார். அதனை வெளிக்கொண்டுவர மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில், டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும் தேவியான மருத்துவ வசதி செய்யவேண்டும். இந்தியாவில் ஜி.டி.பியில் 6 விழுக்காடு அளவு நிதியை மத்திய அரசு மருத்துவ திட்டங்களுக்காக செலவழிக்க வேண்டும். ஏன் எனில், இப்போது ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு ஹெல்த் இன்சூரன்ஸ் பெயரில் தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிடுகிறது. கடந்த 6 வருடத்தில் தமிழ்நாட்டில், 2600 கோடி ரூபாய் பெரிய அளவிலான தனியார் மருத்துவமனைக்கு போயுள்ளது. இந்தப் பணத்தில் நிறைய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், புதிய மருத்துவமனைகள் கொண்டு வந்திருக்கலாம்.

மக்கள் செய்யவேண்டிய அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்கும் சூழல் தவிர்க்கப்படவேண்டும். பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்தால் அதனை மூடிவைக்கவேண்டும். ஆட்டு உரல், கொட்டாங்கச்சி இவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதே போல, நெடுஞ்சாலையோரங்களில் கிடக்கும் சிமெண்ட் கிராப்புகள் மூலமும் கொசுக்கள் அதிகம் உருவாகிறது. ஏன் எனில், அவற்றில் மழைநீர் அதிகம் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவற்றில்தான் கொசுக்கள் அதிகம் உருவாகின்றன. இதனை பெரிய நிறுவனங்கள் தான் அகற்ற முன்வரவேண்டும். சென்னையில் அம்பத்தூர், கிண்டி இங்கெல்லாம் சிமெண்ட் கிராப்புகள் அதிகம் உள்ளன.

கொசுக்கள் நம்மை கடிக்காத வண்ணம் முழுக்கை சட்டை, முழுக்கால் சட்டை அணிய வேண்டும். வியர்வை இல்லாத ஆடைகளை அணிய வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு வேளை குளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டெங்குவை கட்டுப்படுத்த அரசு மிகுந்த விழிப்போடு செயல்படவேண்டிய தருணம் இது. அப்போதுதான் அப்பாவிக் குழந்தைகள் முதியவர்கள் இறப்பது கட்டுக்குள் வரும்.

- சி.தேவராஜன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ