Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்

இரண்டு நாட்களில் 9 பேர் பலி. தீபாவளி நெருங்கும் நேரத்தில், கோரமாக ஏற்படும் பட்டாசு விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் 90% பட்டாசு சந்தை தமிழகத்திடம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிவகாசியில் உள்ளது.

சீனாவின் லீயுவாங் நகரத்திற்கு பிறகு சிவகாசியில் தான் பட்டாசு தயாரிப்பு உலக அளவில் அதிகம் நடக்கிறது. ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும், இத்துறையில் இன்னும் உயிரிழப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறன. பட்டாசு தயாரிப்பில் கிடைக்கும் வருவாயை மட்டும் பெற்றுக் கொள்ளும் அரசு, இத்தொழிலை சீர் செய்ய எந்த அக்கறை காட்ட மறுக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக்த்தின் தகவல்படி 2005 - 2014 வரையிலான காலத்தில் சிவகாசி மற்றும் தமிழகத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 197 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 411 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் வறுமை நிலையில் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். சொற்ப வருமானத்துக்காக தங்கள் உயிரை தீக்கு கொடுத்தவர்கள். பட்டாசு தயாரிப்பின் போது ஏற்படும் விபத்துகள் ஒருவகை எனில், பட்டாசு கிடங்குகளிலும், விற்பனை நிலையங்களிலும் ஏற்பட்டு வரும் விபத்துகள் தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளன. கிடங்குகளும் விற்பனை நிலையங்களும் குடியிருப்பு பகுதிகளில் இருப்பதால் சிறிய‌ தீப்பொறி கூட பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடக் கூடும். 2008-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட வெடி பொருள் வழிமுறை சட்டத்தில், பட்டாசு உற்பத்தி முதல் விற்பனை வரை செய்ய வேண்டிய வழிமுறைகள் அக்குவேறு ஆணிவேறாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பட்டாசு கிடங்கு மற்றும் விற்பனை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கூறுவது….. - சேமிப்பு கிடங்குகளில் 5000 கிலோ வரை மட்டுமே பட்டாசுகளை சேமிக்க அனுமதிக்கப்படும். பட்டாசு கடைகள் கற்களாலான கான்க்ரீட் கட்டிடங்களில் தான் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக கடைகள் கீழ் தளத்தில், தனியாக அமைந்திருக்க வேண்டும்.

 

பட்டாசு கடை அமைந்திருக்கும் கட்டிடம் குடியிருப்புகள் கொண்டதாக இருக்கக் கூடாது. - கடைகளுக்கு என தனி நுழைவு வாயில் மற்றும் அவசர கால வாயிலும் நிச்சயம் இருக்க வேண்டும். - தீயணைப்பு முயற்சிகளுக்கு ஏதுவாக இட வசதி இருக்க வேண்டும். - 9-25 சதுர மீட்டர் அளவுக்குள் கடை இருக்க வேண்டும். - தீபாவளி சமயத்தில் வழங்கப்படும் தற்காலிக விற்பனை நிலையங்களுக்கும் தனி வழிமுறைகள் உண்டு. - தீப்பற்ற‌ முடியாத பொருளாலான தற்காலிக கூரைகளைக் கொண்டு பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். ஆனால் பல இடங்களில், இந்த கடைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளிலோ, ஓலைகளிலோ அமைத்திருப்பதையும் நம்மால் காண முடிகிறது. - பட்டாசு வைக்கப்பட்டு இருக்கும் கிடங்குகளும், விற்பனை நிலையங்களும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். - குறிப்பிட்ட பகுதியில் 50 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். - எண்ணெய், காஸ் விளக்குகளுக்கு தடை. - மின் விளக்குகள் மற்றும் ஸ்விட்ச் போர்டுகள் சுவற்றில் உறுதியாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜங்ஷன் பாக்ஸ் வைத்து வையர்களை நீட்டிக்கவோ, தொங்கவிடவோ கூடாது.

 

கடைகளில் பட்டாசு வைத்திருக்கும் இடத்தில், வாடிக்கையாளர்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. தீப்பிடிக்க முடியாத அளவுக்கு மரப்பெட்டியில் அல்லது அதற்கு ஈடான பொருளிலோ பட்டாசு பேக்கேஜ் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த வழிமுறைதான் மிகவும் முக்கியம். நாம் பெரும்பாலும் காணும் தற்காலிக பட்டாசு கடைகளில், மர ஷெல்ப்களில் பட்டாசுகள் அடுக்கப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இது முற்றிலும் ஆபத்தானது. பட்டாசுகளை இவ்வாறு காட்சிப்படுத்த தடை உள்ளது.  தற்காலிக கடைகளில் தினமும் விற்பனை போக, மீதம் இருக்கும் பட்டாசுகள், சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். மறு நாளே மீண்டும் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும். இப்படி ஏகப்பட்ட வரையறைகள் பட்டாசு விற்பனைக்கு உள்ளது. இவற்றை பின்பற்றினாலே 90 சதவிகித விபத்துகளை தவிர்த்துவிட முடியும். நீங்கள் பட்டாசு வாங்கும் போது, இதில் எத்தனை வழி முறைகள் பின்பற்றப்பட்டு இருக்கிறதென்று கவனித்துப் பாருங்கள். அப்போது தெரியும். உங்கள் வீட்டின் அருகே எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறதென்று.

ஒவ்வொரு தீபாவளி சமயத்திலும் தீயணைப்பு வாகனங்களை தயாராக வைத்திருப்பதாக அரசு அறிக்கை விடுகிறது. அதற்கு பாராட்டுகள். வந்த பின் தீயாக வேலை செய்வதைவிட, தீவிர கண்காணிப்பு செய்து வருமுன் காப்பதற்கு அரசு அக்கறை காட்டுவதே முக்கியத் தேவை.

ரெ.சு.வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ