Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யூ ஜி சி தேர்வில் மதிப்பெண்கள் அள்ள சில ஐடியா!

யுஜிசியின் தேசிய தகுதித்தேர்வில் நிறைய மதிப்பெண் பெற்று ஆராய்ச்சி பணி மேற்கொண்டால் ஐந்து வருடத்திற்கு மாதம் மாதம் 25,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். இதைத்தவிர, தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் உதவிபேராசிரியர் பணிக்கு தேர்வாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், அறிவியல் மற்றும் கலை பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு இந்த தேர்வு மிக முக்கியமான தேர்வு. நீங்கள் இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற உங்களுக்கு சில டிப்ஸ்கள்

முதலில் விண்ணப்பிக்கவும்:

நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெறும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடப்பதற்கு பதிலாக அடுத்த ஆண்டு ஜனவரி 22 தேதி நடைபெறுகிறது. அடுத்த மாதம் நவம்பர் 16ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஆகையால் முதலில் மறக்காமல் விண்ணப்பித்து விடவும்.

தேர்வு முறை எளிமையானது. பயம் வேண்டாம்:

2011- ஆம் ஆண்டு வரை மூன்று தாள்களைக் கொண்ட தேர்வில் இரண்டு தாள்கள் கட்டுரை வடிவில் பதிலளிக்க வேண்டும் என்று இருந்தது. 2012 - ஆம் ஆண்டு முதல் சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதும் முறைக்கு மாறி இருக்கிறது. ஆகையால் சிரமம் இல்லாமல் இத்தேர்வினை எதிர்க்கொள்ளலாம். நான்கு விடையில் சரியான முறையினை தேர்ந்தெடுத்தாலேயே வெற்றி தான்.

முதல் தாளில் கவனம் வேண்டும்:

பொதுவாக நெட் எக்ஸாம் எழுதும் பலரும் முதல் தாளில் தேர்ச்சி பெறுவதில்லை. இதற்கு காரணம் முதல் தாளில் எந்த பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கிறார்கள் என்பதை பலரும் அறியாமல் தேர்வு எழுத செல்வது தான். முதல் தாளில் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, கற்பித்தலில் கணினி பயன்பாடு, சுற்றுச்சூழல், உயர்கல்வி குறித்தும், பகுத்தறிவு சோதிப்பது சார்ந்த பிரிவுகளில் இருந்து 60 கேள்விகள் கேட்கப்படும். இதில் இருந்து 50 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மதிப்பெண்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது தாள் என்பது உங்களுடைய பாடத்தினை அடிப்படையாக கொண்ட கேள்விகள் இருக்கும். முதல் இரண்டு தாள்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மூன்றாவது தாளில் மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.

நுட்பத்தை பயன்படுத்துங்கள்:

கேள்விக்கு நான்கு விடையில் இருந்து சரியான விடையினை தேர்ந்தெடுக்கும் முறை தான் என்றாலும் நான்கு விடைகளையும் ஒரே மாதிரி கொடுத்திருப்பார்கள். இதில் உங்களுடைய மதி நுட்பத்தை பயன்படுத்தி சரியானதை தேர்ந்தெடுக்க வகையில் கேள்வியினை அமைத்திருப்பார்கள். ஒரு முறை கேள்வியை படித்தவுடன் உடனடியாக விடையினை தேர்ந்தெடுக்காமல் ஒன்றிரண்டு முறை படித்து பார்த்து உங்களுடைய மதிநுட்பத்தை பயன்படுத்தி சரியான விடையினை தேர்ந்தெடுக்கவும். காலமும் மிகவும் முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

தர்க்கம் - காரணத்தில் கவனம் செலுத்தவும்:

நெட் தேர்வில் தர்க்கம் சரி காரணம் சரி; தர்க்கம் சரி காரணம் தவறு என்ற வகையில் அதிகளவில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த தர்க்கம் காரணம் கேள்விகளை புரிந்து எழுத வேண்டும்.

கல்லூரி குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்:

கல்லூரியில் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, பாடப்புத்தகத்தை படிக்கும் போதும் குறிப்பெடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பீர்கள். அவ்வாறு குறிப்பெடுத்த நோட்ஸ்களை நெட் தேர்வுக்கு தயாராகும் போது ஒரு முறை திருப்பி பாருங்கள். இவ்வாறு திருப்பி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு நிறைய மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

பதில் எந்த வரிசையில் உள்ளது என்பது அவசியமில்லை:

பலரும் படிக்கும் போது பதில் எந்த வரிசையில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்வார்கள். ஆனால், ஒரு கேள்விக்கு என்ன பதில் என்பது தான் முக்கியமே தவிர, பதில் எந்த வரிசையில் இருக்கிறது என்பது முக்கியமல்ல. பரிட்சையில் அதே வரிசையில் பதில்கள் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்:

இன்றைக்கு சந்தையில் நெட் தேர்வுக்கு வினா விடை வடிவில் பல புத்தகங்கள் வந்து விட்டன. இந்த புத்தகங்களை நீங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தலாமே தவிர அதனை மட்டும் முதன்மையான புத்தகங்களாக கருதி படிக்கக்கூடாது. நீங்கள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது பயன்படுத்தப்படும் புத்தகங்களை ஆழ்ந்து படிக்கவும். வினா விடை புத்தகங்களை உங்களது பயிற்சிக்கு பயன்படுத்தவும்.

ஆன்லைனை பயன்படுத்தவும்:

இணையத்தில் நெட் சார்ந்த பல பயிற்சி தேர்வுகளை வைத்திருக்கிறார்கள். அதனை நேரம் கிடைக்கும் போது பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். இதைப்போலவே யுஜிசி இணையத்தளத்திலும் கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளின் கேள்வித்தாள்களை வைத்திருக்கிறார்கள். அதனை டவுன்லோடு செய்தும் பயிற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது மதிப்பெண்கள் உயரும்.

காலத்தை ஒதுக்குங்கள்:

நெட் தேர்வுக்கு மூன்று முதல் ஆறு மாதம் படித்து வந்தாலேயே தேர்ச்சி பெற்று விட முடியும். ஏற்கனவே முதுநிலை படிப்பை முடித்தவர்கள், வேலையில் இருப்பவர்கள் தினமும் ஒன்றிரண்டு மணி நேரம் ஒதுக்கி படிக்கவும். இப்போது பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நெட் தேர்வுக்கு என்று இலவச பயிற்சி வழங்குகிறார்கள். இந்த பயிற்சியிலும் கலந்துக்கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். கல்லூரியில் மூன்றாவது செமஸ்டர் அல்லது நான்காவது செமஸ்டர் படிப்பவர்கள் இந்த தேர்வை எழுதும் போது எளிதில் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள் என்பதால் கல்லூரியில் பணி செய்பவர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு இந்த தேர்வு குறித்த தகவலை சொல்லி தேர்வு எழுத வைக்கவும்.

நீங்கள் தயாராக இருக்கும் போது தேர்வு எளிதானது தான் என்பதை நினைவில் கொள்ளவும். நெட் தேர்வில் வெற்றி பெற்று விரிவுரையாளர் ஆகவும், உதவி தொகையுடன் ஆராய்ச்சி பணி செய்வதற்கும் ஆல் த பெஸ்ட்!

- ஞா. சக்திவேல் முருகன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close