Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்.ஐ அருமைநாயகத்தின் அதிர்ச்சி பக்கங்கள்! ராமுவின் டைரி

 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய பெண் கான்ஸ்டபிள் ராமு, தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னுடைய சாவுக்கு அருமைநாயகம் உள்பட 5 நபர்களின் பெயரை எழுதி வைத்துள்ளார். இந்த டைரியில் உள்ள விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். இவர், கடந்த 9ம் தேதி விஷம் குடித்து 10ம் தேதி இறந்தார். இவரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஆலங்குளத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அருமைநாயகத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 இதற்கிடையில் தன்னை காப்பாற்றுமாறு ராமுவிடம் அருமைநாயகம் போனில் பேசிய உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன்பு ராமு எழுதி வைத்த டைரி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் ராமு, தன் சாவுக்கு காரணமாணவர்கள் என அருமைநாயகம் உள்பட 5 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த ‘5 பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க' என்று எழுதியுள்ளார்.  இந்த டைரியில் ராமு, தன்னுடைய சாவுக்கு காரணமானவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தாலும் அருமைநாயகத்தைத் தவிர மற்ற யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 இதுகுறித்து ஆதிதமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கலைகண்ணன் கூறுகையில், "ராமு எழுதிய டைரியில் அருமைநாயகம், அவரது மனைவி சுமதி, அருமைநாயகத்திற்கு நெருக்கமான பானுமதி, ஏ.டி.எஸ்.பி உதயகுமார், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர்தான் என்னுடைய சாவுக்கு காரணம் என்று எழுதியிருக்கிறார். அந்த டைரியில் உள்ள மற்ற  வரிகளும் அவர் எந்தளவுக்கு மனவேதனையில் இருந்தததை வெளிகாட்டுகிறது. இதன்பிறகும் அருமைநாயகத்தை தவிர மற்றவர்கள் மீது  போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே எங்களுடைய கேள்வி. எனவே ராமுவை தற்கொலைக்கு தூண்டியதாக மற்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராமு வழக்கில் அருமைநாயகத்தின் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், கற்பழிப்பு என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ராமு தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அருமைநாயகத்தின் மீது ராமு கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்ததால் அவரை கைது செய்துள்ளோம். அருமைநாயகத்தின் மனைவி சுமதி, அவருக்கு நெருக்கமான பானுமதி மீது ராமு தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கான ஆதாரம் கிடைத்தவுடன் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் ராமு தரப்பு குற்றம் சாட்டுகிறது. அதுதொடர்பாகவும் துறைரீதியாக விசாரணை நடத்தப்படும். ராமு வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்"என்றனர்.

'போலீஸ் உயரதிகாரிகள்தான் இந்த வழக்கை இந்தளவுக்கு கொண்டு வந்து விட்டனர். ஆரம்பத்திலேயே ராமுவிடம் சுமூகமாக பேசி இருந்தால் வழக்கு எப்போதோ முடிந்திருக்கும்' என்று விசாரணையின் போது அருமைநாயகம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக தகவலும் வெளியாகி இருக்கிறது. ராமுவிடம் நெருங்கிப் பழகிய அருமைநாயகத்தால் ஓட்டுமொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள் போலீஸார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ராமு வழக்கு சாதி ரீதியாக திசைதிருப்பப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் சட்டத்தின்முன் அனைவரும் சமம். அருமைநாயகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இருந்ததால் அவரை கைது செய்துள்ளோம். இதுபோல மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும்"என்றார்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ