Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருது குடும்பத்தின் 3 கோரிக்கைகள்...!- இன்று மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்ட நாள்

1801-ம் ஆண்டு இதே அக்டோபர் 24-ம் நாள் சிவகங்கை திருப்பத்தூரின் மையப்பகுதியில் துாக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர் அந்த சகோதரர்கள். துாக்குக் கயிற்றை மாட்ட வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.

தாங்கள் கட்டியாண்ட சிவங்கைச் சீமை மண்ணிலே கைதியாக நின்ற மருது சகோதரர்கள் “ எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நான் என் நாட்டைக் காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால் என் உயிரோடு எதற்காக, இந்த சின்னஞ்சிறு உயிர்களையும் சேர்த்து பறிக்கின்றீர்கள்?... இந்த சிறுவர்களா உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள் என்று நினைக்கீன்றீர்கள்? எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்” என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதட்டமும் இல்லாம் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய மருது சகோதரர்கள்தான் அவர்கள். அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்று ஐநுாறு பேரையும் துாக்கில் ஏற்றினார்கள் ஆங்கிலேயர்கள்.

மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். மருது சகோதரர்கள், சிவகங்கையை ஆண்டது குறைந்த காலம் தான். அவர்கள் மன்னர்களாக சிவகங்கையை ஆளவில்லை. இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதியின் மகளான வேலுநாச்சியார், சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கு மனைவியானதும், தனது மகளின் சாம்ராஜ்யத்துக்கு, பாதுகாவலர்களாக கிழவன் சேதுபதியால் அனுப்பட்டவர்கள் தான் பெரிய மருதுவும், சின்னமருதுவும். இவர்கள் பிறந்த ஊர் இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி. தந்தை மொக்க பழனியப்பன், சேதுபதி மன்னரிடம் தளபதியாக இருந்தார். அந்த வீரத்தின் விளைநிலங்களாக இவர்கள் இருந்ததை பார்த்த சேதுபதிதான் வேலுநாச்சியாருடன் மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்.

மிகச்சிறந்த போர்வீரர்களாகவும், வாள்வீச்சிலும் சகோதரர்கள் இருவரும் வல்லவர்களாக விளங்கியதைப் பார்த்த வேலுநாச்சியார், சின்ன மருதுவிடம் போர்க்கலையை கற்றறிந்தார் என்கிறது வரலாறு. 1772-ம் ஆண்டு காளையார் கோவிலில் நள்ளிரவில் சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை ஆங்கிலேயப் படையும், நவாப்பின் படையும் சதித்தீட்டம் தீட்டி கொலை செய்கிறது. சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப் படைகள் முற்றுகையிட்டன. கொல்லங்குடியில் இருந்த அரசி வேலுநாச்சியாரை பெரிய மருதுவும், சின்ன மருதுவும் காப்பாற்றி திண்டுக்கல் அருகே விருப்பாட்சி என்ற இடத்தில் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் கொண்டு சேர்க்கின்றனர். பின்னர் சிவகங்கை சீமைக்கு திரும்பிய மருது சகோதரர்கள் மக்களோடு, மக்களாக வாழ்ந்து கொண்டே ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில்தான் தென் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த பாளையக்காரர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டனர்.

அந்த தொடர்புதான் ஊமைத்துறைக்கும், சின்னமருதுவையும் நெருங்கிய நண்பர்களாக்கியது. காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779-ல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780-ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. வேலுநாச்சியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது.

திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவுக்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். அதன் பிறகு தான் வேலுநாச்சியார் தன் மண்ணை மீட்ட மருது சகோதர்களை தனக்கு பின் இந்த நாட்டின் அரசப் பிரதநிதிகளாக இருப்பார்கள் என்றார். சிறிது காலத்தில் வேலுநாச்சியாரின் மறைவைத் தொடர்ந்து சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் ஆளுகையின்கீழ் வந்தது. அவர் ஆட்சியில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்துக்கு இணையாக கோபுரம் கட்ட ஆசைப்பட்டு காளையார்கோவில் கோபுரத்தை கட்டி எழுப்பினார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து மருது சகோதரர்கள் போராடி வந்தார்கள். சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்களில் சில மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்த பாளையக்காரர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தனர் மருது சகோதரர்கள். திருவரங்கம் கோவிலிலும், திருச்சி மலைக்கோட்டையிலும் ஜம்புத் தீவு பிரகடனம் என்னும் துண்டறிக்கையை துணிவோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சின்ன மருது ஒட்டினார். அதில் “ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை போக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர்” என்று கடுமையாக விமர்சித்தார். இது ஆங்கிலேயர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

சிறிய பாளையக்காரர்கள் நமக்கு எதிராக இவ்வளவு துணிச்சலோடு செயல்பட்டால், நமக்கு ஆதரவாக இருக்கும் பிற பாளையக்காரர்களுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டுவிடும்,அதனால் சிவகங்கைச் சீமையை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என ஆங்கிலேய அதிகாரிகள் முடிவு செய்து, சிவகங்கைச் சீமையை நோக்கி படைகளை அனுப்பினார்கள். உடையத்தேவன் என்ற உளவாளி கொடுத்த உளவுப்படி ஆங்கில படை, மங்கலம் என்னும் ஊரின் அருகே மருது சகோதரர்களை சுற்றிவளைத்தனர். மருது சகோரதர்களைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் ஒரு உபாயம் செய்தார்கள்.

அதன்படி மருதுசகோதரர்கள் சரணடையவில்லையென்றால் காளையார்கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என அறிவிப்பு செய்தார்கள். தாங்கள் ஆசை ஆசையாக கட்டி எழுப்பிய கோவில் கோபுரம் இடிபடுவதை விரும்பாத மருதுசகோதரர்கள் சரணடைய முன்வந்தனர்.

மருது பாண்டியர்கள் குடும்பத்தார்களும் கைது செய்யப்பட்டு திருப்பத்துார் அழைத்துவரப்பட்டு அங்கு அனைவரும் துாக்கிலிடப்பட்டனர். சின்ன மருதுவின் மூன்றாவது மகன் துரைசாமியை மட்டும், 1802-ல் மலேசிய நாட்டுக்கு நாடு கடத்தினார்கள். 1818-ல் மலேசியா சென்ற அன்றைய ஆங்கில ராணுவ அதிகாரி வேல்ஷ் மருதுவின் மகன் துரைசாமியை நேரில் பார்த்துள்ளார். அவர் எழுதிய 'எனது நினைவுகள்' நுாலில் “ இளைஞனாக இருக்கவேண்டிய துரைசாமியை மெலிந்த மேனியோடு, முதிர்ந்த தோற்றத்தில் நான் பார்த்தேன்.

அதை பார்த்தபோது என் இதயத்தில் கத்தி சொருகியதுபோல இருந்தது. அப்போது துரைசாமி என்னிடம், 'எங்கள் நாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களை அழித்துவிடாதீர்கள், பெண்கள் குழந்தைகளை துன்புறுத்தாதீர்கள், எங்கள் நாட்டைவிட்டு சீக்கிரம் வெளியேறுங்கள் என 3 கோரிக்கைகளை முன்வைத்தார். அவற்றில் ஒன்றைக்கூட  நிறைவேற்றும் அதிகாரம் என்னிடம் இல்லாமல் இருந்துவிட்டது” என்று வருத்தப்பட்டு  அந்த நுாலில் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்தியாவில் நடைபெற்ற போர்களை வீரம் செறிந்த வரலாறாக காட்டி வரலாற்று ஆய்வாளர்கள், அதற்கு முன்பே வீரம் செறிந்த மறவர்கள் வாழ்க்கை வரலாற்றை வசதியாக மறைத்துவிட்டனர். இன்றும் திருப்பத்துார் பேருந்து நிலையத்துக்கு எதிரே மருது சகோதரர்கள் வீழ்ந்த இடத்தை நாம் காணலாம்.

சிவகங்கைச் சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்கள்தான் இந்த சகோதரர்கள். தமிழ் மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும்!


- அ.சையது அபுதாஹிர்

படம்; சாய் தர்மராஜ்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close