Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயிருக்குப் போராடிய யானை 'அம்மா' ஆனது... மகிழ்ச்சி!

கோவை : கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் யானை, இன்று ஆண் குட்டியை ஈன்றது. உயிருக்கு போராடிய பெண் யானை உயிர் பிழைத்ததோடு, அது குட்டியை பிரசவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை பெரிய தடாகம் சிட்டப்பெருக்கி பள்ளம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்கோளாறு காரணமாக கடந்த 19-ம் தேதி மயங்கியது. தகவல் அறிந்து யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். யானைக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர். இரு நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கிரேன் மூலம் எழுப்பி நிறுத்தப்பட்ட யானை மெதுவாக நடக்கத்துவங்கியது. வனத்தை நோக்கி யானை மெதுவாக செல்ல யானை குணமடைந்ததாக மகிழ்ந்தனர். இந்நிலையில் அந்த யானை மீண்டும் கீழே விழுந்தது. இதையடுத்து மீண்டும் சிகிச்சையை துவங்கியது வனத்துறை.

ஒரு நாளுக்கு பின்னர் சாடிவயல் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு கடந்த இரு தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த யானை இன்று அழகிய ஆண் குட்டியை ஈன்றது. தாய் யானையும், குட்டி யானையும் நலமுடன் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறையினரிடம் பேசினோம். "தாய் யானை கர்ப்பமாக இருந்தது முதல் நாளிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சை தான் கொடுக்கப்பட்டு வந்தது. தேவையில்லாத டென்ஷனை தவிர்க்கவே அந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. மிகவும் பாதுகாப்பாக இரண்டு பெல்ட் அமைத்து யானையை சாடிவயல் முகாமுக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, இரு உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. குட்டி நல்ல நிலையில் உள்ளது," என்றனர்.

 

 

 

அடுத்தடுத்த யானைகள் இறப்புக்கிடையே கர்ப்பம் தரித்த யானை காப்பாற்றப்பட்டு, ஆண் குட்டியை பிரசவித்து, தாயும், குட்டியும் நலமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் வன உயிரின ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : தி.விஜய்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close