Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்துக்கு வந்த 'நெக்ஸ், டிஸ்லி, ஆஃபிர்': யார் இவர்கள் தெரியுமா?

இந்தியாவில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்க 16 மோப்பநாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு 3 மோப்பநாய்கள் வந்துள்ளது. இவைகள் மூலம் இனிமேல் தமிழக காடுகளும், வனவிலங்குகளும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் வனத்துறையினர்.

 இந்தியாவில் வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சந்தனமர கடத்தல் வீரப்பன் முதல் வனங்களை அழிக்கும் கும்பல்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நிரந்தர தீர்வு காணமுடியவில்லை. மேலும், வனங்களிலிருந்து கொள்ளையடிக்கப்படும் விலை உயர்ந்த மரங்கள், யானை தந்தங்கள், விலங்குகளின் தோல்கள் கண்டறிவதிலும் சிக்கல்கள் இருந்தன. இதனால் வனத்துறையை வலுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது.


 இந்தியாவில் உள்ள புலிகள் காப்பகங்களின் அடர்ந்த காடுகளைக் காப்பாற்ற வனத்துறையில் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டது. சமீபத்தில் 16 மோப்ப நாய்கள் புலிகள் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு மூன்று மோப்ப நாய்கள் வந்துள்ளன. அதற்கு 'நெக்ஸ்', 'டிஸ்லி', 'ஆஃபிர்' என்று பெயரிடப்பட்டுள்ளன. இவைகள் தற்போது தமிழக காடுகளை பாதுகாக்க  களமிறங்கியுள்ளன.

 இதுகுறித்து வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு வனத்துறையினருக்கு மோப்பநாய் பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது 6 மாநிலங்களுக்கு மோப்ப நாய்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக தற்போது தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மோப்ப நாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு ஜெர்மன் ஷெப்பர்டு என்ற ஒன்றே முக்கால் வயதுள்ள ஆண் நாய் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு 'நெக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து ஆணைமலைக்கு  ஒன்றரை வயதுள்ள பெண் நாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'டிஸ்லி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஒன்றரை வயதுள்ள பெல்ஜியம் ஷெப்பர்டு நாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஆஃபர்' என்று பெயரிட்டுள்ளோம். தமிழகத்தில் சத்யமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மட்டும் மோப்ப நாய் வழங்கப்படவில்லை. இதன்மூலம் இனி தமிழகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்படும். அதோடு வனங்களை அழிப்பவர்களையும் எளிதில் கண்டறியலாம்.

 

கேரளா வனத்துறைக்கு ஜூலி, பெல்வின் என்ற இரண்டு மோப்பநாய்களும், ஆந்திராவுக்கு டைகர், டோலியும், கர்நாடகாவுக்கு கியூப்பர், நேரோ, ஜாக்கியும், சட்டீஸ்கருக்கு நீரோ, சிம்பாவும், மத்தியபிரதேசத்துக்கு ஹர்வல், நிர்மான், டில்லியும், மேற்கு வங்காளத்துக்கு ராணி உள்பட 16 மோப்பநாய்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோப்ப நாய்களுக்கும் ஒரு பயிற்சியாளரும், உதவி பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 நாய்களுக்குத் தினமும் 680 கிராம் இறைச்சியும், 480 கிராம் அரிசி மற்றும் கோதுமையும், ஒரு லிட்டர் 180 மி.லி பாலும், இரண்டு முட்டையும், 30 கிராம் நாய் பிஸ்கட்டுகளும், 230 கிராம் கீரையும் உணவாக வழங்கப்படும். பயிற்சி இல்லாத ஓய்வு நேரங்களில் உணவு வகைகள் குறைத்து வழங்கப்படும். குற்றவாளிகளை கண்டறிய கடந்த பிப்ரவரி முதல் அக்டோபர் என 9 மாதங்கள் மத்தியபிரதேசம் குவாலியரில் உள்ள தேசிய மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது ஒரு நாய்க்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது" என்றார்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ